

பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை மாசு ஏற்படுகிறது. அவற்றை சுவாசிப்பவர்களுக்கு பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் டையாக்ஸின் போன்ற ஆபத்தான நச்சுப்புகையை சுவாசிப்பதால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும். தனிமனித பாதிப்பு மட்டுமின்றி நிலத்தையும் நீரையும் கூட மாசுபடுத்தும் இந்த சிக்கலுக்கு ஒரு மாபெரும் தீர்வு கிடைத்துள்ளது. சண்டிகரின் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'பாலிசைக்' என்ற நிறுவனம், பிளாஸ்டிக் கழிவுகளை திரவ எரிபொருளாக (Plastic recycling) மாற்றும் முறையை கண்டுபிடித்துள்ளது.
பாலிசைக் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் குப்பையில் இருந்து திரவத்தங்கம்(liquid gold) என்று அழைக்கப்படும் எரிபொருளை தயாரிப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.
பயோ-ஆயில் அல்லது செயற்கை டீசல் போன்ற திரவ எரிபொருட்களை உருவாக்குகிறது. இது பைரோலிசிஸ்(Pyrolysis) என்ற வெப்ப சிதைவு முறையின் மூலம் செய்யப்படுகிறது.
பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் துண்டுகள் ஆக்சிஜன் இல்லாத ஒரு உலைக்குள் செலுத்தப்பட்டு, அதிக வெப்ப நிலையில் சூடாக்கப்படுகிறது. உயர் வெப்பநிலையில் பிளாஸ்டிக்கின் நீண்ட பாலிமர் சங்கிலிகள் உடைந்து, சிறிய ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளாக மாறுகின்றன. இந்த செயல்முறையின் விளைவாக உருவாகும் நீராவி குளிர்விக்கப்பட்டு திரவமாக பிரித்தெடுக்கப்படுகிறது. இது பைரோலிசிஸ் எண்ணெய் (Pyrolysis Oil) எனப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் உயர் வெப்ப நிலையில் (சுமார் 300 டிகிரிC முதல் 900 டிகிரி C வரை) சூடுபடுத்தப்படுகின்றன. அப்படி சிதைக்கும் பொழுது, அவை ஆவியாகி பின்னர் குளிர்வூட்டப்பட்டு திரவ எரிபொருளாக மாற்றப்படுகின்றன.
உலகை அச்சுறுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவு பிரச்னைக்கு, குறிப்பாக மறுசுழற்சி செய்ய முடியாது என்று கருதப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பிரச்னைக்கு இந்த பாலிசைக் நிறுவனம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பம் சிறந்த தீர்வை கண்டுபிடித்துள்ளது.
சிப்ஸ் கவர்கள், பிஸ்கட் பாக்கெட் போன்ற மெல்லிய பிளாஸ்டிக் கவர்கள் இதுவரை மறுசுழற்சி செய்யப்படாமல் குப்பை மேடுகளில் குவிந்து நச்சு வாயுக்களை வெளியிட்டு வந்தன. இந்தக் கழிவுகளை உயர்தர மூலப்பொருளாக மாற்றும் 'சுழற்சி பொருளாதாரம்' இங்கு சாத்தியமாகியுள்ளது.
இந்த ஆலையின் வெற்றிக்கு காரணம் அதன் 'காண்டிஃப்ளோ' தொழில்நுட்பம். இது ஒரு 'க்ளோஸ்டு சிஸ்டம்'. இயந்திரத்தை நிறுத்தாமல் 24/7 பிளாஸ்டிக்கை செலுத்தலாம். இயந்திரம் காற்றுப்புகாதவாறு மூடப்பட்டு இருப்பதால் பிளாஸ்டிக் எரிந்து நச்சுப் புகையை வெளியிடாது. அதற்கு பதிலாக அவை ஆவியாகி சுத்தமான எண்ணெயாக மாறும். இவ்வாறு கிடைக்கும் எண்ணெய் பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு இணையானது. இந்தத் தொழில்நுட்பம் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வாக இருப்பதுடன் வாயுக்கள் வெளியேறுவதையும் குறைக்கிறது. அத்துடன் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையையும் பெருமளவில் குறைக்கிறது.
இந்த பைரோலிசிஸ் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பிறகு டீசல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளைப் போலவே செயல்படும். இது தொழிற்சாலைகள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படலாம்.