
காட்டில் அதிகமான மரங்கள், செடி கொடிகள் வளர்வதற்கு யானையின் சாணம் மிகப்பெரிய மூலங்களாக இருக்கின்றது. அது உண்ணும்போது கீழே சிந்தும் உணவுகளால் பல்வேறு சிறு பிராணிகள் உயிர் வாழ்கின்றன. அப்படிப்பட்ட யானையின் உணவுப் பழக்கத்தால் என்னென்ன நன்மைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஒரு அரசன் தன் மகளின் திருமணத்தை மிகவும் சீரும் சிறப்புமாக சீர் செனத்தியோடு செய்துவிட்டதாக பலரிடமும் கூறிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட மகள் கோபமாக நிறுத்துங்கப்பா. "பெரிய யானையை வாங்கி எனக்கு கொடுத்ததுபோல பெருசா செஞ்சுட்டதா சொல்றீங்க" என்று கூற, அரசன் அவரின் சேவகர்களை அழைத்து மகளின் வீட்டில் ஒரு யானையை வாங்கி கட்டி விட்டு வருமாறு கூறினார். அவர்களும் அப்படியே செய்தனர்.
மகள் தான் அடுத்த முறை அப்பாவை பார்க்கும் போது போதும்பா! எனக்கு ஒரு யானையை வாங்கி கொடுத்தாலும் கொடுத்தீர்கள். அதுக்கு தீனிப்போட்டு மாளவில்லை என்றுகூற, அரசர் சிரித்துக் கொண்டு அதனால்தான் உனக்கு சீர் செய்யும் பொழுது யானையைக் கொடுக்கவில்லை என்று கூறினார். இதிலிருந்து யானைக்கு தீனி தருவது அவ்வளவு சுலபமில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
யானைகள் தாவர உண்ணிகளாகும். ஒரு நாளில் 16 மணி நேரம் தாவரங்களை உண்ணுகின்றன. இடத்திற்கும், பருவ காலங்களுக்கும் ஏற்றவாறு இவற்றின் உணவுகளும் வேறுபடுகின்றன. பொதுவாக இலைகள், கிளைகள், பழங்கள் மற்றும் கொடி வகைகளை உண்டாலும், புற்களையும், மூலிகைச் செடிகளையும் கூட அதிகமாக உண்ணுகின்றன. (Eating habits of elephants) பிற அசைபோடாத மிருகங்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் யானைகள் தாங்கள் உண்ணும் உணவில் 40% தான் ஜீரணிக்கும். அதற்குக் காரணம் இவை உண்ணும் உணவின் அளவோடு ஒப்பிட, அவற்றின் உணவு மண்டலத்தின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமல் இருப்பதே ஆகும். நன்கு வளர்ச்சி அடைந்த யானை தினமும் 140 முதல் 270 கிலோ உணவை உட்கொள்கிறது.
யானைகள் சராசரியாக உறங்கும் நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகம். ஏனென்றால் பெரும்பாலான நேரத்தை உணவு உட்கொள்வதில் செலவழிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த குறைந்த நேரத்தூக்கம்.
யானைகள் ஆக்கிரமித்து இருக்கும் ஒரு பகுதியில் சுற்றுப்புறச் சூழலில் விரும்பக்கூடியதும் விரும்பத்தகாததுமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவை மரம், செடி, கொடிகளைத் தொடர்ந்து அழித்துக்கொண்டே இருப்பதால் பூமியின் மேல் உள்ள காடுகள் என்ற பாதுகாப்புக் கவசம் குறைந்து போகிறது. பெரும் காடுகள் சதுப்பு நிலக்காடுகளாகவும், சதுப்பு நிலக்காடுகள் புல்வெளிகளாகவும் மாறிவிடுகின்றன. மறுபக்கத்தில் சாண வண்டுகளும் (Dung Beetles) கரையான்களும் ,யானையின் சாணத்தை உண்ணுகின்றன. யானை உணவை முழுமையாக ஜீரணிப்பது இல்லை. எனவே பஃபூன் குரங்குகள் ஜீரணிக்காத யானை சாணத்தில் உள்ள கொட்டைகளைப் பொறுக்கித் தின்கின்றன. எஞ்சியுள்ள கொட்டைகள் முளைத்து மரங்கள் ஆகின்றன.
வறட்சியான காலங்களில் யானைகள் தங்கள் கொம்புகளால் ஆற்றப்படுகைகளில் தோண்டி ஊற்று நீரை எடுத்துப் பருகும். இந்தக் குழிகள் பிற உயிரினங்களுக்குத் தண்ணீர் மூலங்களாகப் பயன்படுகின்றன.
யானைகள் பயணம் செய்யும் பாதைகள் பின்னால் வரும் பல தலைமுறை யானைகளுக்கும், மனிதர்களுக்கும் பாதையாக பயன்படுவதோடு சில சாலைகளாகவும் மாற்றப்படுகின்றன.
ஆசிய கலாச்சாரத்தில் அறிவு மற்றும் நினைவாற்றலில் அடையாளமாகத் திகழ்வது யானைகளே. இந்த அற்புத மிருகங்கள் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கில் அவற்றின் தந்தங்களுக்காக மனிதர்களால் வேட்டையாடி அழிக்கப்படுவது தான் வேதனை. காடுகள் அழிக்கப்படுவதும், பருவநிலை மாற்றங்களும் இந்த அரிய விளங்கினத்தை அழிவின் விளிம்பில் தள்ளுகின்றன. இயற்கை தந்த உயிரினங்கள் நமது சொத்துக்கள் என்பதை மனிதகுலம் உணரும் நாளே இந்த அறிய உயிர்களுக்கும் நமக்கும் வசந்த காலம்.