
தீவன பற்றாக்குறை காரணமாக பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பொதுவாக திறன் குறைந்து காணப்படுவதால் அதை ஈடு கட்டுவதற்காக தீவனவகை மரங்களை வளர்க்கின்றனர். அதனால் ஏற்படும் நன்மை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
தீவன மர வளர்ப்பின் பயன்கள்:
எல்லா வகையான சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உள்ளது. மற்ற தீவன பற்றாக்குறை காலங்களில் மரத்தீவன பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது. கால்நடைகளால் தீவன மரங்களுக்கு சேதம் மிகவும் குறைவே. பசுந் தீவன உற்பத்தியை பெருக்க வழி வகுக்கும் முறைகளில் ஒன்றுதான் தீவன மரங்களை வளர்த்தல் ஆகும்.
வாகை மரம்:
சுமாரான உயரமுடைய பல கிளைகள் கொண்ட இலையுதிர் மரம். வடிகால் வசதி உள்ள மணற்பாங்கான நிலத்தில் செழித்து வளரும் தரிசு நிலங்களில் பயிரிடப்படுகிறது. இலைகளில் 20 விழுக்காடு புரதச்சத்து. இது பசுந்தாள் எருவாக வயலில் பயன்படுத்தப்படுகிறது. மேஜை, நாற்காலி, மாட்டு வண்டி, வீட்டின் உத்திரம் செய்யவும் இதை பயன்படுத்துகிறார்கள்.
அரப்பு மரம் /உசில்:
வறண்ட மலைப்பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுப்பதற்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது. நீண்ட ஆணிவேர் கொண்ட இம்மரம் பொதுவாக குடைவேல் மற்றும் வேம்பு மரங்களுடன் சேர்த்து நடப்படுகிறது. பெரும்பாலும் இம்மரத்தின் இலைகள் ஆடுகளுக்கு மட்டுமே தீவனமாக கொடுக்கப்படுகிறது. காயவைத்து பொடியாக்கப்பட்ட இதன் இலைகள் கிராமங்களில் தலைக்கு தேய்த்து குளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. வேளாண் சார் கருவிகள் செய்வதற்கும், குடிசைகள் வேயவும், விறகாகவும் இம்மரம் பயன்படுகிறது.
ஆச்சா:
எல்லா வகையான மண்ணிலும் வளரக்கூடிய மரம் இது. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இதன் இலை சிறந்த தீவனமாக கொடுக்கப்படுகிறது. இலையில்9 - 10 விழுக்காடு புரதச்சத்து உள்ளது. இம்மரம் கிராமங்களில் உலக்கை செய்ய பயன்படுகிறது.
குமிழ்:
இது ஓர் இளையுதிர் வகை மரம். மிகுந்த பள்ளத்தாக்குகளில் நன்கு வளரும். வறண்ட மற்றும் வளம் குறைந்த நிலங்களில் மரங்களின் வளர்ச்சி குன்றி காணப்படும். அமிலம் மற்றும் கரிசல் மண்ணில் மரம் வளர்ந்தாலும் நீரோட்டமுள்ள வண்டல் மண்ணில் நன்கு வளராது. இலை சிறந்த தீவனமாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கும், வீட்டு சாமான்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. "இம்மரத்தின் பூக்களில் இருந்து கிடைக்கும் தேனின் தரம் சிறந்ததாக இருப்பதால் தேனீ வளர்ப்புக்கு சிறந்த மரமாக" கருதப்படுகிறது.
கல்துறிஞ்சி (சவுண்டல்) :
இதன் இலை, கனி மற்றும் விதை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. இலைகளில் 20 விழுக்காடு புரதம் உள்ளது. இம்மரம் மண்ணின் வளத்தை பெருக்குவதற்கு சிறந்தது.
மந்தாரை:
மரத்தின் பாகங்கள் மருத்துவ பயன் கொண்டது கோடை காலங்களில் இலைகள் கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது இலைகளில் 10 16 விழுக்காடு புரதச்சத்து உள்ளது இளந்த நேரங்களில் முதிர்ந்த இலைகளை விட புறவாசத்து அதிகம் இருக்கும் வேளாண் சார் கருவிகள் செய்யவும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வெள்வேல், கருவேல்:
இவைகளின் இலைகள் ஆடுகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. இதன் இலைகளில் புரதசத்தும், பலவகை உயிர் சத்துக்களும் அடங்கி உள்ளன .மரங்கள் வேளாண் கருவிகள் செய்யவும், மாட்டு வண்டிகள் செய்யவும், விறகாகவும், கரி செய்யவும் கதவுகள் மற்றும் மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.