
ஆப்பிரிக்க ராட்சச நில நத்தைகள் நத்தை இனங்களில் மிகப்பெரிய இனமாகும். இது வேகமாக இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. நீர், நிலம் இரண்டிலும் உயிர் வாழும் மெல்லுடலி உயிரினமான நத்தைகள் மெல்லிய ஓட்டினால் உட்புற பகுதி மூடப்பட்டிருக்கும். நிலத்திலும், கடலிலும், தூய்மையான நீரிலும் என மூன்று வகையான நத்தைகள் உள்ளன. கடலில் வாழ்கின்ற நத்தைகள் செவுள்கள் வழியாக சுவாசிக்கும். நிலத்தில் வாழும் நத்தைகள் நுரையீரல் வழியாக சுவாசிக்கும்.
பாம்புகளைப் போலவே நத்தைகளுக்கும் காதுகள் கிடையாது. வாசனை மற்றும் உணர்வு நரம்புகள் வழியாக உணவு இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு செல்லக்கூடியவை. நத்தைகள் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே உணரும் தன்மை கொண்டவை. இதனால் இவை மழை வருவதற்கு முன்பே பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்துவிடும். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) 12 அங்குலம் உள்ள ராட்சச நத்தைகள் உயிர் வாழ்கின்றன.
பல்வேறு இனங்கள்:
பல பெரிய ஆப்பிரிக்க நில நத்தைகள் பொதுவான பெயரில் அறியப்படுகின்றன. குறிப்பாக லிசாசட்டினா ஃபுலிகா(Lissachatina fulica) மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையாகும். இவை உலகின் மிகவும் ஆக்கிரமிப்பு பூச்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
விவசாயிகளின் எதிரி:
500க்கும் மேற்பட்ட பயிர் மற்றும் அலங்காரச் செடிகளை உட்கொண்டு விவசாயத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. குறுகிய நேரத்தில் அதிக பரப்பிலான வேளாண் பயிர்களை தின்று தீர்த்து விடும். எந்த வகை இலை தழலயாக இருந்தாலும் சாப்பிடும்.
சுகாதார அச்சுறுத்தல்:
எலி நுரையீரல் புழு (Rat lung worm) போன்ற ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன. இது மனிதர்களுக்கு மூளை காய்ச்சலை (meningitis) ஏற்படுத்தக்கூடும். வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல சூழலுக்கு நன்கு பரவக்கூடியவை.
சென்னையில் ராட்சச ஆப்பிரிக்க நத்தைகள்:
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ராட்சச ஆப்பிரிக்க நத்தைகள் பரவியுள்ளது. இவை மனிதர்களுக்கு மூளை அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை சுமந்து செல்கின்றன. குறிப்பாக வெள்ளம் வரும் காலங்களில் இந்த நத்தைகள் வேகமாக பரவி நகர்ப்புற மக்களுக்கு மோசமான ஆபத்துக்களை விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர். ஆப்பிரிக்க நத்தைகள் விவசாய பயிர்களுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மூளை தொற்று மற்றும் வயிற்று நோய்களை ஏற்படுத்தும். இவை ஒட்டுண்ணி நூற் புழுக்களின் பரப்பியாகவும் செயல்படுகின்றன என்று ஆய்வு அறிக்கை கூறுகின்றது.
நோய்களைப் பரப்பும் நத்தைகள்:
மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நத்தைகளின் பரவலை அதிகரித்து ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நத்தைகள் அல்லது அவற்றின் எச்சங்களை தொடுவதன் மூலம் இந்த நோய் தொற்றுகள் பரவுவதாகவும் ஆப்பிரிக்க ராட்சச நத்தைகள் கடுமையான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உலகிலேயே 100 மோசமான அந்நிய ஊடுருவும் உயிரினங்கள் பட்டியலில் இந்த ராட்சச நத்தைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இவை விவசாய பயிர்களையும், தாவர வகைகளையும் உணவாக உட்கொள்கின்றன.இவை Angiostrongylus cantonensis மற்றும் A.costaricensis போன்ற ஒட்டுண்ணி நூற்புழுக்களை பரப்புகின்றன. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்படுத்துவது எப்படி?
பல நாடுகளில் குறிப்பாக ஃப்ளோரிடாவில் நத்தைகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இந்த நத்தைகளின் பரவலையும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.
இவற்றை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அழிப்பது மிகவும் சிரமம். புகையிலேயை நீரில் போட்டு சாறு எடுத்து காப்பர் சல்பேட் கரைசலுடன் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்த முடியும். அதன் மேல் உப்பைத் தூவி கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளை பயன் படுத்தாமல் அவற்றை சேகரித்து அழிப்பதே சிறந்த முறை.