
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் குறிஞ்சி பூவை குறிப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் உவமையாகக் கூறுவார்கள். அதுவே நமக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் ஒரு தாவரத்தைப் பற்றி அறிந்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? ‘ஆண்டிஸ் ராணி’ என்று அழைக்கப்படும், 50 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ஒரு மலர்தான், நூற்றாண்டு காலத்திற்கு ஒருமுறை மலரும் அந்த அதிசய தாவரமாகும்.
உள்ளூர் மக்களால் டைட்டங்கா மற்றும் இலகுவாஷ் என்று இந்த தாவரம் அழைக்கப்படுகிறது. ‘புயா ரைமண்டி’ என்று அறிவியல் பெயர் கொண்ட இந்தத் தாவரம் தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. இந்தத் தாவரம் ராட்சசத்தனமாக வளரும் தன்மை கொண்ட ப்ரோமிலியாட்டின் பெரிய இனமாகும். இதன் ஆண்டிஸ் ராணி என்ற பெயருக்கு ஏற்ப, இந்தத் தாவரம் உயரமான ஆண்டிஸ் மலைத் தொடர்களில் காணப்படுகிறது.
பெரு மற்றும் பொலிவியா நாடுகளில் 4000 மீட்டர் உயரத்தில் பரந்து விரிந்துள்ள ஆண்டிஸ் மலைத்தொடர்களில் இது கண்டறியப்பட்டது. ‘அன்டானியோ ரைமான்டி’ என்னும் இத்தாலிய தாவரவியல் அறிஞர் முதன் முதலில் இதை வகைப்படுத்தியதால், அவர் பெயரே இதற்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஆண்டிஸ் ராணி தாவரம் 3000 மீட்டர் முதல் 4800 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் வளருகிறது.
புயா ரைமாண்டி தாவரத்தில் பாதிக்கும் மேற்பட்டவை பெருவின் டைட்டான்காயோக் தாவர பாதுகாப்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இந்தத் தாவரம் முன்பு மாமிச உண்ணியாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறிய வகை உயிர்களைத் தின்று இது வாழ்ந்ததாக ஒரு கூற்றை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக இதன் இனத்தை சேர்ந்த புயா சிலேன்சிஸ் என்ற தாவரம் செம்மறி ஆடுகளை விரும்பி உண்பதாக ஒரு சந்தேகம் ஆய்வாளர்களுக்கு உண்டு.
பொதுவாக, ஆண்டிஸ் ராணியின் ஆயுட்காலம் 80 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை இருந்தாலும், இது சராசரியாக பூக்கக்கூடிய காலம் நூறு ஆண்டுகள் வரை உள்ளது. சில நேரங்களில் இது 40 ஆண்டுகளில் கூட மலரும். அதிகபட்சமாக 150 ஆண்டுகள் கழித்து கூட மலர்ந்துள்ளது. அதிக வெப்பமும் அதிக குளிரும் இல்லாத இதமான காலநிலையில் இது செழிப்பாக வளரக்கூடியது. ஒரு நூற்றாண்டு காலம் சராசரியாக வாழ்ந்தாலும் ஒரு முறை பூத்த பின்னர் இதன் வாழ்நாள் முடிந்து விடுகிறது.
இது ஒரு முறை பூக்கும்போது 6 மில்லியனில் இருந்து 12 மில்லியன் வரை விதைகளை தன்னுள் கொண்டிருக்கும். இதன் விதைகள் மிகவும் சிறியவை. அவை 3 செ.மீ. அளவில் முட்டை வடிவக் கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஆண்டிஸ் ராணியின் மஞ்சரி 6 மீட்டர் உயரம் வரை வளர்ந்து மிகப் பெரியதாக இருக்கும். இதில் வெள்ளை, ஊதா, பச்சை நிறம் கலந்த இதழ்களைக் கொண்ட சிறிய பூக்கள் கூட்டமாக மலர்கின்றன. இதன் இதழ்கள் 6 முதல் 9 செ.மீ. நீளம் கொண்டவை. ஒவ்வொரு பூவிலும் மூன்று இதழ்களும் மூன்று புல்லி வட்டங்களும் இருக்கும். இந்த புல்லி வட்டங்கள் ஈட்டி வடிவத்தில் இருக்கும்.
இந்த மலர்கள் பழங்களாக மாறி ஜூலை மாதத்தில் முற்றத் தொடங்கும். நன்கு முற்றி விதைகள் பரவ ஆரம்பிக்கும் நேரத்தில் தாவரம் இறந்து விடும். இது ஒரு முறை மட்டுமே பூக்கும் மோனோகார்ப் வகை தாவரம் ஆகும். மிகவும் பிரம்மாண்டமான முறையில் மலரும் இந்தத் தாவரம் சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாறுபாடு காரணமாக எதிர்காலம் பாதிக்கப்படுவதாக உள்ளது.