காடுகள் வளர்ப்பில் முக்கிய பங்காற்றும் 'இருவாச்சி' பறவைகள்!

Hornbill Birds
Hornbill Birds
Published on

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பறவை இனங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனித்துவமான வாழ்வியல் முறைகளைபெற்றுள்ளன. அப்படி தனித்துவமான வாழ்வியல் முறைகளை கொண்டுள்ள மலைவாழ் பறவை தான் இந்த இருவாச்சி பறவைகள். மலைகளில் வாழக்கூடிய மிகப்பெரிய பறவை இனங்களில் இதுவும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மரங்கள் அடர்ந்த காடுகளை வளர்ப்பதில் இந்த இருவாச்சி பறவைகளின் பங்களிப்பு மிகவும் அதிகம். எனவே இத்தகைய இருவாச்சி பறவைகளைப் பற்றியும், பல்லுயிர் பெருக்கத்தில் அவற்றின் பங்களிப்பை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் இதுவரை பெயரிடப்படாத நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளனவாம் . இருவாச்சி பறவைகள் பல்வேறு விதைகளை சாப்பிட்டு எச்சமிடும் போது நூற்றுக்கணக்கான புதிய தாவரங்கள் வளர்வதோடு பல்லுயிர் பெருக்கமும் மிக எளிதில் நடைபெறுகிறது. எனவே இத்தகைய இருவாச்சி பறவைகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடையாளமாகவே கருதப்படுகின்றன. உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவை இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 9 வகைகளும், தென்னிந்தியாவில் 4 வகைகளும் காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் தீவுகள் போன்ற இடங்களில் இருவாச்சி பறவைகள் காணப்படுகின்றன. மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர், முதுமலை பகுதிகளிலும் இருவாச்சி பறவைகள் காணப்படுகின்றன. கேரள மாநிலம் தனது மாநில பறவையாகவும் இருவாச்சி பறவையை அறிவித்துள்ளது.

காடுகள் பரவுவதற்கு காரணமான விதைப் பரவலில் முக்கிய பங்காற்றும் இத்தகைய இருவாச்சி பறவைகள் அதன் அழகான இறகு மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழும் இருவாச்சி பறவைகள் தற்போது அழியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருவாச்சி பறவைகளின் மற்றுமொரு தனித்துவமான பண்பு என்னவென்றால் இப்பறவைகளின் வாழ்வியல் முறைகள் தான். இருவாச்சி பறவைகள் ஒரு முறை தன் இணையோடு ஜோடி சேர்ந்து விட்டால் வாழ்நாளின் இறுதிவரை தனது இணையை மாற்றிக் கொள்வதில்லை.

இரை தேடுவது முதல் இளைப்பாறுவது வரை எப்பொழுதும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே இருக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் ஆண் பறவை இறந்து விட்டால் கூடவே பெண் பறவையும் தன் குஞ்சுகளோடு இறந்து விடுமாம். காதலையும் பாசத்தையும் வெளித்துப்படுத்துவதில் தனித்துவமான இந்த இருவாச்சி பறவைகள் உன்னதமான காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. அதனால்தான் மலைவாழ் மக்கள் எப்பொழுதும் திருமணமான தம்பதிகளை வாழ்த்தும்போது "இருவாச்சி பறவைகளைப் போல் வாழுங்கள்" என்று வாழ்த்துவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல இனப்பெருக்க காலத்தில் ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டு பெண் பறவை இறந்து விட்டாலும் ஆண் பறவையும் அதனோடு சேர்ந்து இறந்து விடுமாம்.

இதையும் படியுங்கள்:
ஆண் பாதி, பெண் பாதி… அறிய வகை பறவை கண்டுபிடிப்பு!
Hornbill Birds

ஆண் பறவையும் பெண் பறவையும் முட்டையிடுவதற்கு சில நாட்கள் முன்பே மனிதர்கள் எளிதில் காணமுடியாத மலை காடுகளில் இனப்பெருக்கம் செய்வதற்காக உயரமான மரங்களைத் தேடி தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்வு செய்யும் மரங்கள் பொந்து உடைய மரங்களாக இருக்க வேண்டும். மர பொந்துகளை தேர்வு செய்த பிறகு பெண் பறவை அந்தப் பொந்தினுல் சென்று விடுமாம். பெண் பறவை உள்ளே சென்ற பிறகு ஆண் பறவை களிமண்ணை எடுத்து வந்து தனது உமிழ் நீரை பயன்படுத்தி பெண் பறவைக்கு உணவு ஊட்டுவதற்காக சிறிய துளையை மட்டும் விட்டுவிட்டு பொந்தை சுற்றி சுவர் போன்று மண்ணை பூசி அடைத்து விடுமாம். இரை தேட சென்ற பிறகு வேறு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என கருதி இவ்வாறு செய்வதாக சொல்லப்படுகிறது.

உள்ளே உள்ள பெண் பறவை தன் அலகால் கொத்தி தன் உடலில் உள்ள இறகுகளை எல்லாம் உதிர்த்துவிட்டு, அந்த இறகுகளை பயன்படுத்தி மெத்தை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடுமாம். பின் அந்த முட்டைகளை 7 வாரங்கள் வரை அடைகாக்குமாம். இந்த இனப்பெருக்க காலம் முழுவதும் ஆண் பறவை தான் இரை தேடி வந்து பெண் பறவைக்கு ஊட்டிவிடும். அத்திப்பழம், கொட்டைகள், சிறு பறவைகள், எலி போன்றவற்றை இருவாச்சி பறவைகள் உணவாக உட்கொள்ளும். எனவே ஆண் பறவை இத்தகைய உணவுகளை தேடிக் கொண்டு வந்து கூட்டில் உள்ள துவாரம் வழியே பெண் பறவைக்கு ஊட்டி விடும்.

இதையும் படியுங்கள்:
காதலிக்காக வீடு கட்டி, வண்ணம் பூசும் பறவை! அடேங்கப்பா, இதுவல்லவோ உண்மையான காதல்!
Hornbill Birds

மேலும் இந்த இனப்பெருக்க காலம் முழுவதும் ஆண் பறவை ஊட்டினால் மட்டுமே பெண் பறவை உணவை உண்ணுமாம். ஒருவேளை இரை தேடிப் போன ஆண் பறவை ஏதேனும் வேட்டை தாக்குதலுக்கு உட்பட்டு இறந்து போனால், ஆண் பறவை வராததை அறிந்து கொண்டு பெண் பறவையும் தனது குஞ்சுகளோடு இறந்து விடுமாம். இரை தேடுதலுக்காக செல்லும் ஆண் பறவைகள் உணவு தேடுதலுக்காக பல கிலோமீட்டர் தூரம் வரை கூட பறந்து செல்லுமாம். பெண் பறவை முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து, அவை வளர்ந்ததும் கூட்டை உடைத்துக் கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து பறந்து விடுமாம். வசீகரமுள்ள ஆரஞ்சு நிற அலகுகளை கொண்டுள்ள இத்தகைய இருவாச்சி பறவைகள் உன்னதமான காதலுக்கு எடுத்துக்காட்டாகவும், காடுகள் வளர்ப்பில் முக்கிய பங்கேற்பாளராகவும் திகழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com