
'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாழ்வியல் முறை மனித இனத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வகையான கலாசாரம் என்பதை நாம் அறிவோம். இதை ஏற்றுக்கொண்ட ஆண், பெண் இருவரும் இறுதி வரை ஒருவரோடொருவர் இணைந்து வாழ்ந்து சந்ததிகளை உருவாக்கி பொறுப்புடன் அவர்களை வளர்த்து வரும் முறையாகும். இதே முறையை சில பறவைகளும் விலங்குகளும் இப்போதும் பின்பற்றி வருகின்றன என்றால் அது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா? அவ்வாறான ஐந்து வகை உயிரினம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. கிப்பன் குரங்கு (Gibbon): 'ஒரு தார மணம்' என்ற முறையைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றன கிப்பன் குரங்குகள். இது தனது பார்ட்னர் மீது வைத்திருக்கும் அன்பும், குழந்தைகளை வளர்ப்பதில் காட்டும் ஈடுபாடும் கண்களால் காணக்கூடியவை. குரங்குத்தனமில்லாது, கூட்டுக் குடும்பமாய், உள்ளன்போடு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்து, 20 முதல் 30 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்து வருவது இயற்கையின் அதிசயம் என்றே கூறலாம்.
2. கிரே உல்ஃப் (Grey Wolf): ஒரு முறை பொறுப்பேற்றுக் கொண்டால் அதிலிருந்து சிறிதும் பிறழாமல் தனது துணையிடம் விசுவாசமுடன் நடந்துகொள்ளக் கூடியவை இந்த கோரைப்பல் கொண்ட ஒரு வகை நாய் இனத்தைச் சேர்ந்த கிரே உல்ஃப். பிற மனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து ஆபத்து வரும் சூழ்நிலைகளில் ஜோடி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போராடிக் காப்பதில் 'பவர் கப்பிள்' எனப் பெயர் பெற்றுள்ளன இவை. ஆயுள் உள்ள வரை கிரே உல்ஃப் தனது பார்ட்னருடனும் வாரிசுகளுடனும் இணைந்து வாழ்ந்து குழந்தைகளுக்கு வாழ்வியல் முறையை கற்றுக்கொடுப்பதும் உண்டு. ஜோடி உல்ஃப்களில் ஒன்று இறந்துவிட்டால் மற்றது மீதி நாட்களை தனித்து வாழ்ந்து மடிகிறது.
3. பீவர் (Beaver): தமிழில் நீரெலி அல்லது நீர் நாய் எனப்படும் பீவர் ஒரு கொறித்துண்ணி. நீரிலும் நிலத்திலும் வாழக் கூடியது. நீர் நிலைகளுக்கருகில் பள்ளம் தோண்டி குச்சிகளைப் பரத்தி தனது வீட்டைக் கட்டிக்கொள்ளும். இது தனது ஜோடியைத் தேர்ந்தெடுத்து இணைத்துக் கொண்டபிறகு தனது வீட்டில் நிரந்தரமாகக் குடியிருந்து குழந்தைகள் பெற்று வளர்த்து வரும். ஒரே ஒரு பார்ட்னருடன் ஆயுள் முழுக்க வாழ்வது இவற்றின் வாழ்நாள் நீடிக்கவும், தங்களின் இருப்பிடம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும் உதவி புரியும் என்று இந்த ஜோடி நம்புவதால், தொடர்ந்து சேர்ந்து வாழ அவை விரும்புவதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
4. பிளாக் வல்ச்சர் (Black Vulture): கழுகுகளிலும் ஒரே பார்ட்னர் முறை உள்ளது என்பதை அறியும்போது வியப்பாய் இருக்கிறது. பெண் கழுகு கூட்டில், முட்டைகளை இட்ட பின்னர், அதன் ஆண் துணையும் இதுவும் கூட்டாகப் பொறுப்பேற்றுக்கொண்டு மாறி மாறி 24 மணி நேரமும் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். சமூக அந்தஸ்தோடு பல தலைமுறைக் குஞ்சுகளைப் பொரித்து அவற்றை பாதுகாப்பாக வளர்த்து வருகின்றன இந்த பிளாக் வல்ச்சர் பெற்றோர். பெற்றோர் இருவரும் இணைந்து, முட்டைகளையோ, குஞ்சுகளையோ திருடித் தின்ன வரும் பாம்பு போன்ற எதிரிகளை விரட்டி, புரட்டியெடுக்கும் செயலுக்கு இணை வேறொன்றும் கிடையாது.
5. மக்கரோனி பென்குயின் (Macaroni Penguins): அண்டார்க்டிக் மற்றும் சப்-அண்டார்க்டிக் தீப கற்பப் பகுதிகளில் காணப்படும் இந்த மக்கரோனி பென்குயின்களும் வாழ்நாள் முழுக்க ஒரே துணையுடன் வாழும் இனம்தான். ஜோடி இருவரும் முறை வைத்துக்கொண்டு முட்டைகளை அடைகாக்கவும், குஞ்சுகளுக்கு மீன் பிடித்துக் கொண்டு வந்து ஊட்டவும் செய்யும். ஆண், பெண் பென்குயின்கள் இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளும்போது, பரவசமூட்டும் காதலை வெளிப்படுத்தும் (ecstatic display of affection) என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஜோடியிடமுள்ள மிக விசித்திரமான பழக்கம் என்னவென்றால், அவை உறவில் இணைந்த பின்னும் பல வருடங்களை வெவ்வேறு இடங்களில் தனித்தனியே கழிக்கின்றன. இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்போது, எவ்வளவு தூரத்தில் இருந்தபோதும், தனது துணையை நாடி வருவது இவற்றின் சிறப்பு இயல்பு.