காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் (Pedestal Rock அல்லது Mushroom Rock) என்று அழைக்கப்படுவது ஒருவகை இயற்கைப் பாறை அமைப்பாகும். இதன் பெயருக்கு ஏற்ப இப்பாறை காளானை ஒத்து இருக்கும். கடின மற்றும் மென்மையான அடுக்குகளால் ஆன பாறையானது காற்றினால் கடத்தி கொண்டு வரப்படும் மணல் துகள்களினால் தாக்கப்படுகின்றது. அப்போது மென் அடுக்குகளானது கீழ் பகுதியில் இருப்பின் மேலே உள்ள கடின அடுக்கினை விட வேகமாக அரிக்கப்படுகிறது. இவ்வாறான நீண்டகால அரிப்பினால் பாறைத்தூணானது தரையை ஒட்டி மட்டும் அரிப்புக்கு ஆளாகி, மேற்புரம் விரிந்த நிலையில் காளான் போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர். இவ்வாறான பாறைகள் பீடப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக பாலைவனப் பகுதிகளில் காணப்படும் இந்தப் பாறைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகின்றன. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பாறை வெளிப்புறத்தின் காற்றின் அரிப்பு, அதன் மேற்புறத்தை விட அதன் அடிப்பகுதியில் வேறுபட்ட விகிதத்தில் முன்னேறும். தரையில் இருந்து முதல் மூன்று அடி (0.9 மீ) க்குள் காற்றினால் பரவும் மணல் துகள்களால் ஏற்படும் சிராய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, இதனால் அடிப்பகுதிகள் அவற்றின் உச்சியை விட வேகமாக அரிக்கப்பட்டுவிடும். ஓடும் நீரும் அதே விளைவை ஏற்படுத்தும். இந்த வகை காளான் பாறைகளுக்கு ஒரு உதாரணம் இஸ்ரேலின் டிம்னா பூங்காவில் உள்ளது.
இந்தியாவில் இவ்வகைப் பாறைகள் தார் பாலைவனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோயில் வட்டம் என்னும் இடத்திலும், வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில், சிவநாதபுரம் அருகே உள்ளது குருமலை மலைப்பகுதியிலும் காளான் வடிவிலான, ஒரே கல்லால் ஆன பாறை கண்டறியப்பட்டுள்ளது.