காட்டைக் காக்கும் விந்தைப் படை: ஸ்பெயினின் ‘தீயணைப்பு’ கழுதைகள்!

'Firefighting' donkeys!
'Firefighting' donkeys!
Published on

ஸ்பெயின் நாட்டின் கோடைக் காலம் என்றாலே அனல் காற்றும், அதன் விளைவாக ஏற்படும் கொடூரமான காட்டுத்தீயும்தான் நினைவுக்கு வரும். நவீன உலகில் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், ஸ்பெயினின் ‘டொனானா’ தேசியப் பூங்காவில் ஒரு பாரம்பர்யமான ஆனால் ஆச்சரியமான முறை பின்பற்றப்படுகிறது. அதுதான் ‘தீயணைப்பு கழுதைகள்’ படை (Firefighting Donkey Battalion).

தீயணைப்பு அல்ல; தீத் தடுப்பு!

இந்தக் கழுதைகள் எரியும் தீயை அணைப்பதில்லை. மாறாக, தீ உருவாவதற்கான மூல காரணத்தையே அழித்துவிடுகின்றன. கோடைக் காலத்தில் காடுகளில் காய்ந்த புற்கள், முட்புதர்கள் மற்றும் காய்ந்த செடிகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும். ஒரு சிறிய பொறி பட்டால் கூட, இவை ‘எரிபொருள்’ போலச் செயல்பட்டுத் தீயைக் காட்டுத்தீயாக மாற்றும். இந்தக் கழுதைகள் நாள் முழுவதும் இந்தக் காய்ந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து நிலத்தைச் சுத்தப்படுத்துகின்றன. இதனால் தீ பரவுவதற்குத் தேவையான ‘எரிபொருள்’ அங்கு இல்லாமல் போகிறது.

‘எல் புரிட்டோ பெலிஸ்’ இயக்கம்

‘எல் புரிட்டோ பெலிஸ்’ (El Burrito Feliz – (மகிழ்ச்சியான குட்டிக் கழுதை) என்ற தன்னார்வ அமைப்பு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 18 முதல் 24 கழுதைகள் இந்தப் படையில் பணியாற்றி வருகின்றன. இவை அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது கொடுமைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து மீட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கழுதைகள் ஒரு ராணுவப்படை போலத் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. இவை மார்ச் முதல் நவம்பர் வரை, தினமும் சுமார் 7 மணி நேரம் காடுகளில் மேய்கின்றன.

மேய்ச்சல் முறை: இவை சுதந்திரமாக விடப்படுவதில்லை. ‘நகரும் வேலிகள்’ மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைத்து, அந்தப் பகுதி முழுவதையும் கழுதைகள் மேய்ந்து முடித்தவுடன் அடுத்த பகுதிக்கு மாற்றப்படுகின்றன.

ஒரு கழுதை ஒரு நாளைக்குச் சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான காய்ந்த புற்களை உட்கொள்கிறது. இது மற்ற கால்நடைகளைவிட (ஆடு, மாடு) பல மடங்கு அதிகம்.

இதையும் படியுங்கள்:
உயிரைப் பறிக்கும் வெப்பம்: 2050-க்குள் 7 லட்சம் பேர் பலியாகும் அபாயம்!
'Firefighting' donkeys!

இயந்திரங்களால் முடியாததைச் செய்யும் கழுதைகள்

காட்டுத்தீயைத் தடுக்க மனிதர்கள் புதர் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான பகுதிகளில் இயந்திரங்களை எடுத்துச் செல்வது கடினம். அங்கே இந்தக் கழுதைகள் ஹீரோக்களாக மாறுகின்றன. கழுதைகளால் எப்பேர்ப்பட்ட பாறை இடுக்குகளிலும் ஏறிச் சென்று புதர்களை அகற்ற முடியும்.

மேலும், கழுதைகளின் செரிமான மண்டலம் மிகவும் வலிமையானது. மற்ற விலங்குகள் சாப்பிட மறுக்கும் காய்ந்த மற்றும் முள் நிறைந்த செடிகளையும் இவை விரும்பி உண்கின்றன. இதனால் காடு இயற்கையான முறையில் சுத்தமாகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலன்

இந்தத் திட்டம் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போலச் செயல்படுகிறது:

  1. பாதுகாப்பு: டொனானா பூங்காவில் அழியும் நிலையில் உள்ள ‘ஐபீரியன் லின்க்ஸ்’ (Iberian Lynx) போன்ற அரிய வகை விலங்குகளின் வாழ்விடத்தை இது தீயிலிருந்து காக்கிறது. இந்தக் கழுதைகள் பணியாற்றும் பகுதிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு காட்டுத்தீ கூட ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய சாதனை.

  2. மறுவாழ்வு: ஒரு காலத்தில் ஸ்பெயினின் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகித்த கழுதைகள், இயந்திரங்களின் வருகையால் கைவிடப்பட்டன. இத்திட்டம் அவற்றுக்கு ஒரு கௌரவமான வேலையையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

‘முஜெரெஸ் போர் டொனானா’ என்ற பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு இந்தக் கழுதைகளைப் பராமரிக்கிறது. இந்தக் கழுதைகளுக்குப் போதிய ஓய்வு, சுமார் 30 லிட்டர் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் ராணுவத் தீயணைப்புப் பிரிவினர் கூட இத்திட்டத்தைப் பாராட்டி, ‘உமே’ (Ume) என்ற கழுதையைத் தங்கள் பிரிவின் கௌரவ உறுப்பினராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
1.2 கோடி வருஷமா கொஞ்சம் கூட மாறாத ராட்சச அனகோண்டா… விஞ்ஞானிகளை அதிர வைத்த ரகசியம் இதோ!
'Firefighting' donkeys!

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும், இயற்கையைக்காக்க இயற்கையே சிறந்த வழி என்பதற்கு ஸ்பெயினின் இந்தத் தீயணைப்பு கழுதைகள் ஒரு சிறந்த உதாரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com