வியப்பூட்டும் கங்காரு: வயிற்றுப் பையில் மூன்று குட்டிகளை ஒரே நேரத்தில் உருவாக்கி வளர்க்கும் இயற்கையின் அதிசயம்!

ஒரே பெண் கங்காருவில் ஒரே நேரத்தில் கருவும், பையில் ஒட்டிய சிசுவும், வெளியே சென்று திரியும் குட்டியும் – இரண்டு ஆண்டில் மூன்று சந்ததிகளை உருவாக்கும் இயற்கையின் வியப்பூட்டும் யுக்தி
incredible-kangaroo-pouch
incredible-kangaroo-pouch
Updated on

கொம்பில்லாத மானின் தலையுடன் மனிதர்களைப்போல இரண்டு கால்களில் எழுந்து நிற்கும் ஓர் அதிசய மிருகத்தை நாங்கள் பார்த்தோம் என்று ஆஸ்திரேலிய கண்டத்திற்கு முதலில் சென்று திரும்பிய ஐரோப்பிய கடலோடிகள் தங்கள் பார்த்த ஒரு வினோத மிருதத்தை பற்றி விவரித்தபோது, அதைக்கேட்ட மக்கள் நம்ப முடியாத வியப்புடன் கண்களை அகல விரித்தனர்.

அந்த மிருகம் ஒரு ராட்சத தவளையைப்போல தாவித்தாவி ஓடியது என்றபோது அவர்கள் முகங்களில் அப்போது தோன்றியது இகழ்ச்சி. அதற்கு வயிற்றில் இன்னொரு தலை தெரிகிறது என்று மேலும் அந்த கடலோடிகள் விவரித்தபோது ஏதோ புராண கதையில் ஒரு மிருகத்தைப் பற்றி படித்துவிட்டு கதையாக்குகிறார்கள் என்று அதை நிராகரித்தனர் ஐரோப்பிய நாட்டினர் .

இப்படி வியப்புக்கு உள்ளாக்கிய அந்த மிருகம்தான் கங்காரு. கிபி 1770 இல் ஆஸ்திரேலியா கடற்படை குழுவின் தலைவராக இருந்த கேப்டன் குக் என்பவரின் அதிகாரியான ஜான் கோரி அந்த வினோத மிருகத்தில் ஒன்றை சுட்டு வீழ்த்தி, அதன் தோலையும், மண்டையோட்டையும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அதற்கு முன்பு கங்காருவை கண்ணால் கூட பார்த்திராத தோற்பாவை கலைஞர்கள் அதற்குள் பஞ்சை திணித்து வடிவம் கொடுத்து மக்களின் பார்வைக்கு வைத்த பின்னரே அப்படி ஒரு மிருகம் இருப்பது உண்மை என்று அவர்கள் நம்பினார்கள்.

இன்றும் எல்லோரும் வியப்புடன் கங்காருவைப் பார்ப்பது அதன் வயிற்றுக்குள் இருக்கும் பையில் உள்ள குட்டியைத்தான். 

பொதுவாக கங்காருகள் ஆண் மற்றும் பெண் என்று பத்து மிருகங்கள் கொண்ட ஒரு சிறு குழுவாக வாழ்கின்றன. அதில் வயதில் மூத்த அல்லது உருவில் பெரிய கங்காருவே  மற்றவற்றின் மீது ஆளுமை செலுத்துகிறது. இந்த கங்காருவே இணை சேரவும் செய்யும். மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்ட செழிப்பற்ற வறண்ட நிலப் பகுதியில் வாழும் இந்த மிருகங்கள் குட்டிகளை ஈன்று வளர்க்கும் முறையும் வினோதமாகவே உள்ளது.

வயிற்றில் பையை உடைய ஏனைய மிருகங்களைப்போல (கோலா கரடி போன்ற சில மிருகங்களுக்கும் வயிற்றில் பை இருக்கிறது) கங்காருவின் குட்டிகள் கரு வளர்ச்சியின் மிக ஆரம்ப நிலையிலேயே அதாவது 31 முதல் 36 நாட்களுக்குள்ளாகவே பிறந்து விடுகின்றன. இந்நிலையில்  இவை இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு அவரை விதையின் அளவே இருக்கும். பார்வை இல்லாமலும், ரோமம் இல்லாமலும் வழு வழுவென்று ஒரு புழு போல தோற்றமளிக்கும்.

