

பொதுவாக நதி என்பது ஒரு நாட்டிற்கு செல்வச் சிறப்பு சேர்க்கக் கூடிய முக்கியமானதொரு அங்கம் எனலாம். அது, தான் பாய்ந்தோடும் வழியெல்லாம் மீன் பிடி தொழில், விவசாயம், குடிநீர் வழங்கல், போக்குவரத்திற்கு மற்றும் மதம் சார்ந்த சடங்குகள் நடத்துவதற்கு என மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிறக்க பல வழிகளில் உதவி புரியும்.
இந்தியாவில் பல்வேறு நதிகள் உற்பத்தியாகி பற்பல நன்மைகள் நல்கி வரும் நிலையில் ஒரே ஒரு நதி மட்டும் ஐந்து மாநிலங்கள் வழியே பயணித்து அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் வழங்கி அற்புதம் புரிந்து வருகிறது. அது எதுவென்றால் மிக நீளமானதும் பழமையானதும் மட்டுமின்றி அனைவராலும் தெய்வத்திற்கு இணையாக போற்றப்பட்டு வரும் புனித நதி கங்கை என்பதாகும்.
இமய மலையில் உத்தர்காண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி என்னுமிடத்தில் உள்ள பனிப்பாறைகளில் உற்பத்தியாகி பாகீரதி என்ற பெயருடன் பயணித்து, தேவப்ரயாக் என்னுமிடத்தில் அலகானந்தாவுடன் கலந்து கங்கையாக உருவெடுக்கிறது. சுமார் 2525 கிலோமீட்டர் நீளமுடன் பரந்து விரிந்து ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதிகளில் ஒன்றான கங்கை, உத்தர்காண்ட், உத்தர் பிரதேஷ், பீகார், ஜார்கண்ட் மற்றும் வெஸ்ட் பெங்கால் ஆகிய மாநிலங்கள் வழியே பாய்ந்தோடுகிறது.
இது வங்கக் கடலில் கலப்பதற்கு முன் பல கிளைகளாகப் பிரிந்து படியவைக்கும் வளமான நிலப்பகுதியே கங்கை டெல்டா. கங்கை டெல்டா உலகின் மிகப்பெரிய வண்டல் சமவெளியாகும். அரிசி விவசாயம் மற்றும், சுந்தரவனக் காடுகள் போன்ற சதுப்பு நிலக் காடுகள் செழித்தோங்கவும் இந்த டெல்டா பயன்படுகிறது. கங்கையின் விஸ்தாரமான டெல்டா பகுதிகள், ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேஷ் உள்ளிட்ட பதினோறு இந்திய மாநிலங்களில் படிந்துள்ளது பலரும் அறிந்திராத உண்மை. இதன் காரணமாகவே கங்கை, வாழ்நாள் முழுவதுக்கும் ஜீவதாரம் வளங்கக்கூடிய ஒரு புனித நதியாக போற்றப்பட்டு, அனைவராலும் வணங்கப்பட்டு
வருகிறது. வெஸ்ட் பெங்கால் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் டெல்டாக்களைப் படியச் செய்தபின் கங்கை வங்காள விரிகுடா கடலில் சங்கமமாகிறது.
கங்கை, வெஸ்ட் பெங்காலை அடையுமிடத்தில் இரண்டாகப் பிரிகிறது. அதில் ஒன்று ஹூக்ளி நதி என்ற பெயரில் கல்கத்தாவின் தென் பகுதியிலும், மற்ற பிரதான நீரோட்டமானது பத்மா என்ற பெயரில் பங்களாதேஷ் வழியாகவும் பயணத்தைத் தொடர்கின்றன. கங்கை நதியின் முப்பது மீட்டருக்கும் அதிக ஆழமான பகுதி பீஹாரின் தலைநகரமான பாட்னாவில் உள்ளது.
கங்கையும் பிரம்மபுத்ரா நதியும் இணைந்து உருவாக்கிய சுந்தர்பன் டெல்டா உலகிலேயே மிகப்பெரிய நதியோர சமவெளிப் பரப்பாகும். ஃபிரஷ் வாட்டரில் வாழக்கூடிய சில அரிய வகை டால்ஃபின் மீன்கள் கங்கையை இருப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றன. தற்போது அவை அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புனித ஸ்தலமாகிய வாரனாசி அல்லது ரிஷிகேஷிலிருந்து கங்கை நதியில் படகு மூலம் பயணம் செய்ய விரும்புபவர் களுக்கு, நதியோரம் அமைந்துள்ள அடர்ந்த சதுப்பு நிலக் காடுகளான சுந்தர்பன்ஸ் மற்றும் நதியின் புனித நீர் ஆகியவை கண்களுக்கு விருந்தாக அமைந்து இந்திய நாட்டின் அழகிய இன்னொரு முகத்தைக் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கூடும் பக்தர்களாயினும், படகிலிருந்து வலையை வீசிவிட்டு, மீனுக்காகக் காத்திருக்கும்
மீனவர்களாயினும் அனைவருக்கும் ஒரே முகம் காட்டி அருள் பாலிக்கும் கங்கா தேவி நாம் அனைவருக்கும் என்றென்றும் "மா கங்கா" தான் என்பதில் சந்தேகமே இல்லை.