'ஸ்வச் பாரத்' என்றழைக்கப்படும் 'தூய்மை இந்தியா இயக்கம்', தமிழகத்தில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை! ரயில் நிலையங்கள் தூய்மையாகக் காட்சியளிக்கின்றன. சென்னையில், ரயில் தண்டவாளப்பாதையின் ஓரங்களில் மல, ஜலம் கழிப்பதை மக்கள் நிறுத்தி விட்டார்களென்றே சொல்லலாம்.
இருப்பினும், ஆங்காங்கே சேர்ந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் இன்னும் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கும் செய்தியாகும். அவற்றைச் சுத்தப்படுத்த அரசும், தொண்டு நிறுவனங்களும், நலச் சங்கங்களும், தன்னார்வலர்களும் கை கோர்த்துச் செயல்பட வேண்டும். பிறக்கப்போகும் ஆங்கில ஆண்டின் முதல் நாளிலிருந்தாவது அந்த அசுத்தங்களை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதே உசிதமாகும். அப்படிச் செய்தால்தான் தூய்மை இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.
சில ஆண்டுகள் முன்புவரை, கண்ணாடி பாட்டில்கள், பழைய பொருட்களுடன் சேர்க்கப்பட்டு நல்ல விலை பெற்று வந்தன. பழைய பொருட்களை வாங்குவோர், வீட்டுக்கே வந்து, அவற்றை விலை கொடுத்து வாங்கிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ரகசியமாகக் குடிப்போர், பார்க், பீச், காலிமனை ஆகிய இடங்களில், குடித்து விட்டு வீசிச் செல்லும் பாட்டில்களையும், பழம் பொருள் சேகரிப்போர், அவர்களாகவே அவற்றைச் சேகரித்து நல்ல விலைக்கு விற்று ஜீவனம் நடத்தி வந்தனர். அப்பொழுதெல்லாம் பாட்டில்கள் மறு சுழற்சி முறைக்கு உட்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால், இன்றைய நிலையோ வேறு! அரசின் மதுக்கடைகளில், அன்றாடம் ஆயிரக்கணக்கில் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. பெருவாரியான நமது குடிமகன்கள், குடித்துவிட்டு, பாட்டில்களை பாதையோரங்களில் வீசிச் செல்கின்றனர். ஆனால், மறுசுழற்சி நிறுத்தப்பட்டதாகக் கூறி பாட்டில்களை யாருமே வாங்குவதில்லை. ஆங்காங்கே கிடக்கும் உடைந்த பாட்டில்கள் பாத சாரிகளின் கால்களைப் பதம் பார்க்கின்றன. உலகிலேயே, சர்க்கரை நோய்கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் நம் நாட்டில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களின் கால்களில் புண் ஏற்பட்டால், அதுவே அவர்கள் உயிருக்கு ஆபத்தாய் முடியுமென்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே, அரசோ அல்லது இதுவரை பாட்டில்கள் மறுசுழற்சியில் ஈடுபட்டு வந்த நிறுவனங்களோ, தாங்களாகவே முன்வந்து மறு சுழற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பாட்டில்கள் உரிய விலை பெறும். பழம் பொருட்கள் வாங்குவோர் பயனடைவர். நாடும் சுத்தமாகும். மக்களின் ஆரோக்கியமும் பெருகும்.
இல்லையென்றால், மேலை நாடுகளில் உள்ளது போல, காலி பாட்டில்களுக்கென தனியான பெரிய பெட்டிகளை, மால்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் நிறுவ வேண்டும்! உபயோகமற்ற பாட்டில்களை மக்கள் அங்கு போட ஏதுவாகும்!