
விதையின் மூலம் மரங்களை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விதைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதை எப்படி சேகரிப்பது? பதப்படுத்துவது? நடுவது என்பனவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மகரந்த சேர்க்கை மற்றும் கருவுறுதல் மூலம் உருவான விதைகளைக் கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்வது சாதாரணமாக அனைத்துத் தாவரங்களிலும் இயற்கையாக நிகழக்கூடியது. சிறிய வித்துக்களே பெரிய மரங்களாக உருவாகிறது. தரம் குறைந்த விதைகளைப் பயன்படுத்தும்போது நமக்குத் தேவையான தரமான நாற்றுகள் கிடைக்காது. அதனால் அரசு அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களிடம் இருந்து விதைகளை பெறுதல் நல்லது. எனினும், நமக்குத் தேவைப்படும் விதைகளை நாமே சேகரம் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பல்லாண்டு பயிர்களான பழ மரங்களைத் தவிர, பெரும்பாலான தாவரங்கள் விதை மூலமே பயிர் பெருக்கம் செய்யப்படுகின்றன. விதை மூலம் வளரும் செடிகள் தாய்ச்செடியை போல் இல்லாமல் வேறுபாடுகளுடன் காணப்படும். ஆனால், இம்முறையின் மூலம் பயிர்களை அதிக அளவில் விரைவில் உற்பத்தி செய்யலாம். இனக்கலப்பு செய்வதற்கு விதைகளினால் ஏற்படும் வேறுபாடு பெரிதும் பயன்படுகிறது.
விதை மூலம் உருவாகும் பயிரினப் பெருக்கத்தின் நன்மைகள்: அதிக அளவில் விரைவாக நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். புதிய ரகங்களை தேர்வு செய்யவும், வேறுபாடுகளை உருவாக்கவும் விதை இனப்பெருக்கம் தேவைப்படுகிறது. ஒட்டுக்கட்டுதல் மற்றும் மொட்டு கட்டுதலுக்குத் தேவையான வேர்க்குச்சிகளை உற்பத்தி செய்ய விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த நிலப்பரப்பில் அதிக நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். நாற்றங்காலில் நாற்றுகள் தேவையான வளர்ச்சி பெறும் வரை போதிய கவனம் செலுத்த முடியும். விலை உயர்ந்த கலப்பின விதைகளையும் சிறிய அளவிலான விதைகளையும் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் ஓரிரு நாட்கள் முன் பின்னாக நடவு மேற்கொள்ளலாம்.
விதைகளைச் சேகரித்தல்: மர விதைகளை சேகரிக்கும்போது சில குறிப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். மரங்கள் எப்போது காய்க்கும். காய் எவ்வளவு நாள் மரத்தில் இருக்கும். காய் வெடித்து சிதறுமா? போன்ற விபரங்களை தெரிந்து இருந்தால் நன்று. சில காய்களைத் தக்க தருணத்தில் பறிக்காவிடில் காய்கள் மரத்திலேயே சிதறிவிடும். எடுத்துக்காட்டாக தைலம், சவுக்கு போன்றவை மரங்களில் சில காய்கள் காற்றில் எளிதாகப் பறந்து விடும். அயிலை, ஆச்சா, ஆயா போன்றவை.
ஒருசில காய்களை மரத்தில் இருக்கும்போதே பூச்சிகள் அழித்துவிடும். வாகை, வெள்வேல் போன்றவை. ஆகவே, தக்க தருணத்தில் மர விதைகளை சேகரிப்பது அவசியம். விதைகளை சேகரிக்க தேர்ந்தெடுக்கும் மரம் நடுத்தர வயது உடையதாக இருந்தால் சேகரிக்கும் விதைகள் நல்ல முளைப்பு திறனும், வீரியமும் உள்ளவையாக இருக்கும்.
சேகரிக்கும் முறைகள்: மரத்தின் மேல் ஏறி கிளைகளை பலமாக அசைத்து காய்களை கீழே விழ வைத்து சேகரிக்கலாம். அயிலை, ஆச்சா, ஆயா, புலி போன்ற மரங்களை இவ்வாறு செய்யலாம். காய்கள் அதிகம் உள்ள கிளைகளை உடைத்து அவற்றிலிருந்து முற்றிய காய்களை சேகரிக்கலாம். தைலம், சவுக்கு போன்ற மரங்கள் இந்த வகையைச் சார்ந்தது. மரத்தின் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை சேகரிக்கலாம். வேம்பு, இலந்தை, நாவல், கடுக்காய் போன்றவை. நீண்ட கொக்கிக் குச்சியினால் காய்களை அறுத்து நேரடியாக சேகரம் செய்யலாம். சீமைக் கருவேல், இயல்வாகை, வாதநாராயணன் கொன்றை போன்றவை.
பொதுவாக, வேர் செடிகள் உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்படும் விதைகள் நன்கு பழுத்து கீழே விழுந்த பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். மா, பலா, புளி, இலந்தை, நெல்லி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.
விதைகளைப் பிரித்தல்: பழங்களை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அவற்றில் நிறைய தண்ணீர் ஊற்றி பிசைந்து சதைப்பகுதி, தோல் பகுதி ஆகியவற்றை நீக்கி வடித்த விதைகளை நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பிறகு உலர்த்திய விதைகளை விதைக்க வேண்டும். வேம்பு, நாவல் போன்றவற்றை இவ்வாறு விதைக்கலாம்.
வெடிக்கும் காய்கள்: தைலம், சவுக்கு போன்றவற்றின் விதைகளை அகலமான தட்டு அல்லது துணியில் பரப்பி வெயிலில் காய வைக்க வேண்டும். வெயிலில் காய்ந்தவுடன் காய்கள் வெடித்து கொட்டிவிடும். பின்னர் விதைகளை மட்டும் சேகரித்து காய்க் கூடுகளை பிரித்து விடலாம்.
வெடிக்காத காய்கள்: புளி, கொன்றை, வாகை, வெள்வேல், கருவேல் போன்றவற்றின் விதைகள் சில நேரங்களில் வெடிக்காது. இவற்றின் விதைகளை குச்சியால் அடித்து விதைகள் ஒடிந்து விடாதபடிக்கு பொறுமையாக எடுக்க வேண்டும். மேலும், இவற்றின் விதைகளை ஓரிரு நாட்கள் மிதமான வெயிலில் காய வைத்து அவற்றின் ஈரப்பதம் எட்டு பத்து சதவீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுருங்கிய, உடைந்த, பூச்சி மற்றும் பூஞ்சாணம் தாக்கிய விதைகளைப் பிரித்து எடுத்துவிட வேண்டும்.
விதைகளை சேமித்தல்: நன்கு முதிர்ந்த மற்றும் உலர்ந்த விதைகளே சேமிக்க ஏற்றவை. சேமிக்கப்படும் விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இல்லாததுடன் வீரியமும், முளைப்புத் திறன் உடையதாக இருக்க வேண்டும். பி.எச்.சி 50 சதம் நனையும் தூளையும் திறம் பவுடரையும் முறையே கிலோவிற்கு இரண்டு கிராம் வீதம் விதையுடன் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்த விதைகள் குறுகிய கால சேமிப்பாக இருந்தால் காடா துணிப்பையில் சேமிக்கலாம். நீண்ட கால சேமிப்பாக இருந்தால் விதைகளை 700 கேஜ் கனம் உள்ள பாலித்தீன் பைகளில் அடைத்து வெப்பம் குறைவான அறைகளில் சேமிக்க வேண்டும்.