
ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்பவும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்தால் மட்டுமே, இதுமாதிரியான பாதிப்புகளைக் குறைக்க முடியும். அவ்வகையில் பனிக் காலத்தில் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறது இந்தப் பதிவு.
விவசாயப் பயிர்கள் நன்றாக வளர்ந்து, அதிக மகசூலைக் கொடுக்க பல காரணிகள் துணை புரிகின்றன. அதேபோல் பயிர்களின் மகசூலைக் குறைப்பதற்கும் சில காரணிகள் இருக்கின்றன. இவை என்னென்ன என்பதைக் கண்காணித்து, அதற்கேற்ற தீர்வுகளை மேற்கொண்டால், மகசூல் குறைவதைத் தடுக்க முடியும். மகசூலைக் குறைப்பதில் முக்கியமானது தான் பனித்துளிகள்.
எதுவுமே குறைந்த அளவில் இருந்தால், பிரச்சினைகளை விரைவில் சமாளித்து விடலாம். அதுவே அதிகமாகும் நேரங்களில் தான் என்ன செய்வதென்று அறியாமல் தவிப்போம். இதன்படி பனி அதிகமாகும் சமயங்களில், அது பயிர் வளர்ச்சியை குறைத்து மகசூலைக் குறைத்து விடுகிறது. மார்கழி மாதத்தில் தொடங்கும் பனிக்காலமானது மாசி மாதம் வரை இருக்கும். இந்த காலத்தில் அதிகப்படியான பனியால், பயிர்கள் உறக்க நிலைக்குச் சென்று விடும்.
வெயில், மழை, குளிர் மற்றும் பனியை மனிதர்கள் தாங்கிக் கொள்வது போல், பயிர்களும் இவற்றைத் தாங்கிக் கொள்ளும் தன்மை படைத்தவை. பனிக்காலத்தில் தொட்டியில் வளர்க்கும் செடிகளை, அடிக்கடி இளங்காலை வெயிலில் வைப்பது நன்று.
நோய்த் தாக்குதல்:
இலைகளின் மீது பனித்துளிகள் விழும் போது, இளந்தளிர் இலைகளில் கருகல் நோய் ஏற்பட்டு வாடி விடும்; மொட்டுகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இதிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க சிறிதளவு தண்ணீரைத் தெளிக்க வேண்டும். பனிக்காலத்தில் காய்ந்த இலைகள், கொப்புகள், வாடிய மற்றும் பழுத்த இலைகள் ஆகியவற்றை கவாத்து செய்து நீக்க வேண்டும். இதன்மூலம் பனியில் இருந்து வரும் ஆபத்துகளை நம்மால் தடுக்க முடியும்.
பனியின் தாக்கம் பயிர்களின் வேர்ப் பகுதியைத் தாக்காமல் இருக்க, காய்ந்த இலைகளைக் கொண்டு மூடாக்கு போட வேண்டும். மழைக்காலத்தில் தொடர்மழை காரணமாக மண் மிகவும் இறுக்கமாக இருக்கும். இச்சமயத்தில் களைக் கொத்தியின் மூலம் மண்ணைக் கிளறி விட வேண்டியது அவசியம். இதனால் மண்ணில் காற்றோட்டம் ஏற்படும்.
செடிகள் அனைத்தும் தளர்ந்து போயிருந்தால், நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (NPK) ஆகிய மூன்று முக்கிய உரங்களின் கூட்டுக் கலவையான 19.19.19 கூட்டு உரத்தை, 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் அளவுக்கு கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யம் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால், வேப்பிலை சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். மேலும் வேர்ப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். விவசாயிகள் ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.