முளைவிட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கை வீசி எறியாதீங்க!தொட்டியில் வளர்க்க டிப்ஸ்!

முளை விட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொட்டியில் நட்டு, சத்தான கீரை மற்றும் சுவையான கிழங்கு என இரட்டைப் பலன் பெறும் எளிய முறைகள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato Gardening
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato GardeningImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

கடையில் வாங்கிய சர்க்கரை வள்ளிக் கிழங்கு முளைவிட்டால் இனி குப்பையில் போடாதீர்கள்! ஒரே தொட்டியில் சத்தான கீரையையும், இனிமையான கிழங்கையும் என இரட்டைப் பலன் தரும் இந்த அதிசயக் கொடியை மிகக் குறைந்த செலவில் வளர்ப்பது எப்படி? சரியான மண் கலவை முதல் அறுவடை ரகசியம் வரை அனைத்தையும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

நம் அன்றாட உணவில் சுவையும் சத்தும் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை பயன்படுத்துகிறோம். அவற்றை நம் வீட்டு தோட்டத்திலும், தொட்டியிலும் எளிதில் வளர்த்து நமது தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு நாம் கடையில் வாங்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சில நாட்களில் முளைவிடத் தொடங்குவதை பார்த்திருப்போம். அதை தூக்கி எறியாமல், ஒரு பொருத்தமான தொட்டியில் நட்டு வைத்தால் அது பசுமையான கொடியாகப் படர்ந்து அழகைத் தருவதுடன், சத்தான கீரையும், சுவையான கிழங்கையும் தந்து இரட்டை பயனை நமக்கு வழங்கும்.

இதை நடவு செய்ய தேவையான தொட்டி மற்றும் மண்கலவை முளை விட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கை நடுவதற்கு அதிக ஆழமும், அதிக அகலமும் கொண்ட தொட்டியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் கொடியின் கீழ்ப்பகுதியில் கிழங்குகள் உருவாகவும், விரிவடையவும் அதிகமான இடம் தேவைப்படுகிறது.

தொட்டியின் அளவு குறைந்தது 12 முதல் 15 அங்குலம் கொண்ட மண் தொட்டி அல்லது குரோ பேக் ஏற்றது. தொட்டியின் அடிப்பகுதியில் அதிகப்படியான நீர் வெளியேற வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மொட்டை மாடியில் அவரைக் கொடி... பந்தல் இல்லாமல் தொட்டியில் படரவிடும் எளிய வழி!
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato Gardening

மண் கலவையானது கிழங்குகள் நன்கு திரண்டு வர உதிர் உதிரான, மற்றும் மென்மையான மண் தேவை. செம்மண் 40%, தேங்காய் நார் கழிவு அல்லது மணல் 30%, மற்றும் நன்கு மக்கிப்போன தொழு உரம் அல்லது மண்புழு உரம் 30% கலந்த கலவை மண் தேவைப்படும்.

நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு:

முளை விட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கை முழுமையாகவோ அல்லது முளைகள் இருக்கும் பகுதிகளைப் பிரித்து மண்ணில் புதைக்கலாம். முளைப் பகுதிகள் மேல் நோக்கி இருக்குமாறு சுமார் 2 முதல் 3 அங்குல ஆழத்தில் மண்ணால் மூடி லேசாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இந்தக் கொடி செழித்து வளர தினமும் குறைந்தது 4 முதல் 6 மணி நேரடி சூரிய ஒளி அவசியம். போதுமான வெளிச்சம் கிடைத்தால் மட்டுமே இலைகளும் கிழங்குகளும் ஆரோக்கியமாக வளரும்.

மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தொட்டியின் மேல் மண் காய்ந்திருப்பதை உணர்ந்து அளவாக தண்ணீர் ஊற்றினால் போதும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato Gardening
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato GardeningImage credit: Chatgpt

கொடி வளர வளர அதைத் தொட்டியின் ஓரமாகக் தொங்க விடலாம் அல்லது ஒரு சிறிய குச்சியிலோ, கம்பியிலோ தாங்கச் செய்து படர விடலாம்.

கீரையும் கிழங்கும் தரும் இரட்டைப் பயன்:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு செடியின் சிறப்பம்சமே அதன் இலைகள் (கீரை) மற்றும் கிழங்கு ஆகிய இரண்டும் உணவாகப் பயன்படுவதுதான். கொடி நன்கு வளர்ந்த பிறகு, நுனி இலைகளையும் இளம் கொடிகளையும் அவ்வப்போது கத்தரித்து கீரையாகச் சமைக்கலாம். இது மீண்டும் விரைவில் தளிர் விடும் தன்மைக் கொண்டது. கீரையில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

பொதுவாக நடவு செய்த பிறகு சுமார் 3 முதல் 5 மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதும் அல்லது கொடியின் வளர்ச்சி குன்றுவது கிழங்குகள் முதிர்ந்ததற்கான அறிகுறியாகும். அப்போது மண்ணை மெதுவாக விலக்கி, சேதமின்றி கிழங்குகளை எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீணாகும் அன்னாசி தலைப்பகுதியை எளிய முறையில் தொட்டியில் வளர்ப்பது எப்படி?
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வளர்க்க டிப்ஸ் | Sweet Potato Gardening

குறைந்த இடத்திலும், குறைந்த செலவிலும் வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரையையும், கிழங்கையும் பெறுவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கும் மனநிறைவிற்கும் சிறந்த வழியாகும்.

முளை விட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கைத் தொட்டியில் வைத்து வளர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒரு எளிய தோட்டக்கலை மட்டுமல்லாமல் அது நம் வீட்டு சமையலறைக்குள் தேவையான சத்தான கீரையையும், இனிமையான கிழங்கையும் தரும் செழிப்பான அனுபவமாகும்.