பாலைவனப் பூக்கள் மற்றும் தாவரங்கள் சதைப்பற்றுள்ள தன்மையும் வறட்சியைத் தாங்கும் திறனும் கொண்டவை. பாலைவனத்தில் பூக்கும் நான்கு அழகான தாவரங்களையும் பூக்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பாலைவன லில்லி: இது உலர்ந்த மணல் பகுதிகளில் வளரும் ஒரு தனித்துவமான தாவரமாகும். இது நீண்ட மெல்லிய பச்சை இலைகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் தரையில் நெருக்கமாக ரோஜாவைப் போலத் தோற்றமளிக்கும் ரொசெட் வடிவத்தில் வளரும். இது இரண்டு அடி உயரமான தண்டுகளை உருவாக்குகிறது.
வசந்த காலத்தில் இந்த தாவரங்களில் அழகான வெள்ளை அல்லது வெள்ளி மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். இந்த மலர்கள் இனிமையான மணம் கொண்டவை. பாலைவன லில்லி கடுமையான சூழ்நிலைகளிலும் கூட தாக்குப்பிடித்து வாழும் தன்மை உடையது. இதன் வேர்கள் மண்ணில் ஆழமாகச் சென்று தண்ணீரைக் கண்டுபிடிக்கின்றன.
கலிபோர்னியா பாப்பி (California poppy): இது தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அழகிய காட்டுப் பூ ஆகும். இந்த பூக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். இவை குளிர்காலத்தின் பிற்பகுதியில் இருந்து கோடையின் ஆரம்பம் வரை பூக்கும். இந்தப் பூக்கள் மென்மையான கோப்பை வடிவில் இருக்கும். பகலில் திறந்திருக்கும் இதன் இதழ்கள் இரவானதும் மூடிவிடும்.
வயல்களிலும் சாலையோரங்களிலும் தோட்டங்களிலும் இவை கூட்டம் கூட்டமாக பூத்திருக்கும்போது அது அழகான பிரமிக்க வைக்கும் காட்சியை உருவாக்குகிறது. பாப்பிகள் பாலைவனத்தின் வறண்ட கால நிலைக்கு மிகவும் பொருத்தமானவை. இவை கலிபோர்னியாவின் அதிகாரப்பூர்வ மாநில மலர் ஆகும். இது காண்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல். தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற ஜீவராசிகளை மகரந்த சேர்க்கைக்கு ஈர்ப்பதன் மூலம் உள்ளூர் சுற்றுப்புற சூழல் அமைப்புகளில் பங்கு வகிக்கின்றன. இவை மூலிகை மருந்துகளில் பயன்படுத்தவும் பயிரிடப்படுகின்றன.
பாலைவனக் கற்றாழை: பாலைவனக் கற்றாழை என்பது வறண்ட பாலைவன சூழலில் செழித்து வளரும் சதைப்பற்றுள்ள தாவரங்களின் குழுவாகும். அவை தடிமனான சதைப்பற்றுள்ள தண்டுகளில் தண்ணீரைச் சேமிக்கும் திறன் கொண்டவை. இவை பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வளர்கின்றன. உயரமான சாகுவாரோ கற்றாழை 40 அடிக்கு மேல் வளரும் திறன் பெற்றது. மேலும் இவை சிறிய வட்ட வடிவத்தில் இருக்கும். கடுமையான சுற்றுப்புறங்களுக்கு நன்கு பொருந்துகிறது. நீர் இழப்பை குறைக்க, இந்தத் தாவரங்கள் ஒரு சிறப்பான ஒளிச்சேர்க்கை செயல்முறையை கொண்டுள்ளன.
இவை இரவில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. பல பாலைவனக் கற்றாழைகள் அழகான வண்ணமயமான பூக்களை உற்பத்தி செய்கின்றன. அவை குறிப்பிட்ட பருவங்களில் பூத்து தேனீக்கள் மற்றும் வவ்வால்கள் போன்ற மகரந்தச் சேர்க்கைக்குரிய ஜீவராசிகளை ஈர்க்கின்றன. இவை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், தோட்டங்களிலும் வீட்டுத் தாவரங்களாகவும் வளர்க்கப்படுகின்றன.
பாலைவன மணல் வெர்பெனா (Desert Sand Verbena): இவை தென்மேற்கு அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோவின் பாலைவனங்களுக்கு சொந்தமான ஒரு கடினமான பூக்கும் தாவரமாகும். இவை வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் தேனீக்களை அடிக்கடி ஈர்க்கின்றன. இவற்றில் துடிப்பான ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளைப் பூக்கள் பூக்கின்றன. இவை மணல் அல்லது சரளை மண்ணில் செழித்து வளர்வதால், வறண்ட சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. வசந்த காலத்தில், சிறிய அடர்த்தியான பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கின்றன.
பாலைவன நிலப்பரப்புகளில் இவை பூத்திருக்கும்போது வண்ணமயமான கம்பளங்கள் போல காட்சி அளிக்கின்றன. இவை கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது. இதன் இலைகள் பெரும்பாலும் மெல்லிய முடிகள் போன்ற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இது நீர் இழப்பை குறைக்க உதவுகிறது. இந்தத் தாவரங்கள் மண்ணின் வளத்தை உறுதிப்படுத்துவதிலும் பல்வேறு பாலைவன வனவிலங்குகளுக்கு வாழ்விடம் மற்றும் உணவை வழங்குவதன் மூலமும், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்கு வகுக்கின்றன. இதன் அழகிய இயல்பு காரணமாக வறண்ட பகுதிகளில் இவற்றை வளர்க்கிறார்கள்.