
அண்டார்டிகாவை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் வாழும் பறவை இனம் காகம் ஆகும். பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியாக காகங்கள் திகழ்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தமக்கான பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தன்மை காகத்திற்கு உண்டு. மிகவும் கடினமான சூழலைக் கூட தாண்டிச் செல்லக்கூடிய பண்பு இவற்றிடம் உண்டு. தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க பலவித அணுகுமுறைகளைக் கையாளும் தனித்துவமான குணம், இவற்றைத் தவிர வேறு எந்தப் பறவையினத்திற்கும் கிடையாது.
காகம் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க இலைகள், குச்சிகள் மற்றும் பலவித பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் தங்களுக்கான படைப்பாற்றல் திறன் அதிகமாக உள்ளன என்பதை அவை உணர்த்துகின்றன. இவை, இலைகள், குச்சிகளை வைத்தே தங்களுக்கான உணவு, உறைவிடத்தைத் தேடிக் கொள்கின்றன. இது காகங்களின் மிக உயர்ந்த சிறப்பு குணமாகும்.
காகங்களுக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு. இவை எந்தவித சூழலையும் எதிர்கொண்டு வாழும் திறன் படைத்தவையாகும். மனித முகங்களை அதிக நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய சக்தி காகத்திற்கு உண்டு. இவற்றுக்கு உணவுகள் கிடைக்கும் இடங்களை நன்கு ஞாபகம் வைத்துக் கொண்டு தங்களுக்குத் தேவையான வேளைகளில் அங்கு சென்று உண்டு விட்டு திரும்பி வரும். தங்களின் சுற்றுச்சூழலின் தன்மையை முழுமையாக கவனத்தில் வைக்கக்கூடிய புத்திசாலித்தனத்தைப் பெற்றவை காகங்கள்.
இவற்றுக்கு சமூக புத்திசாலித்தனமும் உண்டு. எப்போதும் கூட்டம் கூட்டமாகவே வாழும். இதனால் மற்ற ஆபத்துகளிலிருந்து தப்பிக்கவும், விஷயங்களைப் பறிமாறிக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது. ஒற்றுமையாக இருக்கக்கூடிய குணம் படைத்த காகங்கள், தங்கள் கூட்டத்தின் நெருக்கத்தையும் முக்கியத்தையும் உணர்ந்துள்ளது.
இவை தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதில் மிகவும் சிறந்து விளங்குகின்றன. காகங்கள், கரைதல் மூலம் தங்களின் தகவல் பரிமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமல்லாமல், உடல் மொழியிலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய தனித்தன்மை பெற்றவை காகங்கள்.
கிராமமானாலும், காட்டுப் பகுதியானாலும் காகங்களால் அந்த சூழலுக்கேற்றபடி வாழ முடிகிறது. குறுகிய காலத்திலேயே புதிய சூழலை ஏற்று வாழக்கூடிய தனித்தன்மை காகங்களுக்கு உண்டு. இந்தத் தனித்தன்மையினால்தான் உலகம் முழுவதும் காகங்களால் சிறப்பாக வாழ முடிகின்றது.