

அன்னாசிப்பழத்தை வெட்டும்போது நாம் எளிதாகக் குப்பையில் தூக்கி எறியும் தலைப்பகுதியில்தான் ஒரு புதிய செடி ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் கவனமும் பொறுமையும் இருந்தால், சமையலறையில் வீணாகும் அந்தக் கிரீடத்தைக் கொண்டே உங்கள் வீட்டுத் தொட்டியில் பசுமையான அன்னாசிச் செடியை உருவாக்க முடியும். தொடர்ந்து படியுங்கள்!
நாம் தினமும் வாங்கி உண்ணும் பழங்களில் ஒன்று இந்த அன்னாசிப்பழம். இந்த பழத்தின் தலைப்பகுதியில் அதன் குட்டி செடியை தாங்கி இருக்கும். நாம் பழத்தை வெட்டும்போது தலைப் பகுதியை முதலில் வெட்டி தள்ளி விட்டு தோல் சீவ ஆரம்பிப்போம். பழத்தை எடுத்து விட்டு எஞ்சிய பாகங்களை குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால் சற்றுக் கவனமும், பொறுமையும் இருந்தால் அப்படி தூக்கி எறியப்படும் தலைப் பகுதியையே தொட்டியில் வளர்த்து ஓர் அழகிய செடியாக வளர்க்க முடியும். அத்தகைய எளிய முயற்சிதான் அன்னாசிப்பழத்தின் கிரீடம் பகுதியைத் தொட்டியில் நட்டு வளர்ப்பது.
வெற்றிகரமான வளர்ப்பின் முதல் படி, ஆரோக்கியமான கிரீடத்தைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது.
பழத்தின் மேல் உள்ள இலைகள் வாடிப் போகாமலும், மையப்பகுதி அழுகாமலும், நல்ல பசுமை நிறத்துடன் இருப்பது முக்கியம். பிரித்தெடுக்கும்போது, இலைக் கிரீடத்தைக் கையால் பிடித்துத் திருகியோ அல்லது கூர்மையான கத்தியால் அடிப்பகுதிக்கு அருகில் வெட்டியோ எடுக்கலாம்.
வெட்டிய பகுதியில் பழச்சதை அதிகமாக ஒட்டியிருந்தால், அது மண்ணில் அழுகலை ஏற்படுத்தக்கூடும்; எனவே அதிகப்படியான சதையைச் சுத்தமாக நீக்கிவிட வேண்டும். தொடர்ந்து, தண்டின் அடிப்பகுதியில் இருந்து சுமார் 1 முதல் 2 அங்குல உயரத்திற்குச் சுற்றியுள்ள சிறிய இலைகளைப் பொறுமையாகப் பிரித்து எடுக்கும்போது, தண்டில் சிறிய புள்ளிகள் தென்படும். இவைதான் புதிய வேர்கள் உருவாகும் இடங்கள்.
இவ்வாறு தயார் செய்த தண்டுப் பகுதியை உடனடியாக மண்ணில் நடாமல், நிழலானதும் காற்றோட்டமானதுமான இடத்தில் 1 முதல் 2 நாட்கள் உலர வைப்பது அவசியம். இந்தச் சிறிய இடைவெளி வெட்டுக்காயத்தைச் சற்று காய்ந்து ஆறச் செய்து, நடவுக்குப் பின் அழுகல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
தொட்டியும் மண் கலவையும்:
அன்னாசி செடி வேர் அழுகலை எளிதில் எதிர்கொள்ளக்கூடியது என்பதால், நீர் தேங்காத தளர்வான மண் கலவையே இதற்கு ஏற்றது.
குறைந்தது 8 முதல் 12 அங்குல அகலமும் ஆழமும் கொண்ட தொட்டியைத் தேர்ந்தெடுத்து, அடியில் வடிகால் துளைகள் தடையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மண் கலவையில் செம்மண் அல்லது தோட்டத்து மண் 40 சதவீதமும், நன்கு மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் 30 சதவீதமும், நீர் வடிகாலை மேம்படுத்த ஆற்று மணல் அல்லது கோகோபீட் 30 சதவீதமும் கலப்பது சிறந்தது.
நடவும் பராமரிப்பும்: தயார் செய்த மண் கலவையைத் தொட்டியில் நிரப்பி, நடுவில் சிறிய குழி அமைத்து, இலை நீக்கிய தண்டுப் பகுதியை சுமார் 1.5 முதல் 2 அங்குலம் ஆழத்திற்கு வைத்துச் சுற்றிலும் மண்ணை லேசாக அழுத்தி விட வேண்டும். நட்ட உடனே மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு தெளித்து விடலாம். அதன் பிறகு செடியின் பராமரிப்பின் அளவு மிக முக்கியம்.
நீர் மேலாண்மை: மேல் மண் காய்ந்து போகும்போது மட்டும் அளவாக நீர் ஊற்ற வேண்டும். செடியின் மைய இலைக் குருத்தில் நீர் நீண்ட நேரம் தேங்காமல் பார்த்துக்கொள்வது பூஞ்சை மற்றும் அழுகலைத் தவிர்க்க உதவும்.
சூரிய ஒளி: செடி மண்ணில் நன்கு வேர் பிடித்தபிறகு (சுமார் 2 முதல் 3 வாரங்களுக்குப் பிறகு), தினமும் 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் துணைபுரியும். மாதம் ஒருமுறை நீர்த்த இயற்கை உரம் அல்லது மண்புழு உரத்தைத் தொட்டியின் ஓரங்களில் இட்டு வரலாம்.
பொதுவாக 3 முதல் 6 வாரங்களில் புதிய வேர்கள் உருவாகி, மையப் பகுதியிலிருந்து இளம்பச்சை இலைகள் துளிர்விடத் தொடங்கும். இது செடி வெற்றிகரமாகத் தழைக்கத் தொடங்கியதற்கான முதல் அடையாளம். இருப்பினும், தொட்டியில் வளர்க்கப்படும் அன்னாசிச்செடி முழு வளர்ச்சியடைந்து பழம் தரச் சாதாரணமாக 18 முதல் 24 மாதங்கள் ஆகலாம். அதுவரை, பசுமையான தோற்றத்துடன் வீட்டின் அழகைக் கூட்டும் தாவரமாகவும் இது நிலைத்திருக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் தொட்டியில் மழைநீர் தேங்காமல் வடிகால் திறந்திருப்பதைக் கவனித்து வந்தால், வேர் அழுகல் இன்றி நீண்ட காலம் செடியைப் பராமரிக்க முடியும்.
தூக்கி எறியப்படும் ஒரு சிறிய பகுதியிலிருந்து உயிர்பிக்கும் இந்த அன்னாசி வளர்ப்பு, தோட்டக் கலையின் எளிமையையும் பொறுமையின் மதிப்பையும் நமக்கு உணர்த்துகிறது.
பராமரிப்பும் கவனமும் இருந்தால், நம் சொந்தத் தொட்டியிலும் பசுமையும் பழமும் இணைந்த ஒரு மகிழ்வான அனுபவம் சாத்தியமாகும்.
சமையலறையில் தூக்கி எறியப்படும் ஒரு சிறிய பாகத்தைக் கொண்டே உங்கள் பால்கனி அல்லது மாடியில் பசுமையான அலங்காரத் தாவரத்தையும், காலப்போக்கில் சொந்தத் தோட்டத்தின் அன்னாசிப் பழத்தையும் அறுவடை செய்யும் நிறைவான அனுபவத்தைப் பெறுவீர்கள்.