குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்பு கௌபீனம் சாத்துவது ஏன் தெரியுமா?

Sri Guruvayurappan
Sri Guruvayurappan
Published on

முன்னொரு காலத்தில் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் தினமும் காலையும் மாலையும் குருவாயூரப்பன் சன்னிதிக்கு வந்து கண்ணனை மன நிறைவோடு வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்த மூதாட்டி இரவு நேர தரிசனம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள். அப்பொழுது திடீரென்று பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்நாட்களில் சாலை வசதிகள் கிடையாது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

இந்தப் பெருமழையில் எப்படி வீட்டிற்குச் செல்வது என்று கலங்கிய மூதாட்டி,  குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லியபடியே தள்ளாடி தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு சிறுவன் அங்கு வந்து, ‘பாட்டி, கவலைப்படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்’ என்று கூறி அந்த முதாட்டியை கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

இதையும் படியுங்கள்:
காட்சிப் பொருளாகி வரும் டைப் ரைட்டர்கள்!
Sri Guruvayurappan

அவர்கள் இருவரும் பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். மழையில் இருவரும் முழுவதுமாக நனைந்து விட்டனர். சிறுவன், ‘‘பாட்டி மழையில் எனது துணி நனைந்து விட்டது. உங்கள் புடைவையில் இருந்து ஒரு பகுதியை கிழித்துத் தருவீர்களா?” என்றான். அந்த மூதாட்டி தன்னிடம் இருந்த சிவப்பு நிற புடைவையில் கொஞ்சத்தைக் கிழித்து சிறுவனிடம் கொடுத்தாள்.

மறுநாள் அதிகாலை குருவாயூரப்பன் சன்னிதியை திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நன்றாக அலங்காரம் செய்த கண்ணனின் திருமேனியில் சிவப்பு நிற கௌபீனம் (கோவணம்) மட்டுமே இருந்தது. ஆனாலும், அந்த திவ்யக் காட்சி அனைவரையும் மயக்கும் விதமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் நீர் தெரபி!
Sri Guruvayurappan

காலையில் வழக்கம்போல் குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்த அந்த மூதாட்டியும் இந்தக் காட்சியைக் கண்டு அதிசயப்பட்டுப் போனதோடு, அகமகிழ்ந்தும் போனாள். முன்தினம் இரவு நடந்தது அனைத்தையும் கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரிடமும் சொன்னதோடு, தான் கிழித்துக் கொடுத்த அந்த சிவப்பு நிறப் புடைவையையும் அனைவரிடமும் காண்பித்தாள்.

அந்த மூதாட்டி கிழித்துக் கொடுத்த ஒரு பகுதி ஆடையே குருவாயூரப்பன் இடையில் கோவணமாகக் காட்சியளித்தது. அன்று முதல் குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம்  சாற்றுவது மட்டுமே வழக்கமாக இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com