
இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை பற்றிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு 2021ல் தொடங்கி, தற்சமயம் அறிக்கை வெளியிடப்படுள்ளது. இந்தக் கணக்கெடுப்பை சுற்றுச்சூழல் அமைச்சகம், யானை திட்ட இயக்குநரகம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் சேர்ந்து நடத்தியது. இதில் யானைகளின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட குறைவாக இருந்தது. நாடு முழுவதும் யானைகளை எண்ணுவதற்கு டிஎன்ஏ தொழில்நுட்பம் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
யானைகளின் மொத்த எண்ணிக்கை:
2025 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் தற்போது சுமார் 22,446 யானைகள் இருக்கின்றன. ஆனால், 2017ம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியாவில் 29,964 யானைகள் இருந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 7,518 யானைகள் எண்ணிக்கையில் குறைந்துள்ளன. ஆனால் அதிகாரிகள், ‘முந்தைய கணக்கெடுப்பில் துல்லியம் கிடையாது, தற்போதைய கணக்கெடுப்பு முன்னேறிய டிஎன்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் துல்லியமானது’ என்று கூறுகின்றனர்.
யானைகள் கணக்கெடுப்பு முறை:
• மொத்தமாக 6,66,977 கி.மீ. பரப்பளவில் யானைகளின் எண்ணிக்கை தொடங்கி, மூன்று கட்டங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
• முதல் கட்டத்தில், காடுகளில் கள ஆய்வு மற்றும் எம்-ஸ்ட்ரிப்ஸ் செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
• இரண்டாம் கட்டத்தில், 1,88,030 பாதைகள் மற்றும் குறுக்கு பாதைகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டன. காடுகளின் தரம் மற்றும் மனித நடமாட்டம் ஆகியவை 11 சிறிய வகை செயற்கைக் கோள்கள் மூலம் மதிப்பிடப்பட்டது.
• மூன்றாம் கட்டத்தில் 3,19,460 சாண இடங்களில் இருந்து யானை சாண மாதிரியில் டிஎன்ஏ சோதிக்கப்பட்டது.
• 4,065 வெவ்வேறு யானைகள் அடையாளம் காணப்பட்டன. மேலும், மொத்த எண்ணிக்கை 'மார்க்-ரீகாப்சர்' மாதிரி மூலம் மதிப்பிடப்பட்டது.
• யானைகளுக்கு தெளிவான அடையாளக் குறிகள் இல்லாததால், டிஎன்ஏ தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக அடையாளம் கண்டு சரியான எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன?
முதல் முறையாக டிஎன்ஏ முறையில், யானைகள் கணக்கெடுப்பு நடந்த பின்னர் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகள் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. இங்கு அதிகபட்சமாக 6,013 யானைகள் உள்ளன. இரண்டாவது இடத்தில் அசாம் மாநிலம் 4159 யானைகளுடன் உள்ளது. மூன்றாவது தமிழ்நாடு 3,136 யானைகளுடன் உள்ளது. கேரளாவில் 2,785 யானைகளும், உத்தரகாண்ட்டில் 1,792 யானைகளும், ஒடிசாவில் 912 யானைகள் உள்ளன. சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் மொத்தம் 650க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மேகாலயாவில் 677 யானைகளும், அருணாச்சலப் பிரதேசத்தில் 617 யானைகளும், நாகாலாந்தில் 252 யானைகளும் மற்றும் திரிபுராவில் 153 யானைகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 97 யானைகள் மட்டுமே உள்ளன. மகாராஷ்டிராவில் 63 யானைகள் உள்ளன.
இந்தியாவின் தென் மாநிலங்களில்தான் அதிகளவில் யானைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைகள்11,934 யானைகளை கொண்ட மிகப்பெரிய யானைகள் வாழ்விடமாக உள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் பிரம்மபுத்திரா பகுதியில் 6,559 யானைகள் உள்ளன. சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகளில் 2,062 யானைகள் உள்ளன. மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் மொத்தம் 1,891 யானைகள் வாழ்கின்றன.
யானைகளின் எண்ணிக்கை குறையக் காரணம்?
இந்த சரிவுக்கு காடுகளின் பரப்பளவு குறைவதும், வனப்பரப்பு அருகில் மனிதர்களின் குடியேற்றம் அதிகரித்ததும் முக்கிய காரணமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் காபி மற்றும் தேயிலை விவசாயத்தினால் தங்களது வாழ்விடங்களை யானைகள் இழந்துள்ளன. மேலும், மின்சார வேலிகள், ரயில் பாதைகளில் சிக்கிக் கொள்வதால் ஏராளமான யானைகள் இறந்துள்ளன. அசாமின் சோனித்பூர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதர்களின் குடியேற்றம் நடைபெறுவதால் மனித -யானை மோதலை மேலும் அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்படுவது அதிகம் யானைகள்தான்.