உலகின் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட மரம்: இம்மரத்தின் கீழ் மழையில் நின்றால் என்ன ஆகும் தெரியுமா?

The most poisonous tree in the world
hippomane mancinella tree
Published on

லகில் நச்சுத் தன்மையுடைய எத்தனையோ தாவரங்கள் இருக்கின்றன. அவற்றுள், கள்ளிச்செடி (Spurge) வகையைச் சேர்ந்த ஹிப்போமேன் மான்சினெல்லா (Hippomane Mancinella) எனப்படும் மான்சினீல் (Manchineel) மரங்களே உலகில் மிகவும் ஆபத்தான மரம் எனப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியில், சிறிய ஆப்பிள் என்று பொருள் தரும் மான்சினெல்லா (Manzanilla) என்ற சொல்லிலிருந்து இம்மரத்தின் பெயர் உருவாகியிருக்கிறது.

கரீபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த இம்மரங்கள் 15 மீட்டர் (49 அடி) உயரம் வரை வளரும் தன்மையுடையவை. இம்மரம் சிவப்பு - சாம்பல் பட்டை, சிறிய பச்சை - மஞ்சள் பூக்கள், பளபளப்பான பச்சை இலைகள் கொண்டு இருக்கின்றன. இம்மரத்தின் பழங்கள் ஆப்பிள் போன்ற தோற்றத்தில், பச்சை அல்லது பச்சை - மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மரத்தின் பழங்கள் மற்றும் இலைகள் மேலோட்டமாக, ஆப்பிள் மரத்தை ஒத்திருப்பதால் இதனை, ‘கடற்கரை ஆப்பிள்’ என்றும் அழைக்கின்றனர். கரீபியன் பகுதியைத் தவிர்த்து, அமெரிக்காவில் புளோரிடா, பஹாமாஸ், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் வடதென் அமெரிக்க பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இம்மரங்கள் காணப்படுகின்றன. தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இம்மரம் பெருமளவு அழிவுக்குள்ளாகி விட்டது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மண் அரிப்புக்கு முற்றுப்புள்ளி: நிலச்சரிவைத் தவிர்க்கும் சோலை மரங்களின் ரகசியம்!
The most poisonous tree in the world

கடற்கரை பகுதிகளிலும், உவர் சதுப்பு நிலங்களிலும் காணப்படும் இம்மரங்கள் இயற்கையாகக் காற்றுத் தடைகளை வழங்குகின்றன. இம்மரத்தின் வேர்கள், மணலை உறுதிப்படுத்தி கடற்கரை அரிப்பைத் தடுக்கின்றன. இம்மரம் இயற்கை வளத்திற்கு உறுதுணையாக இருக்கின்றபோதிலும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் அனைத்திற்கும் மிகவும் ஆபத்தான மரமாகவே இருக்கிறது.

இம்மரத்தின் தண்டு, இலை, பூ, காய், பட்டை என்று அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளை நிறத்திலான பால் போன்ற சாறு நச்சுத்தன்மையுடனும், அமிலத்தன்மையுடனும் இருக்கின்றன. இந்தச் சாறு மனிதர்கள் அல்லது விலங்குகளின் தோலில் பட்டால், அவ்விடங்களில் உடனடியாகக் கொப்புளங்கள் ஏற்பட்டு விடும். மழை பெய்யும் வேளையில், இம்மரத்தின் கீழ் நின்றிருந்தால், மரத்திலிருந்து வடியும் மழை நீருடன் இம்மரத்திலிருக்கும் அமிலத் தன்மையிலான திரவமும் கலந்து தோலில் கொப்புளங்களை ஏற்படுத்தி விடும் அபாயம் கொண்டது.

இதையும் படியுங்கள்:
கொய்யா சாகுபடியில் லாபம் கொழிக்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிகள்!
The most poisonous tree in the world

இம்மரத்தை எரித்து அழித்து விடலாமென்றாலும், இம்மரத்தினை எரிப்பதால் ஏற்படும் புகை கண்களைக் குருடாக்கி விடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இம்மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால், கடுமையான இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் இரைப்பை, குடல் அழற்சிகளையும் ஏற்படுத்தி அழிவுக்கு வழிவகுத்து விடும். சுவாசப் பாதைகளை உடனடியாக முடக்கிவிடும் தன்மை கொண்டது என்றும் சொல்லப்படுகிறது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்திற்கும் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இம்மரத்தில் கருப்பு முள்ளந்தண்டு உடும்பு (Ctenosaura similis) எனும் உயிரினம் மட்டும் இம்மரத்தின் பழங்களை உட்கொண்டு, அம்மரத்திலேயே வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இம்மரத்தில் இத்தனை ஆபத்துகள் இருந்தபோதிலும், கரீபியன் தச்சுப் பணியாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இம்மரத்தின் அடிப்பகுதியில் நெருப்பு வைத்து, இம்மரத்தைக் கீழே விழச் செய்து, அதனை நன்றாகக் காய வைத்து, அதன் நச்சுத்தன்மைகளைக் அகற்றி, மரத்திலான தளவாடப் பொருட்கள் செய்வதற்குப் பயன்படுத்தி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com