இதையும் படியுங்கள்:
பன நுங்குவின் மகத்துவங்கள்: ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு சுலபமான வழி!
incredible-kangaroo-pouch

இந்த சிசுக்களுக்கும் முன்னங்கால் மட்டுமே ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்ததும்  இக்கால்களால் தாயின் மேல் பற்றி ஏறி வெளியே வயிற்றில் இருக்கும் தோல் பைக்குள் சென்று அடைக்கலம் ஆகிவிடுகிறது. பைக்குள் இருக்கும் பால் காம்புகள் ஒன்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் இவை கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் உள்ளேயே இருக்கும்.

நன்கு ரோமம் வளர்ந்து முழு வளர்ச்சி அடைந்த பின்னர்தான் பையில் இருந்து வெளியே வரும். அதுவும் கொஞ்ச நேரத்துக்குத்தான். கொஞ்சம் கொஞ்சமாக இளம் குட்டிகள் வெளியே சென்று பழகினாலும் 18 மாதங்கள் வரை தாயிடம் பால் அருந்தி அதன் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

இவை தாவி பாய்ந்து ஓடும்போது பையில் இருந்த குட்டிகள் கீழே விழுந்துவிடாமல் இருக்க பையின் தசைகளை இறுக்கி அதன் வாயை சுருங்கச் செய்து தன் உடலோடு சேர்த்துக்கொள்ளும். ஆஹா, எப்படி ஒரு தாய்ப் பாசம் பாருங்களேன்.

குட்டி ஈனும் நாள் தவிர பிற நாட்கள் எல்லாம் கங்காருகள் நிரந்தர கர்ப்பமாகவே இருக்கின்றன. ஆயினும் பிறந்த குட்டி அதன் பையில் இருந்து வெளியேறும் வரை அல்லது ஒருவேளை அது இறந்து போகும் வரை கருவை வயிற்றில் வளரவிடாமல் உறைந்த நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு. மிகக் குறைவான உணவு இருக்கும் இடங்களிலும், வறட்சியான காலங்களிலும் கூட கங்காரு கருவை வளரவிடாமல் உறைய வைத்திருந்து காக்கும். போதிய புற்களை  மேயாவிட்டால் குட்டிகளுக்கு போதுமான பால் சுரக்காதே. 

பெண் கங்காரு சுரக்கும் பால்கூட குட்டியின் தேவைக்கு ஏற்ப மாறுபடும் தன்மை வாய்ந்தது. ஒரே நேரத்தில் இரு வேறு காம்புகளில் இரு வேறு வகையான பாலைச் சுரக்கும் அதிசயத்தை கங்காருவிடம் மட்டுமே காணலாம். வயிற்றுப் பையில் காம்போடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் சிசுவுக்கு கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பாலை ஒரு காம்பிலும், நன்கு வளர்ச்சி அடைந்து வெளியே வந்துவிட்ட குட்டிக்கு மாச்சத்து அதிகம் உள்ள பாலை மற்றொரு காம்பினும் இவை சுரக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
இயற்கையின் அதிசயம்: பவளப் பூச்சிகளும் நற்பவளமும்!
incredible-kangaroo-pouch

ஒரு பெண் கங்காரு ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை உருவாக்கி வளர்க்கிறது. தன் பையில் இருந்து வெளியே சென்ற பின்னரும் தன்னிடம் பால் அருந்தும் குட்டி, காம்போடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் சிசு, மற்றும் வயிற்றில் வளரும் கரு என்று இரண்டு வருட காலப்பகுதியில் மூன்று குட்டிகளை இவை உருவாக்குகின்றன.

கங்காருவின் ஆயுள் மிகவும் குறைவு. இவை உயிர் வாழும் காலம் சராசரியாக 4 முதல் ஆறு வருடங்களே. ஆயினும் இந்த இனம் அழியாமல் இருப்பதற்கு இந்த அற்புத திறன் கை கொடுக்கிறது. வித்தியாசமான உருவம் கொண்ட கங்காருவின் வாழ்வும் வினோதமானதாகத்தான் இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com