
இகேபனா என்பது ஜப்பானியரின் மலர் அலங்காரத்திற்கான சொல்!
ஆனால் இது ஏதோ மலர்களை அலங்கரிப்பதைக் குறிக்கும் சொல் மட்டும் அல்ல! இது அழகிய பண்பாட்டைக் குறிக்கும் சொல்.
ஜென் பிரிவைச் சார்ந்த பல உயரிய குணங்களைக் குறிக்கும் சொல் இது. மனத்தெளிவு, சமச்சீர் தன்மை, நடைமுறை வாழ்க்கையில் எளிமை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் இகேபனா!
ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் நிகழ்காலத்தில் வாழ்ந்து ஒவ்வொரு மலரையும் அதன் வர்ணத்தையும் அனுபவித்து அதை உரிய இடத்தில் உரிய முறைப்படி வைப்பதுதான் இகேபனா!
இது வெறும் அழகைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல; வாழ்க்கையில் உள்ள அழகைச் சுட்டிக்காட்டி எங்கும் ஒரு இனிய லயத்தை ஏற்படுத்தும் அனுபவம் இது. அதிகமாகச் சிந்தித்து சிந்தித்து ஓய்ந்து போவோர்களுக்கு ஆறுதல் தரும் கலை இது. படைப்பாற்றலை மேம்படுத்தும் பண்பு இது. பலவித மனோநோய்களையும் தீர்த்து வைக்கும் மலர் சிகிச்சை இது.
முற்காலத்தில் ஆலயங்களில் செய்யப்பட்டு வந்த இகேபனா இன்று ஒவ்வொரு ஜப்பானியரின் வீட்டிலும் இடம் பெற்று அவர்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருகிறது.
இகேபனா என்ற ஜப்பானிய வார்த்தைக்கு ‘உயிருள்ள மலர்கள்’ என்று பொருள்.
ஏழாம் நூற்றாண்டில் சைனாவிலிருந்து புத்தமதம் ஜப்பானுக்கு வந்தது. புத்தரின் உருவச்சிலைக்கு முன்பு மலர்களை வைக்கும் பழக்கமும் கூடவே வந்தது. ஹையான் வமிசத்தினர் (HEIAN) எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்டபோது மலர்களுடன் ஒரு கவிதையையும் இணைத்து அனுப்பும் ஒரு பழக்கம் ஏற்பட்டது.
வண்ண வண்ண மலர்களை அலங்காரமாக வைப்பதிலும் பல வகை உண்டு.ரிக்கா என்ற முறை சொர்க்கத்தின் அழகைச் சித்தரிப்பதாகும். வானுலகைப் பூவுலகில் காட்டும் ரிக்காவில் ஒன்பது நிலைகள் காண்பிக்கப்படும்.
ஷின் – ஆன்மீக மலை
உகே : பெறுதல்
ஹைகே : காத்திருத்தல்
ஷோ ஷின் – நீர்வீழ்ச்சி
சோ – துணையாக இருக்கும் கிளை
நகாஷி – நீரோடை
மிகோஷி – மேலிருந்து பார்த்தல்
டோ – உடல்
மே ஒகி – உடலின் முன் பாகம்
இந்த அனைத்தையும் மனதில் கொண்டு மலரை அலங்காரமாக வைப்பது ரிக்கா. செய்க்கா என்பது இஷ்டப்படி அழகுற வண்ண மலர்களை அலங்கரிப்பதாகும். மோரிபனா என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் மலர் அலங்காரத்தைப் பார்க்க வைப்பதாகும்.
இன்றோ இன்னும் அதிகமதிகம் ஸ்டைல்கள் இதில் ஏற்பட்டுவிட்டன!
எப்படி செடிகளை வளைத்து வைப்பது, எப்படி கத்தரிக்கோலை வைத்து உரிய இடத்தில் இரண்டாக கிளையை வெட்டிக் காண்பிப்பது – இவையெல்லாம் இகேபனாவில் இன்றைய முன்னேற்றங்களாகும்.
ஒவ்வொரு மலரின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டு அந்த மலரின் ஆற்றலைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு அதன் உயிரோட்டமான யின் மற்றும் யாங் ஆற்றலை அதனதன் முறைப்படி வைக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் வீட்டில் அமைதி நிலவும்; மனதில் ஒரு நிம்மதி ஏற்படும்; இல்லங்களில் வருவோர்க்கு உரிய மரியாதை தரப்பட்டதாக ஆகும்.
அது சரி, இந்த இகேபனா புத்தமதத்திற்கு மட்டும் சொந்தமானதா, என்ன? பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே இந்துப் பண்பாட்டில் மலர்கள் உயிரோட்டமான ஒரு பங்கைப் பெற்றன; அந்தஸ்தை அடைந்தது.
சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி என்று ஆரம்பித்தால் ஒரு கலைக்களஞ்சியமே, சாரி, ஒரு மலர்க் களஞ்சியமே உருவாகும்.
சிவபிரானுக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் : செங்கழுநீர், சரக்கொன்றை, கரு ஊமத்தை, வெள்ளெருக்கு.
செங்கழுநீர் சிவனின் சிரசிலும் அம்பிகை கையிலும் எப்போதும் உண்டு.
இந்த மலர்கள் பூஜைக்கு மட்டும் உதவுவது அல்ல; ஒவ்வொரு மலரும் வாழ்க்கை வளத்தைத் தருவதோடு ஒரு சிறப்பான அம்சத்தையும் நல்கும். இந்த அம்சத்தைப் புராணங்களும் இதிஹாஸங்களும் விளக்குகின்றன!
இத்தோடு புதுவை அரவிந்த அன்னை அவர்கள் ஒவ்வொரு மலருக்கும் உள்ள குணாதிசயங்களையும அது தரும் நலனையும் பெரிதாகப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். அன்னையை வழிபடுவோர் இந்த மலர்களை சமர்ப்பித்து வேண்டியதைப் பெறுகின்றனர் என்பது நடைமுறையில் உள்ள ஒரு ஆன்மீக அனுபவமாகும்.
வண்ண மலர் அலங்காரம் வாழ்க்கையை வண்ண மயமாக்கும் என்பதில் ஐயமில்லை!