மனித முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றிய விஷயங்களில் Fossil Fuels எனப்படும் புதைப்படிவ எரிபொருட்கள் மிக முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. நமது நவீன உலகின் பெரும்பகுதி கட்டமைக்கப்பட்டதற்கு அடித்தளமாய் அமைந்தது இதுதான். ஆனால் காலப்போக்கில் மக்கள் இவற்றை அதிகம் பயன்படுத்தியதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன.
இது உலக வெப்பமயமாதலைத் தூண்டி பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த பதிவு மூலமாக புதைப்படிவ எரிபொருட்களை சுற்றியுள்ள மர்மங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
Fossil Fuels என்றால் என்ன?
புதைப்படிவை எரிபொருட்கள் என்பது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானது. இவை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தத்தால் குவிந்து, உருமாற்றம் அடைந்து, ஆற்றல் மிக்க வளங்களாக மாறியது. நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை முக்கியமான மூன்று புதைப்படிமை எரிபொருட்களாகும். இவைதான் இந்த உலகம் கட்டமைக்கப்பட்டதன் உயிர்நாடியாக உள்ளது.
Fossil Fuels-ன் உருவாக்கம்:
புதைப்படிவ எரிபொருட்கள் கரிமப் பொருட்களின் குவியலால் உருவானது என சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலும் பண்டைய கால கடல் தாவரங்கள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் வாழ்ந்து இறந்து குவியலாக்கப்பட்டு, காலப்போக்கில் வண்டல் அடுக்குகள் அவற்றின் மீது மூடி, பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தின. இந்த செயல்முறையால் அவற்றுக்கிடையே சிதைவு தூண்டப்பட்டு எரிபொருளாக மாறியது. அதிகப்படியான அழுத்தத்தால், அவை இருக்கும் புவியியல் நிலைகளுக்கு ஏற்ப, நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாய்வாக மாறியது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதால், அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இதனால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.
இவற்றிலிருந்து வெளிவரும் அதிகப்படியான சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் தூசிகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி மனிதர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. குறிப்பாக இந்த எரிபொருட்களை பிரித்தெடுக்கும் செயல்முறையில் பல இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு பல்லுயிர் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இவற்றின் பயன்பாட்டைக் குறைத்து முற்றிலும் பசுமை மின்சார முறைக்கு மாறுவதை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது அதிகம் தயாரிக்கப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான புதைப்படிவ எரிபொருட்கள், வாகனங்களிலேயே பயன்படுத்தப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சோலார், காற்றாலை போன்றவற்றை பயன்படுத்தினால், புதைப்படிவ எரிபொருட்களின் தாக்கத்திலிருந்து உலகைக் காக்கலாம்.