
ஈஸ்வரனின் அருளைப் பெற்றதால் இம்மூலிகைக்கு ‘ஈஸ்வர மூலி’ என்று பெயர். அதோடு, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் கடாட்சத்தையும் பெற்ற மூலிகைச் செடி இது. இதற்கு தலைச்சுருளி, ஆதிமூலம் மற்றும் தாராசுக் கொடி எனவும் பல பெயர்கள் உண்டு. ஏறு கொடி வகையைச் சேர்ந்த இது, விஷக்கடிக்கு மிகச் சிறந்த நிவாரணி. இதன் வேரை எட்டுத் திக்கிலும் வைக்க அந்த இடத்தில் பாம்புகள் வராது. பாம்புகளைப் பிடிக்கும் இருளர் இனத்தவர் இதை வாயில் வைத்துக் கொண்டு பாம்பு பிடிப்பது வழக்கம். இம்மூலிகையைக் கண்டால் பாம்புகள் சுருண்டு விடும். அதனால் இதற்கு, ‘தலைச்சுருளி’ என்ற பெயர் வந்தது.
கால்நடைகளுக்கு மருந்தாகவும் இம்மூலிகையைப் பயன்படுத்துவார்கள். இது மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. கோழிகளுக்கு ஏற்படும் சில நோய்களுக்கும் இதை மருந்தாகத் தரலாம்.
இம்மூலிகையின் வேரை 100 கிராம் சூரணித்து, 20 கிராம் மிளகு சேர்த்து ஒரு சிட்டிகை சூரணத்துடன் தேன் சேர்த்து சாப்பிட, ஆஸ்துமா, சளி, தலைவலி, சொறி, சிரங்கு, தேமல், வெண்புள்ளி, மூட்டுவலி, காய்ச்சல் போன்ற உடல் பிரச்னைகள் குணமாகும்.
இம்மூலிகையின் இலை அல்லது வேரை சூரணி.த்து தேனில் கலந்து 48 நாட்கள் எடுத்துக்கொள்ள கால் ஆணி குணமாகும். பசு மஞ்சளுடன் இதன் இலைகளை அரைத்துக் குடிக்க, உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் நீங்கும்.
இதன் இலையை மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ, சொரியாஸிஸ் பிரச்னை நீங்கும். வாதம், பித்தம் கபம் மூன்றையும் இது சமன்படுத்தும் வல்லமை கொண்டது.
தீராத பல் வலியால் அவதிப்படுபவர்கள் மூன்று அங்குல அளவு இதன் வேரை இடித்து ஒரு டம்பளர் நீரில் காய்ச்சி, அது அரை டம்பளர் ஆனதும் அதில் வாயை கொப்பளிக்க, பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி, பல் வலி விரைவில் குணமாகும்.
நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க வேண்டிய தானியங்கள், மூலிகைகள் மற்றும் விதைகள் இவற்றுடன் இந்த வேரை போட்டு வைக்க புழு, பூச்சிகள் அவற்றில் அண்டாது.