
அழிந்து வரும் வன விலங்குகளின் பட்டியலில் நமது நாட்டின் தேசிய விலங்கான புலியும் உள்ளது. புலி இனங்களில் 9 இனங்கள் இருந்தன. அவை பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ/ சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன், ஜாவன் மற்றும் பாலி. இதில் கடைசி நான்கு இனங்கள் தற்போது இல்லை. அழிந்துவிட்டன.
புலிகள் எல்லாவிதமான பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள் அடர்ந்த காடுகள், மாங்குரோவ் காடுகள், சதுப்பு நிலக்காடுகள், புல்வெளிகளிலும் வாழும் தன்மை கொண்டவை.
இவை பெரும்பாலும் மான்களை விரும்பி சாப்பிடும். காட்டுப்பன்றி, நீர் எருமை, கொம்பு மான்களையும், கரடி நாய், சிறுத்தை, முதலை, மலைப்பாம்புகளையும் வேட்டையாடும் தன்மை கொண்டவை.
இவை தண்ணீரில் நீந்தும் தன்மை கொண்டதால் நீருக்குள்ளும் வேட்டையாடும். விலங்குகளை பொதுவாக வேட்டையாடும்பொழுது முதலில் அதன் கழுத்தை கடித்து வேட்டையாடும் இயல்புடையவை இவை.
புலிகள் ஒரு கூச்ச சுபாவியான விலங்கு. புலிகள் சராசரியாக 3.3 மீட்டர் நீளம் வரை இருக்கும். 300 கிலோ வரை எடை இருக்கும். புலிகளுக்கு இரவு நேரத்தில் மனிதர்களை விட 6 மடங்கு கண்பார்வை கூர்மையாக இருக்கும்.
காட்டில் வாழும் புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடும். சிங்கம் பசித்தால் மட்டுமே வேட்டையாடும். ஆனால் புலிகள் எப்போதும் விலங்குகளை வேட்டையாடும் குணம் கொண்டது.
ஒரு நாளில் சராசரியாக 40 கிலோ வரை மாமிசத்தை உணவாக எடுத்துக் கொள்ளும். புலி வனத்தின் காவலன். காட்டின் தலைமகன் புலியினுடைய உறுமல்தான் காட்டின் மொழி.
புலி வாழ்கிற காடுகள் வளமாக இருக்கும். அவை மான்கள் போன்ற தாவர உண்ணிகளை கொன்றுவாழும்.
புலிகள் காட்டில் தனித்து வாழ்கின்ற ஒரு விலங்கு. அவை தனக்கென்று சில சதுர கிலோமீட்டர் தூரத்தை தன்னுடைய வாழ்விடமாக வைத்திருக்கும்.
புலிகள் இல்லையென்றால் தாவர உண்ணிகள் பெருகி, தாவரங்கள் அழிந்து, கூடவே ஓடைகளும் மறைந்து நமக்கு வரவேண்டிய நீர் வரத்துக்கள் குறையும்.
மனிதர்களாகிய நாம் காடுகளின் பரப்பளவை சுருக்கி கொண்டே செல்வதால் விலங்குகள் மனிதர்களுக்கு மிக அருகில் வந்து தங்கள் உயிரை இழப்பதுடன் எதிர்ப்படும் மனித உயிர்களையும் எடுத்து விடுகிறது.
புலிகள் தங்களுடைய வாழ்விட எல்லைகளை சிறுநீர் கழித்தும், மரங்களில் நகங்களால் கீறியும் அதற்கான எல்லைகளை நிர்ணயிக்கும். ஒரு ஆண் புலியின் எல்லைக்குள் மற்றொரு ஆண் புலி வராது.
பெண் புலிகள் குட்டிகள் போட்டதும் ஆண் புலிகள் தான் அவற்றிற்கு பாதுகாப்பாக இருக்கும். பெண் புலிகள் குட்டிகளுக்கு நான்கு மாதங்கள் வரை பால் கொடுக்கும். அதற்குப் பிறகு எப்படி பதுங்குவது, பாய்வது, வேட்டையாடுவது என்று அனைத்தையும் சொல்லிக்கொடுக்கும்.
புலிகள் அதன் வலிமை, சுறுசுறுப்பு மற்றும் கருணை காரணமாக இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. புலிகள் எந்த உயிரினத்தையும் சாராது தனித்து வாழும் தன்மை கொண்டவை.
பெண் புலிகள் குட்டிகளை ஈன்றெடுக்க 90 நாட்களை எடுத்துக்கொள்ளும். ஒரு சமயத்தில் இரண்டு மூன்று குட்டிகளை ஈன்றெடுக்கும். பூனைகள் இனத்தைச் சேர்ந்தது.
உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிறக்கோடுகள் விரவி இருக்கும். இந்த கோடுகள் மனிதர்களின் கைரேகைகளைப் போன்றது. இவை தன் உடலை புல்வெளிகளில் மறைத்துக்கொண்டு விலங்குகளை வேட்டையாட உதவுகிறது.
ஒரு ஆண் புலி பெண் சிங்கத்துடன் இனப்பெருக்கம் செய்யும்போது "டைகான்" இன பூனை உருவாகிறது. அமெரிக்கா, இந்தியா, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் டைகான்களைைக் காணலாம்.
ஒரு பெண் புலி ஆண் சிங்கத்துடன் சேரும்போது "லைகர்" இனம் உருவாகிறது. புலிகளுக்கு காயம் ஏற்பட்டால் தொற்று ஏற்படாமல் இருக்க அதன் உமிழ்நீரில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை காயத்திற்கு மருந்தாகிறது.
காயம்பட்ட பகுதியை நக்குவதன் மூலம் தொற்று ஏற்படாமல் தங்களைத் தாங்களே காத்துக்கொள்கிறது. ஒரு புலியின் சராசரி ஆயுட்காலம் 20 - 25 ஆண்டுகளாகும்.