
தோட்டக்கலைத் துறையின் முக்கியப் பயிர்களான காய்கறிகளில் சாகுபடியை அதிகரிக்க வேண்டுமெனில், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை விவசாயிகள் கையாண்டாலும், அதற்கு செலவும் அதிகமாகிறது. செயற்கை உரங்கள் பூச்சிகளைப் கட்டுப்படுத்தினாலும், மண்வளம் மற்றும் விளைபொருட்களில் நஞ்சை விதைத்து விடுகிறது. ஆகையால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, மண்ணையும் பாதுகாத்து, விளைச்சலையும் அதிகப்படுத்தும் ஒரு யுக்தியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
அன்றிலிருந்து இன்றுவரை விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினைகளாக இருப்பவை பூச்சிகள் தான். பல பூச்சிகள் காய்கள் மற்றும் பழங்களை உண்டு, கழிவுகளை அதன் உள்ளேயே இடுவதால், பழங்கள் அழுகி விடுகின்றன. இதனால் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு தான் பல விவசாயிகள் செயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். இருப்பினும், மண் வளத்தை காக்க இயற்கையான முறையைப் பயன்படுத்துவது தான் சிறந்த வழியாகும்.
காய்கறிப் பயிர்களில் பூச்சித் தாக்குதலை மிகக் குறைந்த செலவில் கட்டுப்படுத்தும் முறை தான் இன்க்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவது. பொதுவாக ஆண் மற்றும் பெண் பூச்சிகள் வயலிலேயே இனப்பெருக்கம் செய்வதால் தான், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பயிர்களை சேதம் செய்கின்றன. இனக்கவர்ச்சிப் பொறிகளின் வேலையே பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் தடுப்பது தான். அதாவது ஆண் பூச்சிகளின் கவனத்தைத் திசை திருப்பி, அவற்றை அழித்து விடலாம்.
பெண் பூச்சிகளின் உடலில், ஆண் பூச்சிகளை ஈர்க்கும் ஒரு ஹார்மோன் இயற்கையாகவே சுரக்கும். இந்த ஹார்மோன் தற்காலத்தில் ஆய்வகங்களில் செயற்கையாகவே தயாரிக்கப்பட்டு, சிறிய குப்பிகளில் அடைக்கப்பட்டு பொறிகளாக விற்கப்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறிகளை வாங்கி, ஒரு ஏக்கருக்கு 5 வீதம் ஆங்காங்கே கம்பி அல்லது கம்புகளில் பொருத்த வேண்டும். இதிலிருந்து வரும் பெண் பூச்சி ஹார்மோனின் வாசம் ஆண் பூச்சிகளை ஈர்க்கும். இதனால் ஆண் பூச்சிகள் எளிதாக பொறிகளில் வந்து சிக்கிக் கொள்ளும்.
தினந்தோறும் பொறிகளில் சிக்கும் ஆண்பூச்சிகளை நாம் எளிதில் அழித்து விடலாம். ஆண் பூச்சிகள் இல்லையெனில் இனச்சேர்க்கைக்கு வழியில்லாமல், பெண் பூச்சிகள் விரைவிலேயே தனது வாழ்நாளை முடித்துக் கொள்ளும். இதனால் பயிர்களில் ஏற்படும் சேதம் குறைந்து, மகசூல் அதிகரிக்கும்.
இனக்கவர்ச்சிப் பொறிகளை வைப்பதுடன், ஊடுபயிராக ஆமணக்குப் பயிரையும் விதைத்தால் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். இவை உயரமாக வளரக் கூடிய தாவரம். மேலும் இவற்றின் இலைகள் பரந்து விரியும். இதன் இலைகளின் மீது தாய்ப் பூச்சிகள் தானாக விரும்பி வந்து முட்டைகளை இடும். இந்த முட்டைக் குவியலை எளிதாக அடையாளம் கண்டு அழித்து விட்டால், பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
இன்றைய காலத்தில் விவசாயத்தில் செயற்கை என்பது அதிகரித்து விட்டது. மெல்ல மெல்ல இதிலிருந்து விடுபட்டு, இயற்கைக்குத் திரும்புவது தான் எல்லாவற்றிற்கும் நல்லது. இயற்கையான முறையிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதற்கு பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.