
இந்திய தேசியப் பறவை எது என்றால் மயில் என்று சொல்லி விடுவீர்கள். இந்திய தேசிய நீர்வாழ் விலங்கு எது? என்று கேட்டால் யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
தென்னாசிய ஆற்று ஓங்கில் (Platanista Gangetica) எனப்படும் கங்கை டால்பின்கள் (Ganges River Dolphin) தான் இந்திய தேசிய நீர் வாழ் விலங்காகும். இது நன்னீரில் வாழும் ஓங்கில் இனமாகும். இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொதுவாகக் காணப்படுகிறது, இதனை மேலும், கங்கை ஆற்று ஓங்கில் மற்றும் சிந்து ஆற்று ஓங்கில் என்று இரு கிளை இனங்களாக பிரிக்கலாம்.
1970 முதல் 1998 ஆம் ஆண்டு வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 ஆம் ஆண்டில் அவை தென்னாசிய ஆற்று ஓங்கில் இனத்தின் துணையினங்களாக வகைப்படுத்தப்பட்டன.
கங்கை ஆற்று ஓங்கில் பெரும்பாலும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் பாய்கின்ற நேபாளம், இந்தியா, வங்களாதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து ஆற்று ஓங்கில், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளில் காணப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு, கங்கை ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது. சிந்து ஆற்று ஓங்கிலை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது. மேலும், கங்கை ஆற்று ஓங்கிலை கவுகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.
கங்கை ஓங்கில்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் அவை பார்வையற்றவை. தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையைக் கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக் கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.
கங்கை ஆற்று ஓங்கில்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் ஓங்கில்கள் அதிகம். மேலும், இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.
பொதுவாக, தொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் ஆறு அருகே பயன்படுத்தப்படுகின்றன.
அவை ஆற்று நீரை மாசுபடுத்தி அதில் வாழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுபாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் ஓங்கில்களைக் கொல்லமுடியும். மேலும் அவற்றின் வாழ்விடம் முழுவதும் அழிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என்கின்றனர்.