
இயற்கை நமக்கு பல அதிசயங்களை கொடுத்திருக்கிறது. கண்ணிற்கு இனிமை தரும் வண்ண வண்ண நிறமுள்ள பூக்கள், செடி கொடிகள், ஆறுகள், மலைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். சில சமயங்களில் நமக்கு அவற்றை பார்க்கும் போது எப்படி இப்படி உருவாகிறது என்ற சந்தேகம் எழும்? அப்படி நமக்கு வரக்கூடிய சந்தேகங்களில் ஒன்று தான் இந்த இளநீர். நம்மில் நிறைய பேருக்கு மனதில் இந்த கேள்வி வரும் - தேங்காய்குள் தண்ணீர் எப்படி வருகிறது? தெரிந்து கொள்வோமா?
இயற்கை நமக்கு கொடுத்த மிகச் சிறந்த பானம் தான் இந்த இளநீர். பொதுவாகவே கோடை காலத்தில் அனைவரும் இளநீரை விரும்பி குடிக்கிறார்கள்.
உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும் ஆற்றல் இளநீருக்கு இருக்கின்றது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தாது.
நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது, ஒரு இளநீரை குடித்தால், உடனடியாக உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இளநீரில் வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), பி3 (நியாசின்), பி1 (தியாமின்), பாந்தோதெனிக் அமிலம், ஃபோலிக் அமிலம், பயோட்டின், பொட்டாசியம், சோடியம் ஆகியவை உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களும் உள்ளன.
தேங்காய்குள் இருக்கும் தண்ணீர், விதையிலிருந்து உருவாகும் ஒரு திரவமாகும். இது தேங்காயின் மென்மையான தோலில் படிந்து, இளநீராக மாறுகிறது.
இந்த நீர் தான் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான், நன்கு வளர்ந்து தேங்காயாக மாறுகிறது.
தென்னை மரம் தன் செல்கள் மூலம் வேர்களில் இருந்து தண்ணீரை எடுத்து, இந்த பகுதிக்கு கொண்டு வருகிறது. இந்த நீரில் எண்டோஸ்பெர்ம் கரையும்போது, கெட்டியாகிவிடும். தாவர வேர்களால் உறிஞ்சப்படும் நீர், செல்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, காய்களில் நீர் கூறுகளை உருவாக்குகிறது. தேங்காய் முதிர்ச்சியடையும்போது, தண்ணீர் வற்றத் தொடங்குகிறது.
பின்னர், இது முதலில் வெள்ளை கூழ் வடிவில், பின்னர் உலர் தேங்காய் வடிவில் உருவாகிறது. இதன் காரணமாக, முற்றிய தேங்காயில் தண்ணீர் பெரும்பாலும் இருப்பதில்லை.
மிதமான அளவு, சுத்தமான பச்சை நிறமுடைய இள தேங்காயை தேர்வு செய்தால் அதில் நீர் அதிகம் இருக்கும். பழுப்பு நிற கனமான ஓடுடைய தேங்காய் முற்றியதாக இருக்கும். இதில் நீர் அதிகம் இல்லாமல், உள்ளே தேங்காய் அதிகமாக இருக்கும்.