சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் முதலில் செய்யும் வேலை டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ளுவதுதான். டைப்ரைட்டிங் தொழிற்கல்விக்கு அக்காலத்தில் மிகவும் மவுசு இருந்தது. நகரின் பல தெருக்களில் அக்காலங்களில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு இன்ஸ்டிடியூட்டிலும் குறைந்தது இருபது அல்லது இருபத்தி ஐந்து டைப்ரைட்டர்களாவது இருக்கும். பழகுபவர்கள் ஒரே சமயத்தில் அவற்றை பயன்படுத்தும்போது டக் டக் என்ற சத்தம் தெருவில் செல்பவர்களுக்கும் மொத்தமாய்க் கேட்கும். ரெமிங்டன் (Remington), பேசிட் (Facit), ஹால்டா (Halda), கோத்ரெஜ் (Godrej) போன்ற டைப்ரைட்டிங் மெஷின்கள் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. கையில் எடுத்துச் செல்லக்கூடிய போர்ட்டபிள் டைப்ரைட்டர்களும் பயன்பாட்டில் இருந்தன.
தட்டச்சுத் தேர்விற்குச் செல்ல அப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் லோயர், ஹையர், ஹைஸ்பீட் மற்றும் தமிழ் லோயர், ஹையர் போன்ற தேர்விற்கு தயாராவார்கள். லோயர் என்றால் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றவர் என்று அர்த்தம். ஹையர் என்றால் நிமிடத்திற்கு 45 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றவர் என்று அர்த்தம். தமிழ் தட்டச்சில் ஹையர் என்றால் நிமிடத்திற்கு 41 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றவர் என்று அர்த்தம். ஹைஸ்பீட் தேர்ச்சி பெற்றவர்கள் நிமிடத்திற்கு 75 வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.
காலை ஆறு மணிக்குத் தொடங்கும் தட்டச்சு வகுப்புகள் இரவு ஒன்பது மணி வரை இடைவிடாது இயங்கும். ஒருவர் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி பெறலாம். இதற்கு மாதக்கட்டணம் பதினைந்து ரூபாய். விருப்பப்பட்டால் முப்பது ரூபாய் கட்டி இரண்டு மணி நேரம் பயிற்சியும் பெறலாம்.
இளைஞர்கள் வேலைக்குச் செல்ல டைப்ரைட்டிங் படிப்பதைதான் பெரும்பாலும் நம்பியிருந்தனர். பல அலுவலகங்களில் டைப்பிஸ்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அக்காலத்தில் நேர்முகத்தேர்விற்குச் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி டைப்ரைட்டிங் தெரியுமா என்பதுதான். தமிழ் டைப்ரைட்டிங் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகும்.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் ஜாப் டைப்பிங் செய்வார்கள். வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை தட்டச்சு செய்தல் மற்றும் பிற வேலைகளுக்குத் தேவையான படிவங்களை தட்டச்சு செய்தல் போன்றவை ஜாப் டைப்பிங் எனப்படும். இதற்கு ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் வாங்குவார்கள். நகரில் பல பகுதிகளில் ஜாப் டைப்பிங் சென்டர்கள் அக்காலத்தில் இயங்கி வந்தன. தற்காலத்தில் இத்தகைய வேலைகள் கணினிகளின் மூலமாக நடைபெறுகின்றன.
தற்போது உள்ளது போல ஜெராக்ஸ் இயந்திரம் அக்காலத்தில் கிடையாது. எனவே வேலைகளுக்கு விண்ணப்பிக்க நமது கல்விச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை ஜாப் டைப்பிங் சென்டர்களில் கொடுத்தால் சான்றிதழில் உள்ள விவரங்களை டைப் செய்து தருவார்கள். இதன் கீழ்ப்பகுதியில் / True Copy / என்று தட்டச்சு செய்வார்கள்.
அதை கெசெடட் ஆபிசர்களிடம் கொடுத்து ஒரிஜினல் சான்றிதழ்களைக் காண்பித்தால் அதை அவர்கள் சரிபார்த்து பச்சைவண்ண மையால் கீழ்ப்பகுதியில் கையொப்பமிட்டு தங்கள் பெயர் பதவி போன்ற விவரங்கள் கொண்ட அலுவலக முத்திரையினை இடுவார்கள். இதற்கு அட்டெஸ்டேஷன் என்று பெயர். இந்த பிரதியை இணைத்து அனுப்பினால்தான் பரிசீலனை செய்வார்கள்.
எழுத்தாளர்கள் பொதுவாக கையினாலேயே கதைகளை எழுதுவது வழக்கம். வசதியான சில எழுத்தாளர்கள் மட்டும் டைப்ரைட்டரில் கதைகளை தட்டச்சு செய்து பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள்.
கணினி பயன்பாட்டிற்கு வந்த பின்னர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி இன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக இயங்கி வருகின்றன. கற்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோனதால் கல்வித் தகுதி குறைக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் இருந்தது போல ஸ்பீடு டெஸ்ட், மெக்கானிசம் டெஸ்ட், பேலன்ஸ் ஷீட் போன்றவை இப்போது இல்லை. ரன்னிங் மேட்டரை மட்டும் ஸ்பீடு டெஸ்டாக தட்டச்சு செய்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.