
சுற்றுச்சுழல் பாதுகாப்பில், காலநிலை சமநிலையில் வனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மழைப் பொழிவிற்கு வனங்கள் முதன்மை காரணமாக உள்ளன. விலங்குகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதிலும் காட்டில் உள்ள மரங்கள் முக்கிய பங்கு வைகிக்கின்றது.
2001 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் காடுகளில் பரவிய தீயில் இருந்து வெளியேறிய கார்பன் டை ஆக்சைடின் அளவு 60% வரை அதிகரித்துள்ளது.கடந்த 2001 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கு இடையில் வட அமெரிக்கா மற்றும் யூரேஷியாவில் உள்ள போரியல் காடுகளில் பரவும் தீயின் அளவு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல வனப் பகுதிகளைத் தவிர, வெப்பமண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் காட்டு தீயினால் கார்பன் உமிழ்வுகள் அதிகரித்துள்ளது. புவியியல் மாற்றம், அனைத்து காடுகளின் சுற்றுச்சூழலிலும் அதன் தாக்கத்தை கொண்டுள்ளது. சவனா புல்வெளிகளில் இருந்து காட்டுத் தீ காடுகளுக்கு பரவுகிறது. காட்டுத் தீயின் மூலம் 47% கார்பன் உமிழ்வை அதிகரித்துள்ளது.
2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியா, யூரேசியா, வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பதிவு செய்யப்பட்ட பெரிய காட்டுத் தீ மற்றும் அதிகரித்த தீ நிகழ்வுகள் பின்வரும் காலங்களில் அந்தப்பகுதியில் காட்டின் மீள் தன்மையை பாதிக்கிறது.இதில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடினால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசுபாடு ஏற்படுகிறது. எரிந்துபோன காடுகளில் கரிமமண் நிகழ்வுகளைத் தொடர்ந்து காடுகள் மீண்டும் உருவாக பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் வரை ஆகலாம்.
கடந்த 2024 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ அமெரிக்காவை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கலிபோர்னியா மாநிலத்தில் பல பகுதிகளில் பரவிய காட்டு தீ லாஸ் ஏஞ்சல்ஸில்வரை தொடர்ந்தது. இந்தக் காட்டுத்தீயினால் பல்லாயிரம் ஏக்கர் காடுகள் முற்றிலும் அழிந்துபோய் உள்ளன. காடுகளின் அருகிலேயே மக்கள் வசிக்கும் பெரிய நகரங்களும் இருந்ததால் பெரிய அளவிலான சேதங்களையும் நஷ்டங்களையும் ஏற்படுத்தின.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து நாசமாகின. 30க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் தீயில் பலியாகினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். கிட்டத்தட்ட 200,000 குடியிருப்பாளர்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பல வாரங்கள் தொடர்ச்சியாக காட்டுத் தீ பரவியதில் $150 பில்லியன் அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
காட்டு தீ ஏற்படவும், பரவவும் முக்கிய காரணமாக வறண்ட காலநிலைகள் உள்ளன. மரங்கள் வறண்டு காய்ந்து போவதாலும் , அதில் உள்ள நீரேற்றம் குறைந்து போவதாலும் அது எளிதில் தீப்பற்ற வாய்ப்பு கொண்டதாக உள்ளது. காடுகளில் தினமும் மரங்களில் இருந்து உதிரும் காய்ந்த இலைகள், குச்சிகள் போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் விரைவாக தீப்பற்றக்கூடிய சூழ்நிலைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
அதிக வெப்பம் காரணமாக காய்ந்த இலைகள் தீப்பிடிக்கும் சூழலுக்கு ஏற்றதாக உள்ளன. காய்ந்த மரங்களின் உரசல்களில் தீ ஏற்படுகின்றன. சில நேரங்களில் மின்னல்கள் மரங்களை தீ பிடித்து எரியவைக்கிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய சருகுகள் சிலநேரம் சூரியனின் வெப்பத்திலேயே நெருப்பு பற்றி எரிய தொடங்குகின்றன.
காட்டுத்தீயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலில் மாசுபாடுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் வளிமண்டலத்தில் சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. ஓசோன் மண்டலமும் பாதிப்பை பெறுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகிறது.