

தமிழ்நாட்டில் நான்கு பல்லுயிர் பாரம்பரிய தலங்கள் உள்ளன. மதுரையில் உள்ள அரிட்டாப்பட்டி, திண்டுக்கல்லில் உள்ள காசம்பட்டி, ஈரோட்டில் உள்ள எலத்தூர் குளம், நாகமலை குன்று ஆகியவையே அவையாகும். இவற்றில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளம் பற்றி இப்பதிவில் காண்போம்.
21 கிராமங்கள் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள எலத்தூர் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் குளத்திலிருந்து வெளியேறும் நீர் ஓடை வழியாகச் சென்று கலக்கிறது. இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை என பலவிதமான நில அமைப்புகளில் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் என பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் இருந்தாலும் குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது.
இந்தக் குளத்தில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருப்பதோடு, வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வலசை வருகின்றன. அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக்கழகத்தின் 2024 - 2025ம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்ததோடு, இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது.
எலத்தூர் குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பல வகை பறவைகள் பகல் நேரத்திலேயே குளத்தின் நடுவில் உள்ள மரங்களிலும் நீர் பகுதிகளிலும் தரையில் உள்ள புதர் காடுகளிலும் தங்கியிருக்கிறது. இருள் சூழும் மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்குவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 77 வலசை பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதூர வலசை பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர் பறவைகளில் 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில், அதாவது அழியும் அபாயத்தில் உள்ள 9 பறவைகள் எலத்தூர் குளத்தில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது.
குளத்திற்குள் கீச்சான், கரிச்சான் குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அங்குள்ள பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக மரம், புதர், தரை என பல இடங்களில் விதவிதமான கூடுகளையும் கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இத்தகைய அரிய பொக்கிஷத்தை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது.