இரவின் ராணி பூவைப் பற்றி நீங்கள் அறிந்ததும்... அறியாததும்...

பிரம்ம கமலப்பூ விரைவாகப் பூத்து வாடுவது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், அந்தத் தருணத்தை அனுபவிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
brahma kamalam
brahma kamalam
Updated on

பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி (Epiphyllum oxypetalum), ‘இரவின் ராணி’ என்று அழைக்கப்படும் அபூர்வ வகை மலரானது வருடத்திற்கு ஒரு முறை மட்டும் மலரும் தாவரமாகும். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மலர்வதால் இந்த மலரை இறைவனுக்கு இணையானதாக கருதுகின்றனர். இந்த பூச்செடி யார் வீட்டில் இருக்கிறேதோ அவர்கள் வீட்டில் இறைவன் வாசம் செய்வார் என்று நம்புகின்றனர். அதுமட்டுமின்றி இந்த மலர் இரவில் மட்டுமே பூக்கக்கூடிய செடியாகும். மேலும் இது நிலவொளியில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

சூரியஒளி வருவதற்கு முன்பாக இதழ்களை மூடிக்கொள்ளும். அதாவது இரவில் பூத்து காலையில் உதிரும் அதிசய பூவாகும். இதன் மற்றொரு சிறப்பம்சம் ஒரே நேரத்தில் ஒரே செடியில் 10-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். இந்த பூ காலையில் வாடி விட்டாலும் அதன் வாசம் மட்டும் பல மணிநேரத்திற்கு அந்த இடத்தை சுற்றியே இருக்கும். இப்படி பல சிறப்புகளை கொண்ட பிரம்ம கமலப்பூ உத்ரகாண்ட், இமயமலை அடிவாரங்களில் அதிகமாக பூத்துக்குலுங்கும்.

சிவனுக்கு மிகவும் உகந்த பூவான பிரம்ம கமலப்பூ கேதார்நாத், பத்ரிநாத் போன்ற சிவாலயங்களில் பூஜைக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தெய்வீக மலராக கருதப்படும் வெள்ளை நிறம் கொண்ட பிரம்ம கமல மலர்கள் திருப்பாற்கடலில் பெருமாள் விஷ்ணு பாம்பு படுக்கையில் சயனத்திருப்பது போன்று இருப்பதால் 'அனந்தசயனம்' என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்ம கமலப்பூ விரைவாகப் பூத்து வாடுவது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், அந்தத் தருணத்தை அனுபவிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

தெய்வீக மணம் வீசும் இந்த மலரானது சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மற்ற பூக்கள் எல்லாம் செடியின் காம்பில் பூக்கும். ஆனால் இந்த அதிசய பூவாது இலையில் இருந்தே பூ பூக்கும் அதிசய தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி இரவில் பிரம்ம கமலம் பூ மலரத்தொடங்கும் போது, அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும், நாம் என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம்.

பிரம்மகமலம் என்பது பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி பிரம்ம கமல பூ மலர்ந்ததுமே இந்த பூக்களுக்கு கற்பூர ஏற்றி ஆரத்தி காட்டி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இது தூய்மை, தெய்வீகம் மற்றும் ஆன்மீக உலகங்களுக்கு இடையிலான தொடர்பைக் குறிக்கிறது.

அதுமட்டுமின்றி கிராமப்புறங்களில் பிரம்ம கமலப்பூ பூக்கும் போது கற்பூரம் காட்டி பூஜை செய்து நடனம் ஆடி, பாட்டுப்பாடி பூவினை உற்சாகமாக வரவேற்பார்கள்.

இந்த செடியை வீட்டில் வளர்த்தால் ஆரோக்கியம், தொழில் வெற்றியை அதிகரிக்கிறது மற்றும் செழிப்பை மேம்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. இதனால், பல விசுவாசிகள் தங்கள் வீட்டுத் தோட்டங்கள், படுக்கையறைகளில் இந்த செடியை அலங்கரிக்க விரும்புகிறார்கள். இந்தப் பூ வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்றாலும், வீட்டிலேயே செடியை எளிதாகப் பராமரிக்கலாம். இந்த செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்தால் போதுமானது. பிரம்ம கமலம் வசந்த காலத்தின் பிற்பகுதி முதல் கோடை காலம் வரை, இரவில் பூக்கும்.

இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி என்பதால் இதன் தண்டை வெட்டி வைத்தாலே இது வளரக்கூடிய தன்மை கொண்டது. இந்த மலர் வெண்மை நிறத்திலும், முழு நிலவைப் போலவும், மூன்று விதமான இதழ்களைக் கொண்டும் பார்க்க கொள்ளை கொள்ளும் அழகில் இருக்கும்.

இலங்கையில் இந்த மலரை ‘சொர்க்கத்தின் பூ’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

இரவு ராணி பூவை எப்படி பராமரிப்பது?

இதையும் படியுங்கள்:
பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?
brahma kamalam

கற்றாழை இனத்தை சேர்த்த பிரம்ம கமலம் செடிக்கு சூரிய ஒளி அதிகம் விழும் இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய தேவையில்லை. அதற்கு பதிலாக, சிறிதளவு சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் போதுமானது. இந்த செடிக்கு ஈரப்பதமான மற்றும் நன்கு காற்றோட்டமான மண் தேவை. இந்த செடிக்கு களிமண்ணால் ஆன தொட்டியே மிகவும் பொருத்தமானது.

இது கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் இதனால் தண்ணீரைச் சேமிக்க முடியும். எனவே, அடிக்கடி நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை. அதிகப்படியான நீர் தாவரத்தைக் கொல்லக்கூடும் என்பதால், மண் வறண்டு போவதைத் தடுக்க மட்டுமே செடிக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. செடியை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள்.

இந்த செடி பதியம் போடுவது மிகவும் எளிமையானது. அதாவது இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து மண்நிரப்பிய தொட்டியில் காம்பு மண்ணில் புதையும் படி வைத்து மணலால் மூடிய பின்னர் சிறிது மட்டும் தண்ணீர் ஊற்றி விட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்கு செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், அது வேர் விடும் வரை பொறுமையாக இருக்கவும்.

அதிலிருந்து வேர்கள் முளைப்பதை நீங்கள் கவனித்தவுடன், அதை ஒரு பெரிய தொட்டியில் மாற்றி, வழக்கமான பராமரிப்பு வழக்கத்தைத் தொடரவும்.

இதையும் படியுங்கள்:
இரவில் பூத்து, காலையில் உதிரும் தெய்வீக நறுமணம் கொண்ட பிரம்ம கமலம்!
brahma kamalam
logo
Kalki Online
kalkionline.com