
நாம் அன்றாடம் செய்தித்தாளில் அல்லது மொபைலில் 'கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள், திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன' என்ற செய்திகளைப் படித்திருப்போம். இது எதனால் ஏற்படுகிறது? இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆகும்? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
நம்மிடம் இருந்து ஆரம்பமாகும் தவறு:
மனிதர்கள் தெரிஞ்சோ தெரியாமலோ கடல்களை குப்பை கொட்டும் இடமாக மாற்றிவிட்டனர். இன்றைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர, சிறிய அளவிலான பிளாஸ்டிக் (Microplastics) என்ற பெயரில் தொழில் துறையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் அதிக எண்ணிக்கையில் கடலில் கலக்கின்றன. இந்த ரசாயனக் கழிவுகள் கடல் உயிரினங்களால் உட்கொள்ளப்படுகின்றன. சிறிய துகள்கள், ரசாயனக் கழிவுகளை உட்கொள்ளும் மீன்களை நாம் உண்ணும்போது, இது, ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியில் (Food cycle), மனிதர்களையும் சேர்த்து, பெரிய பாதிப்பை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.
அதிக எண்ணிக்கையில் மீன்கள் பிடிப்பதும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. மீனவர்கள் உபயோகிக்கும் வலையில் அவர்கள் எதிர்பார்க்கும் மீன்களையும் சேர்த்து சில முக்கியமான கடல் உயிரினங்களையும் பாதித்து சுற்றுச்சூழல் (Biodiversity) சமநிலையைச் சீர்குலைக்கின்றன.
அதோடு எண்ணெய் கசிவுகள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீருக்கடியில் துளையிடுதலால் ஏற்படும் ஒலி, மாசு ஆகியவை கடல்வாழ் உயிரினங்களை மேலும் அழிக்கின்றன.
இப்போது இதன் தாக்கம் எந்த நிலையில் உள்ளது?
கடலின் காடுகள் என்று வர்ணிக்கப்படும் பவளப்பாறைகள் (Coral reefs) கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. இதனால் மீன்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. ஆமைகள், திமிங்கலங்கள் மற்றும் கடல் பறவைகள் போன்ற கடல் உயிரினங்கள், மனிதர்கள் உபயோகிக்கும் வலை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் இறந்து நொடிக்கு நொடி உலகம் முழுக்க கரை ஒதுங்கிக்கொண்டிருக்கின்றன.
கடலில் ஏற்படும் அமிலமயமாக்கல் (acidification) அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு கடலில் கலக்கச் செய்து, சில கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகளைப் பலவீனப்படுத்துகிறது.
மீன் நடத்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தி அதன் இனப்பெருக்கம் மற்றும் உணவு முறைகளைச் சீர்குலைக்கிறது. அதை உட்கொள்ளும் மனிதர்களின் ஆரோக்கியமும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, கடல் உணவுகளால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெருங்கடல் நமக்கு எவ்வளவு முக்கியம்?
மனிதர்களால் இப்படிப்பட்ட பல்வேறு தீங்கு விளைவிக்கும் தாக்கங்கள் இருந்தபோதிலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தடுப்பதில் கடல் ஒரு முக்கியப் போராளியாக உள்ளது. காரணம் மனிதனால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடில் (Carbon dioxide) 30% பெருங்கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் புவி வெப்பமடைதலை (Global warming) முடிந்தவரை குறைக்க முடிகிறது.
கடலில் உள்ள நுண்ணிய தாவரங்களான பைட்டோபிளாங்க்டன் (Phytoplankton) அதன் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) மூலம் உலகின் 50% ஆக்ஸிஜனை மனிதர்களுக்காக உற்பத்தி செய்கிறது.
சதுப்பு நிலங்கள், கடற்பாசிகள் மற்றும் உப்பு சதுப்பு நிலங்கள் போன்ற கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் கார்பனை உறிஞ்சுகின்றன.
நாம் நினைக்கும் நிலப்பரப்பு காடுகளைவிட, மிகவும் திறம்பட இந்தக் கடல்தான் கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்துகிறது. இப்படி மிச்சம் இருக்கும் இந்த ஆரோக்கியமான கடல் பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு, வருமானம் மற்றும் கடலோரப் பாதுகாப்பையும் இப்போதும் வழங்கிக்கொண்டிருக்கிறது.
ஆக, என்னதான் பல தீர்வுகளைக் கொண்டுவந்தாலும் இப்போது கடலில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்மறை தாக்கம் அவ்வளவு எளிதில் சரி ஆகாது. எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனாக இவ்வுலகில் வாழ நமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேபோல் இந்தக் கடல் உயிர்களுக்கும் உள்ளது என்று நினைத்து, மேலே குறிப்பிட்ட தீங்குகளை நாமும் செய்யாமல், மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுத்தாலே அடுத்தத் தலைமுறைக்கும் இவ்வுலகை வாழ உகந்ததாக விட்டுச் செல்லலாம்.