
இந்தியாவின் வடபகுதிகளில் பாயும் அனைத்து முக்கிய நதிகளும் இமயமலையில் இருந்து உருவாகி வருபவை. இமயமலையின் பனிப்பாறைகள் உருகி ஏராளமான ஆறுகளையும் நதிகளையும் உற்பத்தி செய்கின்றன. மலையிலிருந்து வரும் இந்த ஆறுகள் சமவெளிகளில் பாய்ந்து செழிப்பாக்கி கடலில் கலக்கின்றன. பல நதிகள் வளமான பெரிய நிலப்பரப்பில் காடுகளை உருவாக்கியுள்ளன. இமயமலை காடுகள் பல்வேறு அரிய வகை உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
வெப்பமயமாதல், சுற்றுச்சுழல் சீர்கேடுகள், பெருகி வரும் நீர்மின் உற்பத்தி நிலையங்கள், காற்று மற்றும் நதிநீரில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் சுற்றுச்சுழல் பாதிக்கிறது. இதனால் இமயமலையை வாழ்விடமாக கொண்ட விலங்குகள் பெரிய அபாயத்தை எதிர்கொள்கின்றன.
இவை உணவு, தங்குமிடம் மற்றும் இனப் பெருக்கத்திற்காக நதிக்கரை ஓர வாழிடங்களை நம்பியுள்ளன. இமயமலையில் உள்ள தாராலி பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கூழாங்கல் நதிப்படுகை, ஏழுக்கும் மேற்பட்ட நதிக்கரைப் பறவைகளின் தாயகமாக உள்ளது.
இமயமலை நதிக்கரையில் பறவைகளின் வாழ்விடம் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் குழு ஆய்வு நடத்தியது. 2014 மற்றும் 2019 க்கு இடையில் கங்கையின் முக்கிய மூலநதியான பாகீரதி நதிப் படுகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாகீரதி நதி செல்லும் வழியில் உள்ள ரிஷிகேஷ், தேவ்பிரயாக், நியூ தெஹ்ரி, உத்தரகாசி மற்றும் கங்கோத்ரி ஆகிய முக்கிய பகுதிகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்பட்டது.
வேகமாக தண்ணீர் ஓடும் பகுதிகள், பாறைகள் அதிகமாக காணப்படும் இடங்கள், கூழாங்கற்களைக்கொண்ட நதிக்கரைகள் மற்றும் நதிக்கரை காடுகளில் பறவையினங்கள் விரும்பி வாழ்கின்றன. இந்த பகுதியில் பழுப்பு நிற டிப்பர், ப்ளம்பியஸ் வாட்டர் ரெட்ஸ்டார்ட், வெள்ளை மூடிய ரெட்ஸ்டார்ட், சிறிய ஃபோர்க்டெயில், புள்ளிகள் கொண்ட ஃபோர்க்டெயில் போன்ற சில சிறிய பறவைகள், மரங்கொத்தி பறவைகள், வாலாட்டி குருவிகள் மற்றும் ரெட்ஸ்டார்ட்கள் உட்பட 12 பறவை இனங்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டது.
ஐந்து வருடங்களாக ஆய்வு செய்ததில் இருந்து கிடைத்த முடிவுகள் கவலையளிக்கும் வகையில் இருந்தது. ஆய்வு முடிவில் ஐந்து பறவை இனங்களின் எண்ணிக்கை 5-10% வரை குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக நதி வாழ்விடங்களை பெரிதும் நம்பியுள்ள பழுப்பு நிற டிப்பர் மற்றும் ப்ளம்பியஸ் வாட்டர் ரெட்ஸ்டார்ட் போன்ற இனங்கள் எண்ணிக்கையில் சரிந்து இருந்தது.
நதிநீர் பறவைகளின் குறைந்து வரும் எண்ணிக்கை , தேசிய பறவைகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.
இது இமயமலை நதிகளை பாதிக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கு எதிரான விளைவுகளை காட்டுகிறது. ஆனாலும் அனைத்து பறவை இனங்களும் எண்ணிக்கையில் குறையவில்லை. நீல விசில் த்ரஷ் போன்ற சில பறவைகளின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. இந்த பறவைகள் மாறி வரும் சுற்றுச்சுழலை எதிர்கொண்டு வாழ திறன் கொண்டதாக இருக்கலாம்.
பொதுவாக உயரமான இடங்களிலிருந்து நதிகள் வரும் வழியில் அதிகளவில் பறவை இனங்கள் உள்ளது. இந்த இடங்களில் பறவைகளின் வாழ்விற்கு அச்சுறுத்தல் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். சாம்பல் நிற வாக்டெயில், வெள்ளை வாக்டெயில், நதி லேப்விங் மற்றும் பொதுவான மணல் பைப்பர் போன்ற பிற பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக கோடையில் இமயமலை நதிக்கரை பகுதிகளுக்கு வந்து தங்குகின்றன.
நீர்மின்சார நிலையங்கள், அணைகள் ஆகியவற்றிற்காக நதியின் இயற்கையான ஓட்டத்தை மாற்றி, ஆழமான மற்றும் அகலமான பகுதிகளை உருவாக்குகின்றனர். தெளிவான, வேகமாக ஓடும் நதிப் பகுதிகளை விரும்பும் அனைத்து நதிப்பறவை இனங்களும் இவற்றைத் தவிர்க்கின்றன. இது போன்ற செயற்கை மாறுதலில்,
நதிக்கரைகளில் கூடுகட்டி வாழும் பறவைகள் வாழ்விடங்களை இழக்கின்றன. நதிநீர் பறவைகள் நாட்டின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. அவற்றின் வாழ்விடங்கள் மேலும் பாதிக்காத வண்ணம் செயல்பட அரசு திட்டம் வகுக்க வேண்டும்.