சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விலங்கு யானை. மேலும் கடவுளாக நாம் வணங்கும் விநாயகரின் உருவம் கொண்ட இந்த யானையை நாம் கோயில்களில் பார்ப்பதுண்டு. அதிக ஞாபக சக்தி கொண்ட விலங்கு என்பதால் மனிதர்களுக்கு அடுத்தப்படியாக உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் விலங்குகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. நாம் சில இடங்களில் யானைகள் இசைக்கருவியை பயன்படுத்தி இசைப்பதைக்கூட பார்த்திருப்போம்.
யானைக்கு பொதுவாக இரக்க உணர்வு அதிகம். சங்க இலக்கியங்களில் யானை பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் யானையை வைத்து பல பழமொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்'. இதற்கான விளக்கம் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
யானைகள் காட்டில் வாழும் ஓர் உயிரினம் என்பது நாம் அறிந்ததுதான். மேலும் யானைகள் எப்பொழுதும் கூட்டமாக தான் வாழும். காடுகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் எப்பொழுதாவது சிந்தித்து இருப்போமா? இதற்கு விலங்குகளின் பங்களிப்பு இருக்கிறது. அதிலும் யானைகளுக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது.
யானைகள் தாவர உண்ணிகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவை ஒரு நாளில் மட்டும் 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. பொதுவாக நன்கு வளர்ந்த பெரிய யானைகள் ஒரு நாளைக்கு 140 முதல் 270 கிலோ வரை உணவுகளை உட்கொள்ளும். ஆனால் இதனுடைய செரிமானம் என்பது மந்தத்தன்மையாகத்தான் இருக்கும்.
இவை சாப்பிடும் பல உணவுகள் செரிமானம் இல்லாமல் சாணத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடும். இவ்வாறு வெளியேறும் சாணத்தில் பல பழங்களின் விதைகள் இருக்கும். இவை தான் முளைத்து காடுகளாக வளர்கின்றன.
இவ்வாறு கூட்டமாக வாழும் யானைகள் காடுகளில் உள்ள பல பழங்களை உண்டு அதனை சாணமாக வெளியேற்றும் பொழுது அதிலிருந்து பலவகையான செடிகளாக வளர்கின்றன. மேலும் இவை நடந்து செல்லும் வழிகளில் பல பெரிய மரங்களின் கிளைகளை உடைத்து சூரிய ஒளி தரையில் படும் அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி செல்கின்றன. இதனால் காட்டில் மழை பெய்து, தரையில் சூரிய ஒளி படும் போது அந்த சாணத்தில் இருந்து பல வகையான செடிகள் மீண்டும் முளைத்து காடுகளாக மாறுகிறது.
மேலும் இவை நடந்து செல்லும் போது காட்டில் வழித்தடத்தை ஏற்படுத்துகின்றன. காட்டில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் உணவுகளை தேடிச் செல்வதற்கு இவை பெரும் பங்களிக்கின்றன. நீர் நிலைகளில் இவை இறங்கி நீர் அருந்தும் பொழுது அங்கு பள்ளம் தோன்றி செயற்கையான நீர் குட்டைகள் உருவாகின்றன. இதனால் காட்டில் வாழும் மற்ற விலங்குகள் எளிமையாக நீர் அருந்துவதற்கு இவை உதவுகின்றன.
இவ்வாறு காடுகளை உருவாக்குவதில் யானைகளின் கூட்டம் பெருமளவில் உதவுகிறது. இதனால்தான் யானை இருந்தால் ஆயிரம் பொன் எனக் கூறுகிறார்கள்.
யானை இறந்த பிறகு அதனுடைய உடல் காட்டில் வாழும் மற்ற விலங்குகளுக்கு உணவாக நீண்ட நாட்களுக்கு பயன்படுகிறது. மேலும் யானையின் தந்தம் விலை மதிக்க முடியாத பொருளாக இருக்கிறது. எனவே யானையின் தந்தத்திற்கு வணிக சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. மேலும் ஆப்பிரிக்காவில் யானைகள் அதிகம் வாழகின்றன. அந்த நாட்டில் தந்தங்களுக்காக யானைகள் அதிகமாக கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதனால்தான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுகிறார்கள்.