

தெற்காசிய பகுதிகளில் பரவலாக காணப்படக்கூடிய காடை வகை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனங்கள் தான் இந்த கௌதாரிகள்.
இந்த கவுதாரிகள் பெரும்பாலும் புதர்கள், புல்வெளிகள்,வயல்வெளிகள் போன்ற பகுதிகளில் தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கிறது. கௌதாரிகள் முட்டை போட்டு குஞ்சுகளை பொறிக்கிறது. முட்டையிடுவதற்கு தகுந்த மறைவான புதர் பகுதிகளையே விரும்பும்.
சாம்பல் நிறக் கௌதாரி, சதுப்பு நிலக் கௌதாரி, வண்ணக் கௌதாரி, கருப்புக் கௌதாரி போன்று நான்கு வகை இனங்கள் தான் பரவலாக காணப்படுகிறது. இதில் இந்தியா முழுவதும் காணப்படக்கூடிய இனம் என்றால் அது சாம்பல் நிறக் கௌதாரி தான்.
இந்த வகை பறவைகள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள பல உத்திகளைக் திறம்பட கையாளுகின்றன. கௌதாரிகளின் வாழ்வியல் தற்காப்பு உத்திகளைப் பற்றிதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
1. உருவத்தை மறைத்துக் கொள்வது!
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கௌதாரிகள் புதர்கள் அல்லது சருகுகளில் மறைந்து கொள்ளும். இதன் நிறமும் சாம்பல் நிறம் என்பதால், புதரில் ஒளிந்து கொள்வதால் அவ்வளவாக அடையாளம் காண்பது சுலபமான காரியம் அல்ல.எதிரி வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தால், கௌதாரிகள் ஓடவோ பறக்கவோ செய்யாது. அப்படியே தரையோடு ஒட்டி, கழுத்தைச் சுருக்கிக்கொண்டு கற்சிலை போல அமர்ந்துவிடும். அவற்றின் உடல் நிறம் காய்ந்த புற்களுடன் ஒத்துப்போவதால், வேட்டை விலங்குகள் அவற்றைக் கடந்து சென்றாலும் கண்டுபிடிக்க முடியாது.
2. ஓடி ஒளிதல்!
கௌதாரிகள் மற்ற பறவைகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக வேகமாக ஓடுபவை. எதிரிகள் துரத்தும் பட்சத்தில் இவைகள் நேராக ஓடாமல் குறுக்கும் நெடுக்குமாக வளைந்து ஓடும். அப்படியே ஒரு கட்டத்தில் முடியாத பட்சத்தில் ஒரு புதரிலோ அல்லது காய்ந்த சருகுகளுக்குள்ளே சென்று அமைதியாக ஒளிந்து கொள்ளும். இதனால் சுலபமாக வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறது.
3. திடீரென்று பறத்தல்!
எதிரி மிக அருகில் வந்துவிடப் போகிறது என்று தெரிந்தவுடன் ஓடிக்கொண்டிருந்த கௌதாரி திடீரென்று செங்குத்தாக மேலே பறக்க தொடங்கும். இதனால் துரத்தி வந்த வேட்டை விலங்கு குழம்பி விடும். பெரும்பாலும் கௌதாரிகள் கோழிகளைப் போலவே நடக்கவே விரும்பும். அதையும் மீறி இது போன்ற இக்கட்டான சூழ்நிலை வரும்போது மட்டுமே இவைகள் பறக்க ஆரம்பிக்கிறது.
3. முள் செடிகளில் தங்குதல்!
இரவு நேரங்களில் பூனை, நரி போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க, இவை அடர்த்தியான முள் செடிகள் அல்லது சிறிய மரங்களின் கிளைகளில் குழுவாகத் தங்கும். கவுதாரிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் மரக்கிளைகளிலேயே அமரும்.
4. எச்சரிக்கை ஒலிகள்!
கூட்டத்தில் ஒரு கௌதரி ஆபத்தை உணர்ந்தால், அது ஒரு குறிப்பிட்ட ஒலியை கீ..கி என்று எழுப்பும். இதைக் கேட்டவுடன் மற்ற அனைத்து கௌதரிகளும் விழிப்புடன் ஓடி ஒளிந்து கொள்ளும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் எச்சரிக்கை ஒலிகளைக் கேட்டும் இவைகள் சுதாரித்துக் கொண்டு ஒளிந்து கொள்ளும்.
5. எதிரியின் மனநிலையை குழப்புதல்!
தனது குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் கௌதாரி தனது இறக்கை உடைந்தது போல் எதிரிகள் முன்பு தத்தி தத்தி நடக்கும். இதைக் கண்ட எதிரி கௌதாரியை துரத்த ஆரம்பிக்கும். இந்நேரத்தில் கௌதாரி வேகமாக ஓடி ஒளிந்தோ அல்லது பறந்தோ சென்று விடும். பிறகு எல்லா குஞ்சுகளையும் கூச்சலிட்டு கூப்பிடும்.