

18-ஆம் நூற்றாண்டிலிருந்து பல விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் சார்ந்த பல்வேறு பொருட்களை உருவாக்கி இருந்தாலும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுநரான ஹென்றிக் பேக்லேண்ட் என்பவர் 1907ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவரே 'பிளாஸ்டிக்ஸ்' என்ற வார்த்தையை உருவாக்கியவர்.
பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவர தாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தன. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக 'பேக்லைட்’' வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
20-ஆம் நூற்றாண்டில், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலிஎதிலீன் (Polyethylene) போன்ற பல புதிய செயற்கை பிளாஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டன. அவை கட்டுமானப் பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் வாகனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
20-ஆம் நூற்றாண்டில், செலவு குறைந்த, பல்துறை பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் பரவி, நுகர்வோர் கலாச்சாரத்தை மாற்றியது. ஆனால், இன்று அதுவே சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கான முக்கிய காரணமாக மாறியுள்ளது.
உலகம் பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் செயற்கைப் பொருட்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கும் தன்மை கொண்ட பொருட்களின் தீர்வுகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அதற்கு விடை தந்துள்ளது ஜெர்மன் தொழில்நுட்பம்.
ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பர்க் (Oldenburg ) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கரிமக் கழிவுகளிலிருந்து முழுமையாக மக்கும் பிளாஸ்டிக்குகளை உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், பயிர் கழிவுகள், புல், பாசி போன்ற இயற்கை கழிவுகளை பயன்படுத்தி மருத்துவம், வாகன உற்பத்தி, பேக்கேஜிங் போன்ற துறைகளில் பயன்படும் முழுமையாக கரையக்கூடிய பிளாஸ்டிக்கை உருவாக்கி வருகின்றனர்.
இந்த திட்டம் EcoPBS என அழைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் தயாரிக்க பிபிஎஸ் - பாலிபியூட்டிலீன் சக்சினேட் (Polybutylene Succinate (PBS) ) என்ற பொருள் பயன் படுத்தப்படுகிறது. PBS என்பது சாதாரண பிளாஸ்டிக் போலவே வலிமையானது, ஆனால் சுற்றுச்சூழலில் கரையக்கூடியது என்பதே அதன் சிறப்பு.
ஜெர்மன் மத்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2.7 மில்லியன் யூரோ மானியத்தால் ஆதரிக்கப்படும் இந்த திட்டம், வழக்கமான பிளாஸ்டிக்குகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீட்டை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
டாக்டர் மெலனி வால்டர் தலைமையிலான ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் ஜூனியர் ஆராய்ச்சி குழு, கரிமக் கழிவுகளை (தோட்ட கழிவுகள், வைக்கோல் மற்றும் பாசிகள் போன்றவை) PBS ஆக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. பாலிப்ரொப்பிலீன் மற்றும் பாலிஎதிலீன் போன்ற வழக்கமான பிளாஸ்டிக்குகளைப் போலவே, இந்த பொருள் அதன் நீடித்துழைப்பு மற்றும் பல்துறைத்திறனுக்கும் பெயர் பெற்றது. இருப்பினும், முக்கிய வேறுபாடு என்னவென்றால், PBS மக்கும் தன்மை கொண்டது.
இது பிளாஸ்டிக் கழிவுகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வளர்ந்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்கிறது . குழுவின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பம் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடும், இது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் ஒரு செலவு குறைந்த மற்றும் ஆற்றல் திறன் கொண்ட தீர்வை வழங்குகிறது.
விஞ்ஞானிகள், நுண்ணுயிரிகள் மூலம் நொதித்தல் (fermentation) முறையை பயன்படுத்தி கழிவுகளை பிளாஸ்டிக்காக மாற்றுகின்றனர். குறைந்த செலவில், குறைந்த எரிசக்தியில் அதிக உற்பத்தி பெறுவது விஞ்ஞானிகளின் நோக்கம். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பிளாஸ்டிக் மாசுபாடு குறையும். மருத்துவம், வாகன உற்பத்தி, பேக்கேஜிங் போன்ற துறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று கிடைக்கும்.