இந்தியாவில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் மனிதர்களாகிய நாமே வெப்பத்தைத் தாங்காமல் ஒருவழியாகி விடுவோம். அப்போ ஐந்தறிவு ஜீவன்களாகிய உயிரினங்கள் என்ன செய்யும்? சில உயிரினங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு தப்பித்துக்கொள்ள வழியைக் கற்றுக்கொள்ளும். ஆனால், ஒரு சில உயிரினங்கள் தங்களைக் காத்துக்கொள்ள மனிதர்களின் வாழ்விடத்தைக்கூட தேர்ந்தெடுக்கும். அந்தச் சூழ்நிலைகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்...
சில உயிரினங்களின் விசித்திரமான செயல்பாடுகள்:
பாம்புகள், பூச்சிகள் மற்றும் எலிகள் போன்ற பல உயிரினங்கள் கோடையில் மிகவும் துறுதுறுவாக இருக்கும். உதாரணமாக, பாம்புகள் வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான மற்றும் நிழலான பகுதிகளை நாடுகின்றன. பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள், தோட்டங்களில் நுழைகின்றன. எறும்புகள், கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் உணவு மற்றும் நீர் ஆதாரங்களைத் தேடும்போது அவற்றின் செயல்பாட்டை அதிகரித்து வீட்டின் உட்பகுதிகளில் வருவதைக் காணமுடியும். எலிகள் போன்ற நோய் பரப்பும் உயிரினங்களும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி உணவைத் தேட வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கான காரணங்கள்:
இந்தச் செயல்களுக்கான முதன்மைக் காரணம், கடுமையான வெப்பத்திலிருந்து தப்பித்து அவற்றின் பொருத்தமான வாழ்க்கைச் சூழலைக் கண்டறிவதே ஆகும். குறிப்பாக குளிர் ரத்தம் கொண்ட பாம்புகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த குளிர்ச்சியான சூழல்கள் தேவைப்படுகின்றன. பூச்சிகள் மற்றும் எலி போன்ற சிறிய உயிரினகள் உணவு, தண்ணீரின் பற்றாக்குறையால் அவை மனித வாழ்விடங்களில் இந்தத் தருணத்தில் தஞ்சம் அடைகின்றன.
இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்:
இந்த உயிரினங்களின் இவ்வகையான செயல்பாடு மனிதர்களுக்குப் பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள் அமைதியாக இருந்தாலும், நாம் அவற்றைக் கண்டவுடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே நமக்கு தீங்கை ஏற்படுத்தலாம். டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைப் பரப்புவதில் கொசுக்கள் பெயர் பெற்றவை. எலி போன்ற சிறிய உயிரினங்கள் உணவுப் பொருட்களை மாசுபடுத்தி லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis) போன்ற நோய்களைப் பரப்பக்கூடும். இறுதியில் இந்த உயிரினங்கள் ஒரு வீட்டில் இருக்கிறது என்று தெரிந்தாலே அது மனிதர்களுக்கு உளவியல் (psychological) துன்பத்தையும் ஏற்படுத்தும்.
இதற்கான தடுப்பு நடவடிக்கைகள்:
இந்த உயிரினங்கள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.
சுவர்கள் மற்றும் தரைகளில் விரிசல் மற்றும் பிளவுகளை அடைத்து பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்கள் வரக்கூடிய வாய்ப்புகளைத் தடுக்கலாம்.
ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் மெஷ் ஸ்கிரீன்களை (mesh screens) நிறுவினால் கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும், புதர்கள் இன்றியும் வைத்திருப்பதன் மூலம் பாம்புகள் மற்றும் எலிகளின் மறைவிடங்கள் உண்டாவதைத் தடுக்கலாம்.
கூடுதலாக, வேப்ப எண்ணெய் (neem oil) மற்றும் சிட்ரோனெல்லா (citronella) போன்ற இயற்கை விரட்டிகளை (repellents) பயன்படுத்தி பூச்சிகளைத் தடுக்கலாம்.
ஆக, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்பது போல் உயிரினகளும் நம்மைப்போல கோடையால் வரும் இன்னல்களில் இருந்து தப்பிக்கத்தான் இந்த வகையான செயல்களைச் செய்கின்றன.
இயற்கையின் ஆணைப்படி இவ்வுலகம் அனைவருக்கும் சமம் என்றாலும், வாழும் சூழ்நிலை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக இருந்தால்தான் அனைவருக்கும் நல்லது.