

கடல் மட்டுமல்ல நதியும் சில இடங்களில் நிலங்களை ஆக்ரமித்து தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்கிறது. தேசத்தின் பெரிய நதியாகவும், புண்ணிய நதியாக கொண்டாடப்படும் கங்கை நதி துலியன் நகரத்தில் தொடர்ச்சியாக தனது எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனால், உள்ளூர் மக்கள் நில இழப்பு, இருப்பிட இழப்பு, இடம்பெயர்வு உள்ளிட்ட அபாயங்களில் இருக்கின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க துலியன் நகரம் மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளதால், ஒரு காலத்தில் முக்கிய நதிநீர் துறைமுகமாகவும் இருந்துள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலம், நவாப்புகளின் காலங்களின் இந்தியாவின் முக்கிய வணிகத் துறைமுகங்களில் ஒன்றாக இருந்துள்ளது.
இந்த துறைமுகத்தின் மூலம் வங்காளதேசம் மற்றும் மற்ற நாடுகளுக்கும் வாணிபம் செய்யப்பட்டது. சணல் வர்த்தகம், மெல்லிய பருத்தி துணிகள், படகு கட்டுதல் போன்றவற்றிற்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகவும் இருந்துள்ளது. அப்போது வங்கத்தின் முக்கிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது.
பிரிட்டிஷ் காலங்களில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை கலாச்சாரம் மற்றும் அறிவுசார் மையமாகவும் இருந்துள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற இந்தியாவின் சிறந்த இயக்குநரான சத்யஜித் ரே, தனது பல திரைப்படங்களுக்கு இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நிம்திதா ராஜ்பாரியில் படமாக்கியுள்ளார். நிறைய சிறப்புகள் துலியன் நகரில் இருந்தாலும் தற்போது அது அழிந்துக்கொண்டே வருகிறது.
நதியின் பிடியில் சிக்கியுள்ள நகரம்:
துலியன் நகரின் அழிவு இன்றல்ல, 1952 ஆம் ஆண்டு வாக்கிலேயே கங்கை நதி துலியன் ரயில் நிலையம் மற்றும் பிரதான சந்தையை நிரந்தரமாக மூழ்கடித்தது. பின்னர் 1970-களில் ஃபராக்கா தடுப்பணை கட்டப்பட்ட பின், நதி அரிப்பு வேகமானது. 1980 ஆம் ஆண்டு வாக்கில் நகரின் சுற்றுப்புறங்களும் நதியின் ஆக்கிரமிப்பில் கரைந்தன. தரவுகளின்படி 2025 ஆம் ஆண்டில் மட்டும் 3953 ஏக்கர் நிலம் கங்கைக்குள் மூழ்கிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.
நதியின் ஆக்கிரமிப்பால் வீடுகள், சந்தைகள், விவசாய நிலங்கள் அழிந்த பின்னர் அதன் பொருளாதாரமும் மாறிவிட்டது. விவசாயம் மற்றும் நெசவுத்தொழிலை முதன்மையாக கொண்ட உள்ளூர் மக்கள் இப்போது பீடி தயாரிப்பை மட்டும் நம்பியுள்ளனர். இது அவர்களின் எதிர்காலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடங்களும் நதியில் மூழ்கி விட்டதால், மாணவர்கள் வீடுகளிலும் குடிசைகளிலும் வகுப்புகள் நடக்கிறது.
மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், கல்வியின் முக்கியத்துவம் அவர்களிடம் குறைந்து போய்விட்டது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 55% குடும்பங்கள் ஆறு முறைக்கும் மேலாகத் தங்கள் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
கங்கை நதியின் தீவிர ஆக்கிரமிப்பிற்கு மத்தியிலும் உள்ளூர் வாசிகளுக்கு, கங்கையின் மீதான அன்பு குறையவில்லை. அவர்கள் தாங்கள் வணங்கும் கங்கா மாதாவின் அருகிலேயே வாழ விரும்புகின்றனர். தாங்கள் இழந்த நிலங்களை மீண்டும் ஒருநாள் கங்கை தாய் விடுவிப்பாள் என்று நம்புகின்றனர்.அப்போது மீண்டும் தங்களின் பூர்வீக இடங்களில் வசிக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இயற்கையை கட்டுப்படுத்துவது கடினம் என்றாலும் சில திட்டங்கள் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்கள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். துலியன் நகரத்திற்கு வெகு தூரத்தில் ஒரு சில தடுப்பணைகள் கட்டுவதும், நதியின் வழியில் சில மாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலமாக, துலியனின் நடைபெறும் அழிவினை தடுக்கமுடியும்.