
ஒருசில மரப் பண்புகளை எளிதாகப் படித்து விட்டு விட்டு விடுவோம். அதை ஆழ்ந்து கவனித்து வீட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தத் தொடங்கும் பொழுதுதான் அதன் சிறப்புப் பண்புகள் நமக்குத் தெரிய வரும். அதுபோல் வில்வத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவப் பயன்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்!
இலை: வில்வ இலைக்கு வியர்வைப் பெருக்கி, காமம் பெருக்கி, வெப்பம் அகற்றி ஆகிய பண்புகள் உள்ளன. இலையுடன் நான்கு பங்கு நீர் சேர்த்து அது ஒரு பங்காக சுருங்கும் வரை காய்ச்சி வடித்த நீர் வயிற்றுக் கடுப்பு, மேக வாயு, ஜுரம் ஆகியவற்றை குணப்படுத்தும்.
வில்வ இலை சாறு எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்துக் கொடுக்க, சோகை, காமாலை ஆகியவை தீரும் என்றும், இச்சாற்றுடன் நீர் சேர்த்து குடித்தால் மூக்கில் நீர் வழிவதும் காய்ச்சலும் சரியாகும்.
ஜுரம், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பசுமையான இந்த இலைச்சாற்றை மலமிளக்கியாகக் கொடுக்கலாம். இதில் 'அஜிலன்' என்ற ஆல்கலாய்டு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இலையின் கஷாயம் கோழை அகற்றியாகவும் செயல்படும்.
இதன் இளந்தளிரை வாட்டி மெல்லிய துணியில் முடிந்து ஒத்தடம் கொடுத்தால் மேகத்தால் உண்டாகும் கண் சிவப்பு நீங்கும். காலரா நோயில் இருந்து தேறியவர்கள் துரிதமாக உடல் நலம் பெற இந்த இலை கஷாயம் உதவி புரிகிறது. இருதயத்தை சீராக செயல்படச் செய்யும் பண்பு இலையில் இருந்து வடித்தெடுக்கும் சாற்றில் உள்ளது.
பூக்கள்: வில்வ பூக்களை குடிநீரில் காய்ச்சி அல்லது உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் மந்தம் போகும்.
பிஞ்சு: வில்வபிஞ்சை அரைத்து எருமைத் தயிரில் கலந்து உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பு, குன்மம், சீத கழிச்சல் ஆகியவை நிற்கும்.
காய்: வில்வ காயினை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் ஆகியவை நீங்கி கண்கள் குளிர்ச்சி பெறும். வில்வ காயை வெட்டி வெயிலில் உலர்த்தி பொடித்து தினமும் இருமுறை உட்கொண்டால் சீதக் கழிச்சல், குருதிக் கழிச்சல் ஆகியவை நிற்கும். மூல நோய்க்கு இந்தக் காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீர் செய்து குடிக்கலாம்.
பழம்: வில்வ காய் பழுக்கத் துவங்கும் நிலையில் இருந்தால் அவற்றிற்கும் மருத்துவ திறன் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. முற்றிய கனிக்கு மணமூட்டி, துவர்ப்பி, குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி ஆகிய பண்புகள் உள்ளன. ஆனால், பழுக்கத் துவங்கும் காய்களுக்கோ துவர்ப்பி, பசியைத் தூண்டி, செரிப்புண்டாக்கி மற்றும் வைட்டமின் சி பற்றாக்குறை நீக்கி ஆகிய பண்புகள் உள்ளன.
வில்வ பழ தைலம் தயாரித்து தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், தலைவலி, உடல் அழல், மூளையைப் பற்றிய நோய் ஆகியவை நீங்கும். உடலுக்கு வன்மையும், அழகும் உண்டாகும். பழச்சத்தை முறைப்படி தயாரித்து உட்கொண்டால் குருதிப்போக்கு, கழிச்சல் வகைகள் ஆகியவை போகும். பழச்சதையை உலர்த்தி பொடி செய்தும் கழிச்சல் நோய்க்கு வழங்கலாம். மற்றபடி முறைப்படி மணப்பாகு செய்து உட்கொண்டால் குடலுக்கு வலிவைக் கொடுத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வில்வப்பழ சர்பத் நீண்ட நாள் மலச்சிக்கலையும் செரியாமையையும் போக்கும்.
வேர்: வில்வ வேருக்கு ஆண்மை பெருக்கித் திறன் உள்ளது. வில்வாதி லேகியம் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் லேகியமாகும். வில்வ வேருடன் இதர மருந்து சரக்குகளைச் சேர்த்து கஷாயம் தயாரித்து உட்கொண்டால் வாந்தியும் ஜுரமும் நீங்கும். வில்வ வேர்ப்பட்டை விட்டு விட்டு வரும் ஜுரத்தையும், இருதய படபடப்பையும் குணப்படுத்தும் திறன் உடையது. வேருக்கு அமீபியா கிருமிகளை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. இரத்தத்தின் குறைவு சர்க்கரை நிலையை சீர்செய்யும் திறனும் இதற்கு உண்டு. சுருக்கமாகக் கூறினால் வில்வத்தளிர் எல்லா வகை மேகத்தையும், பூவானது மந்தத்தையும், பிஞ்சானது குன்மத்தையும், பழம் கண் இருளையும் நீக்கும் திறனுடையது.