
இயற்கை பற்றிய நுண்ணறிவு வளர்வதற்கு குழந்தைகளுக்கு இயற்கை சூழலில் உலாவுதல், தாவரங்கள், விலங்குகள், உயிரினங்களை வளர்த்தல், தோட்டப் பயிர் செய்தல், பூங்கா அமைத்தல் போன்றவற்றை காண்பித்தல் அதனால் பயன் உண்டா? அதனால் பயன்பட்டவர் என்ன சொல்கிறார் என்பதை இப்பதிவில் காண்போம்.
சிலருக்கு இயற்கை மீது எப்பொழுதும் ஆர்வம் இருக்கும். தோட்டத்திற்கு வரும் புதிய பறவைகளை கண்டு பிடிப்பது, ரோட்டில் நடமாடும் விலங்கினங்களை கவனிப்பது, ஊர்வன, சுற்றுப்புறச் சூழல், ஆறு, நதி, சமுத்திரம், கடல், குளம், போன்றவற்றை நேசிப்பதும், அவைகளை அடிக்கடி கண்டு களிக்க அந்த இடங்களுக்கு செல்வதும், அவர்களை வீட்டில் காணாது பெற்றோர் அங்கு சென்று அடிக்கடி விளையாடுவதை பார்த்து அழைத்து வருவதும் கிராமப்புறங்களில் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வு. அதில் உள்ள நுணுக்கமான அறிவியலை ஆராய்கின்ற சிறுவர்களும் எல்லா இடங்களிலும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் வளர்ந்து வருவதை காணமுடியும்.
இவர்கள் இயற்கைப் பிரியர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் இதற்கு உட்பட்டவர்கள் என்று கூறலாம். விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ் மரங்களுக்கு உயிரும், உணர்வும் உண்டு என நிரூபித்தவர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி கூறிய விஞ்ஞானி சார்லஸ் டார்வின், விலங்கினங்கள் மீது அன்பும், பரிவும், கருணையும் கொண்ட ஜேன் குடோல் போன்றவர்கள் இந்த நுண்ணறிவு உடைய நல்ல உதாரணமானவர்கள் ஆகும்.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு ஃபென்மேன் எழுதி இருந்தது என்னவென்றால், நான் சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன் கடற்கரையிலோ, பூங்காவிலோ, வயல்வெளியில், மலை அடிவாரங்களிலும் நடந்து செல்லும்போது இயற்கை வளங்களை விளக்கிக் கூறுவார். என்னையும் கேள்விகள் கேட்பார்.
உதாரணமாக மரங்களில், சாதாரண இடங்களில் உள்ள பொந்து, துவாரம், குழிகள் காணப்பட்டால் அந்த இடங்களில் எந்தப் பிராணி, எந்த மிருகம், எந்த பறவை இதை செய்திருக்கும் என்று சொல் என்று என்னை கேள்வி கேட்பார். அப்படி ஏன் செய்திருக்கும் போன்ற கேள்விகளை கேட்டு என் மூலமே பதிலை பெற்று எனக்கு விளக்கம் கூறுவார் .
என் சிறு பிராயத்திலேயே என் விஞ்ஞானப் பிரயாணம் இப்படித்தான் ஆரம்பித்தது. இயற்கை ரசிகனாக பல கேள்விகள் கேட்க, அப்பா எல்லாவற்றிற்கும் சரியான பதிலை அளித்து விடுவார். சில நேரங்களில் அவருக்கு சரியான பதில் சொல்லத் தெரியாது என்றாலும், சரியான பதிலை எனக்காக பல்வேறு புத்தகங்களைப் பார்த்து படித்து அறிந்துகொண்டு வந்து எனக்குக் கூறுவார். அந்த விளக்கங்கள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது என்று எழுதியிருந்தார்.
இன்னும் சில குழந்தைகளை பார்த்தால் வீட்டில் சாப்பாடு ஊட்டும் பொழுது ஜன்னலுக்கு வெளியில் பார்வைகளை விடுவார்கள். ஜன்னல் ஊடாக பார்த்து வைத்த விஷயங்களை தன் நண்பர்களிடமோ பெற்றோர் களிடமோ பகிர்ந்து கொள்ளும்போது அது ஒரு கதைபோல ஆகிவிடும். அப்படி பார்க்கும் காட்சிகளைக் கொண்டே அவர்களுக்கு இயற்கையின் மீது ஆர்வத்தை வர வைக்கலாம். அந்த வனப்பும் இயற்கை தத்துவத்தில் தேர்ச்சி பெறச் செய்யும் என்று ஹவார்ட் கார்டனர் கூறுகிறார்.
ஆதலால் குழந்தைகளுக்கு இயற்கை மீது பிரியம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இது குழந்தைகளில் இயற்கையாகவே அமைந்துள்ள ஆர்வமாகும். அதை முறைப்படி பெற்றோர்கள் வழி நடத்தினால் நல்ல சாதனையை குழந்தைகள் பெறமுடியும் என்பதற்கு மேலே கூறிய விஞ்ஞானிகள் சாட்சி.