

விவசாயப் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பெருமளவிலான விளைநிலங்கள் கருகியும், பல நிலங்களில் விவசாயிகள் நடவு செய்ய முன்வராமலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். அதிகரித்து வரும் வெப்பநிலையும் விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் குறைந்த அளவு தண்ணீரை வைத்து விவசாயத்தை மேற்கொள்ள உதவும் சொட்டு நீர் பாசன முறை இன்றைய காலச் சூழலில் பிரதான விவசாய நடைமுறையாக மாறி வருகின்றது. முதன்மை குழாய், துணை குழாய் மற்றும் பக்கவாட்டு குழாய் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்குத் தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே கொண்டு செல்லும் நடைமுறைக்கு சொட்டுநீர் பாசன முறை என்று பெயர்.
இந்த சொட்டு நீர் பாசன முறையால் கூடுதலாக விரயமாகும் தண்ணீர் மிச்சம் ஆவதோடு விளைநிலங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. மேலும், பயிர்களுக்குத் தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருட்களை, பயிர்களின் வேர் பகுதியில் நேராக அளந்து அளிக்கப்படுகிறது.
இதனால் பயிர்கள் நீர் நெருக்கடியில் இருந்து தப்பித்து போதுமான வளர்ச்சி மற்றும் அதிக மகசூலைத் தருகின்றன. சொட்டு நீர் பாசனத்தின் மூலம் மகசூலை 150 சதவீதம் அதிகரிக்க முடியும். சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70 சதவீத நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்கள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும். விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு விவசாயிகளுக்குக் கிடைத்து விடும். உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவுகள் குறைக்கப்படும். நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
ஏற்ற, இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர் தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப்பாசனத்தின் கீழ் கொண்டு வந்து சாகுபடி செய்ய முடியும். இப்படி பல்வேறு நன்மைகளை தருவதால் சொட்டு நீர் பாசனம் வெற்றிகரமான விவசாய முறையாகக் கருதப்படுகிறது.
க.இப்ராகிம்