
பொதுவாக மனிதர்கள் எப்போதும் இரண்டு வெவ்வேறு விதமான மனநிலைகளில் உள்ளனர். ஒரு உயிரினம் அழிவின் விளிம்பில் இருந்தால் அதை மீட்க ஒருபுறம் முயற்சி செய்கின்றனர், அதே உயிரினம் அதிகரித்துவிட்டால் அதை எப்படி அழிப்பது? என்ற மனநிலையில் உள்ளனர். இதுபோன்ற ஒரு மனநிலைதான் தற்போது ஐரோப்பிய நாடுகளில் பெருகி வரும் ஓநாய்களின் எண்ணிக்கைகளுக்கு எதிராக உள்ளது.ஐரோப்பாவில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அது மனிதர்களுக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் ஓநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. பல்கேரியா, கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் ருமேனியா போன்ற பல நாடுகளில் இப்போது தலா 1000 க்கும் மேற்பட்ட ஓநாய் இனங்கள் உள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், ஹங்கேரி, லக்சம்பர்க், நார்வே மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் 100 க்கும் குறைவான இனங்கள் உள்ளன.
சில நாடுகளில், இந்த இனம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1 கூட்டமாக இருந்த ஓநாய்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 184 கூட்டமாகவும், 47 ஜோடிகளாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, லிதுவேனியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கியின் ஐரோப்பிய பகுதி உள்ளிட்ட 19 நாடுகளில் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அல்பேனியா, குரோஷியா, லக்சம்பர்க், நோர்வே, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின், உக்ரைன் 8 நாடுகளில் ஓநாய்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. போஸ்னியா & ஹெர்சகோவினா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய மூன்று நாடுகளில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தெற்கு ஸ்பெயினில் ஓநாய் கூட்டங்கள் அழிந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வாக்கில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஐரோப்பாவில் குறைந்தது 21,500 ஓநாய்கள் வசித்து வருவதாகவும், அவற்றில் 19,000 ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களின் எண்ணிக்கை இந்த பிராந்தியங்களில் 12,000 ஆக இருந்துள்ளது. ஓநாய்கள் மிகவும் தகவமைப்புத்திறன் கொண்டவை.
அவற்றின் மீட்சி அவற்றின் சந்தர்ப்பவாத சூழலால் பயனடைந்துள்ளது. அதே நேரத்தில் ஓநாய்களுக்கு சாதகமான சட்ட விதிகளும் அவற்றின் மீள் திறனில் பங்களித்துள்ளன. அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பாற்றிவிட்டு, அதன் வளர்ச்சி விகிதம் அதிகரித்த பின் மனிதர்களுக்கு பாதிப்பு என்றும் தெரியும் நேரத்தில், அவர்கள் விலங்குகளின் பாதுகாப்பு சட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்கிறார்கள்.
ஐரோப்பிய பிராந்தியங்களில் ஓநாய்கள் மில்லியன் கணக்கான வன விலங்குகள், 279 மில்லியன் கால்நடைகள் மற்றும் 449 மில்லியன் மக்களுடன் தங்கள் நிலப்பரப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஐரோப்பாவில் ஆண்டுதோறும் 56,000 வீட்டு விலங்குகளைக் ஓநாய்கள் கொல்கின்றன. ஓநாய் கூட்டங்களால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் சேதாரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 17 மில்லியன் யூரோக்கள் என்ற அளவில் உள்ளது.ஓநாய்களால் சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன.
ஓநாய்கள் பரவலின் மீதான கவலைகள், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய பார்வைகளை உருவாக்கி வருகின்றது. ஓநாய்கள் மனிதர்களுக்கு இடையிலான மோதல்களை குறைக்க புதிய வழிமுறைகளை ஐரோப்பிய நாடுகள் கண்டறிய வேண்டும்.
ஓநாய்கள் ஐரோப்பாவின் பாரம்பரிய விலங்குகள், வளர்ந்து வரும் அறிவியல் சூழலில் ஓநாய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகளை பின்பற்ற வேண்டுமே தவிர, அவைகளை அழிக்கும் எண்ணத்தினை உருவாக்க கூடாது.