
நாம் ரசிக்கும் வளர்ப்பு செல்லப் பிராணிகளில் கடல்வாழ் உயிரினமான மீன்களும் அடங்கும். வண்ண வண்ண மீன்களை தொட்டிகளில் விட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை காட்சிப் பொருளாகக் கண்டு மகிழ்வோம். இந்த மீன்களின் நாக்கை சாப்பிடும் ஒட்டுண்ணிகள் பற்றி கேள்விப்படும் தகவல்கள் ஆச்சரியத்தைத் தருகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சைமோத்தோயா எக்ஸிகுவா (Cymothoa exigua) எனப்படும் ஒட்டுண்ணிதான் அது. சைமோத்தோயா எக்ஸிகுவா என்பது ஒரு வினோதமான கடல் ஒட்டுண்ணி. இதை கடல் பூச்சி என்று கூட கூறலாம். இது மீன்களின் செவுள் வழியாக நழுவி வாய்க்குள் வந்து நாக்கின் மேல் அமர்ந்து அந்த மீனின் இரத்தத்தை முழுவதுமாக உறிந்து நாக்கு காய்ந்ததும் அதையும் விடாமல் உண்டு அந்த இடத்திலேயே ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது.
இதன் காரணமாகவே இதை, ‘நாக்கு உண்ணும் ஒட்டுண்ணி’ என்றும் கூறுவார்கள். மீனின் நாக்குக்கு பதிலாக இந்த உயிரினம் ஒட்டிக்கொள்வதால் மீனின் செயல்களை இது கட்டுப்படுத்தும் என்கின்றனர். அதாவது, இந்த ஒட்டுண்ணி உண்டது போக மீதம் உணவுதான் அந்த மீனுக்கு.
இந்த சைமோத்தோயா எக்ஸிகுவா உலகின் கடல் பரப்பில் மிகவும் பரவலாக உள்ளது. இது கலிபோர்னியா வளைகுடாவிலிருந்து ஈக்வடாரின் குவாயாகில் வளைகுடாவின் தெற்கே, வடக்கே மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது 2 மீட்டர் (6 அடி 7 அங்குலம்) முதல் கிட்டத்தட்ட 60 மீட்டர் (200 அடி) ஆழம் வரையிலான நீரில் காணப்படுவதாக உயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எக்ஸிகுவாவின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி அதிகம் அறியப்படவில்லை எனினும், பாலியல் இனப்பெருக்கத்தை உள்ளடக்கியே இந்த ஒட்டுண்ணி வாழ்கிறது. இந்த இனம் நீர்நிலையில் வாழும் நிலையில் ஒரு இளம் உயிரினமாகத்தான் தனது பயணத்தைத் தொடங்குகிறது.
இளம் உயிரினங்கள் முதலில் ஒரு மீனின் செவுள்களுடன் இணைந்து ஆண் உயிரினங்களாக மாற வாய்ப்புள்ளதாகவும் அவை முதிர்ச்சியடையும்போது, அவை பெண் உயிரினங்களாக மாறுகிறது எனும் தகவல் ஆச்சரியம் தருகிறது. அதேநேரம் மீனின் செவுள்களில் இனச்சேர்க்கை நிகழவும் வாய்ப்புள்ளது என்றும் அறியப்படுகிறது.
சைமோத்தோவாவின் பல இனங்கள் அடையாளம் காணப்பட்டாலும் சைமோத்தோயிட் ஐசோபாட்கள் மட்டுமே ஹோஸ்டின் உறுப்புகளை உட்கொண்டு மாற்றுவதாக அறியப்படுகிறது. இந்த வழியில் மீன்களை ஒட்டுண்ணியாக மாற்றும் ஐசோபாட்களின் பிற இனங்கள் சி.போர்போனிகா மற்றும் செரடோதோவா இம்ப்ரிகேட்டா ஆகியவை குறிப்பிடப்படுகிறது.
சைமோத்தோவா எக்ஸிகுவா மீனின் நாக்கை உண்டாலும் மீனை உண்ணும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக நம்பப்படவில்லை என்பது ஆறுதல். இது பற்றிய தகவல்களை மேலும் அறிய உயிரியல் வல்லுநர்கள் ஆர்வமாக உள்ளனர்.