
‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இந்தப் பழமொழியை உண்மையாக்கும் விதத்தில்தான் அதன் வாழ்வியல் நடவடிக்கைகளும் உள்ளன. அதன் விஷத்தன்மை மற்றும் அணில், எலி, கோழிக்குஞ்சு போன்ற உயிரினங்களைப் பிடித்து அப்படியே விழுங்குவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் தோலானது வளரவும், சரும செல்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் செய்யும். ஆனால், பாம்பு மட்டுமே குறிப்பிட்ட இடைவெளிகளில் தனது உடல் முழுத் தோலையும் மொத்தமாக உரித்தெறிகிறது. இதற்கான காரணம், பாம்பு வளரும்போது அதன் தோல் விரிவடைவதில்லை.
அதன் பழைய தோலுக்கு அடியில் புதிதாய் ஒரு தோல் வளர ஆரம்பிக்கிறது. சரியான நேரத்தில் பழைய தோலை அது உரித்து நீக்கிவிட்டு புதுத் தோலுடன் பாம்பு காட்சியளிக்கும்.
பாம்பு, ‘எக்டைஸிஸ்’ (Ecdysis) எனப்படும் ஒரு வழிமுறையில் தனது தோலை உரிக்கிறது. இம்முறை பாம்பின் வயது மற்றும் அதன் வகைக்கேற்ப மாறுபடும். இந்நிகழ்வு மாதம் ஒருமுறை நிகழலாம். இளம் பாம்பு வளர்ந்த பாம்பைவிட அதிக முறை தனது தோலை உரிக்கிறது.
பாம்பு தனது தோலை உரிப்பதற்கு முக்கியக் காரணம் அதன் வளர்ச்சிதான் என்றாலும், வேறொரு காரணமும் கூறப்படுகிறது. பழைய தோலின் மீது பாக்டீரியாக்களும் ஒட்டுண்ணிகளும் (Parasites) வசித்து வருவதாலும், சிறு காயங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இவற்றிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமும் பளபளப்பும் பெற்று உருமாறி வருவதும் மற்றொரு காரணம் எனலாம்.
பாம்பின் கண்களின் நிறம் ஊதா நிறமாக மாறுவது, அதன் தினசரி செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவது போன்றவை அது தனது தோலை உரிப்பதற்கான நேரம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறிகளாகும். அதன் பின் பாறாங்கல், மரம் அல்லது அதுபோன்ற பிற கடினமான சுற்றுப்புற இடங்கள் மீது பாம்பு அழுத்தமாகத் தனது மூஞ்சியை உரசிக் கொள்ளும். இச்செயல் மூலம் அப்பகுதியின் சருமம் உடலை விட்டுப் பிரிய ஆரம்பிக்கும்.
அதன் பின்பு பாம்பு பழைய தோலிலிருந்து முழுவதுமாக விடுபட்டு பளபளப்பும் புத்துருவமும் கொண்டு வெளி வந்துவிடும். இனப்பெருக்கத்திற்கு முன்பு அல்லது குட்டிகளைப் பொரித்த பின்பு கூட பாம்பு தனது தோலை உரிக்கும் என்றும் கூறப்படுகிறது.