
மக்களின் கைகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது நெகிழிப்பைகள். ஒவ்வொரு நாளும் அவை மலைபோல குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும் பூமியின் மண் வளத்துக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளில் இருந்து விடுபடும் சர்வதேச நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இன்றிலிருந்து மாற்றத்தைத் தொடங்குவோமே.
பிளாஸ்டிக் பைகள் சிதைவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகும். அவை நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும், காலநிலை மாற்றத்தை பாதிக்கிறது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. வனவிலங்குகள் அதைத் தின்று உயிரைவிடுகின்றன. அவை மைக்ரோ பிளாஸ்டிக்காக துண்டு துண்டாக உடைந்து நீர் வடிகால்களை அடைக்கின்றன. நுண்ணிய பிளாஸ்டிக் நீரின் வழியாக நமது உடலுக்குள் நுழையும்போது ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளுக்கு அளவில்லை.
மனிதர்கள் மனது வைத்தால் மாற்றம் வரும். மனிதர்களால் நிச்சயமாக இந்த நெகிழிப்பைகளை தவிர்க்க முடியும். பூமிக்கும் சக உயிரினங்களுக்கும் மனித குலத்திற்கு நன்மை செய்யமுடியும்.
எப்போது வெளியில் செல்ல வேண்டி இருந்தாலும் கையில் ஒரு துணிப்பையுடன் வெளியில் செல்லவேண்டும். பாக்கெட்டில் அல்லது கைப்பையில் எப்போதும் ஒரு துணிப்பை இருந்தால் காய்கறியோ பழங்களோ வாங்கி வரலாம். சணல் பைகள், துணிப்பைகள் கேன்வாஸ் பைகள் போன்ற மறுசுழற்சிக்கு ஏற்ற பைகளை உபயோகிக்கலாம். மறுமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை தனியாக வைத்து அவற்றை மீண்டும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை வாங்கக்கூடாது. மறுக்க வேண்டும். தெருவோரப் பூ வியாபாரிகள் முதல் காய்கறிக் கடைக்காரர்கள், இறைச்சிக் கடைக்காரர்கள் என எல்லோரும் மலிவு விலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி மறுக்க வேண்டும்.
ஷாப்பிங் பழக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருள்களை மொத்தமாக வாங்கிப் பழகவேண்டும். அரிசி, தானியங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முக்கியப் பொருள்களை மொத்த விற்பனைக் கடைகள் அல்லது மளிகைக் கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளலாம். இது பல சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் மற்றும் பைகளுக்கான தேவையை குறைக்கிறத.
பிளாஸ்டிக்கை விட வேறு பேக்கேஜிங்கை தேர்வு செய்யலாம். கண்ணாடி, உலோகம், காகிதம், அட்டைப்பெட்டியில் பேக் செய்யப்பட்ட பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். கண்ணாடி பாட்டில்களில் பால் வாங்கலாம். ஷாம்பூவை சாஷேக்களில் வாங்குவதைவிட பாட்டிலில் வாங்கலாம். உள்ளூர் விற்பனையாளர்களை ஆதரிக்க வேண்டும். விவசாயிகள் சந்தையில் கொண்டு வந்து விற்கும் காய்கறிகளை வாங்கலாம். ஏற்கனவே வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் மேலும் வாங்குவதை குறைக்க உதவுகிறது.
பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தும்போது அவற்றின் முறையாக குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் வகைகளுக்கு பதிலாக சிலிக்கான் பைகள், கண்ணாடிக் கொள்கலன்கள், ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.
மனிதர்கள் சோம்பேறித்தனத்தை கைவிட்டு விட்டு முயற்சி எடுத்தால் கூட போதும். கையில் துணிப்பையுடன் வெளியில் செல்லப் பழகவேண்டும். ஒவ்வொருவரும் எடுக்கும் சிறு முயற்சி இந்தப் பூமியையும் மனிதர்களையும் விலங்குகளையும் மண்ணையும் காற்றையும் நீர் நிலைகளையும் காப்பாற்றும் என்பதில் எத்தனை பெரிய மகிழ்ச்சி அடங்கி உள்ளது.