இரவில் மட்டுமே வெளியே வரும் இந்த மர்ம விலங்கைப் பற்றித் தெரிந்தால் நிச்சயம் மிரண்டு போவீர்கள்!

Asian Palm Civet
Asian Palm Civet
Updated on

நமது ஊர்களில் இரவு நேரங்களில் மரங்களுக்கு இடையே ஒரு கருப்பான உருவம் சத்தமில்லாமல் தாவிச் செல்வதை சிலர் கவனித்திருக்கலாம். பார்ப்பதற்கு பூனை போலவும், அதே சமயம் கீரிப்பிள்ளை போலவும் தோற்றமளிக்கும் இந்த விலங்கை கிராமங்களில் மரநாய் என்று அழைப்பார்கள். இதன் அதிகாரப்பூர்வமான பெயர் ஆசிய பனை மரநாய் (Asian Palm Civet). 

பழங்காலம் தொட்டே மனிதர்களோடு ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த விலங்கைப் பற்றி பலருக்கும் அதிகம் தெரிவதில்லை. 

மரநாயின் வாழ்க்கை முறை!

பெயரில் நாய் என்று இருந்தாலும் இது உண்மையில் நாய் குடும்பத்தைச் சேர்ந்தது கிடையாது. இது விவேரிடே (Viverridae) என்ற தனி விலங்கினக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உயிரினம். இவை பெரும்பாலும் அடர்ந்த காடுகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரிய மரங்களில்தான் தங்களது வாழ்க்கையைக் கழிக்கின்றன.

பகல் முழுவதும் மரப்பொந்துகளில் நன்றாகத் தூங்கி விட்டு, சூரியன் மறைந்த பிறகுதான் இரை தேடவே வெளியேவரும். இவை தூய சைவமும் கிடையாது, முழுமையான அசைவமும் கிடையாது. பழங்கள், கொட்டைகள், சிறு பூச்சிகள், எலிகள் என எது கிடைத்தாலும் ஒரு கை பார்த்துவிடும். குறிப்பாக பனை மரங்களில் ஏறி கள் குடிப்பது இதற்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாகும்.

உலகின் விலையுயர்ந்த காபி!

இந்த விலங்கைப் பற்றிச் சொல்லும்போது கோபி லுவாக் (Kopi Luwak) என்ற காபியைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. உலகில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படும் காபி இதுதான். காபி தோட்டங்களில் புகுந்து, அங்குள்ள பழுத்த காபி பழங்களை இந்த மரநாய்கள் விரும்பிச் சாப்பிடும். அதன் தோல் பகுதியை மட்டும் செரிமானம் செய்துவிட்டு, உள்ளே இருக்கும் காபி கொட்டையை அப்படியே மலமாக வெளியேற்றிவிடும். 

இதன் வயிற்றில் உள்ள சில என்சைம்கள் அந்த காபி கொட்டையில் ஒரு மாயாஜாலத்தைச் செய்து அதன் சுவையை பல மடங்கு கூட்டிவிடுகிறது. இந்த கொட்டைகளைச் சேகரித்து, சுத்தம் செய்து வறுத்து எடுக்கப்படும் காபிக்கு சர்வதேச சந்தையில் எக்கச்சக்கமான டிமாண்ட் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கை நறுமணப் பொருட்களை நாமே எப்படி உருவாக்குவது?
Asian Palm Civet

நறுமணப் பொருள்!

இதன் இன்னொரு பெயர் புனுகுப் பூனை. இதன் உடலின் பின்பகுதியில் உள்ள ஒரு சிறிய சுரப்பியில் இருந்து வெளிவரும் ஒரு மெழுகு போன்ற பொருளைத்தான் நாம் புனுகு என்கிறோம். ஆரம்பத்தில் இது சற்று காட்டமான வாசனையைக் கொண்டிருந்தாலும், இதை பதப்படுத்தும் போது அதிலிருந்து வரும் நறுமணம் பலரை சுண்டி இழுக்கும். 

பழங்காலத்தில் அரசர்கள் பயன்படுத்திய வாசனைத் திரவியங்களில் இந்த புனுகு முக்கியப் பங்கு வகித்தது. இன்றும் பல பிரபல கோவில்களில் சுவாமிக்கு சாத்தப்படும் திரவியங்களில் இது பயன்படுத்தப் படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இவை பல இடங்களில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்.

இதையும் படியுங்கள்:
பூ பூக்கும்; ஆனால் காய் காய்க்காத அதிசய மரம் உள்ள சிவன் கோயில்!
Asian Palm Civet

காடுகளில் உள்ள மரங்களின் விதைகளை பரவச் செய்வதில் இந்த விலங்குகளுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு காடு செழிப்பாக வளர இது போன்ற சிறிய உயிரினங்களின் நடமாட்டம் மிகவும் அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com