கடை இஞ்சியைத் தொட்டியில் வளர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

கடையில் வாங்கிய இஞ்சியைத் தொட்டியில் வளர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் மற்றும் அறுவடை குறிப்புகள்!
இஞ்சி | ginger cultivation
இஞ்சி | ginger cultivationImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

கடையில் வாங்கிய இஞ்சியைத் தொட்டியில் நட்டு முளைக்க வைப்பது, பராமரிப்பது மற்றும் 3 முதல் 10 மாதங்களில் அறுவடை செய்வது குறித்த முழுமையான வழிகாட்டி.

கடையில் வாங்கிய இஞ்சியைத் தொட்டியில் நட்டால் நிச்சயமாக முளைக்கும். ஆனால் எல்லா இஞ்சியும் உடனே தளிர் விடுவதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் இஞ்சியின் தரம், அதிலுள்ள கணுக்கள் மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்தே முளைப்புத் திறன் அமையும். கடையில் சமையலுக்கு வாங்கிய இஞ்சியை எவ்வாறு நட்டு வளர்ப்பது, அதன் வளர்ப்பு முறைகள் மற்றும் அறுவடை காலம் வரை தெளிவாக இங்கே காணலாம்.

இதையும் படியுங்கள்:
20 நாட்களில் கைநிறைய வெந்தயக் கீரை: வீட்டிலேயே வளர்க்கும் எளிய முறை!
இஞ்சி | ginger cultivation

1. நல்ல விதை இஞ்சியைத் தேர்ந்தெடுக்கவும்:

கடையில் வாங்கும் இஞ்சியில் சிலவற்றிற்கு முளைப்புத் தடுப்பு மருந்துகள் தெளிக்கப் பட்டிருக்கும். அல்லது குளிர்பதனப் பெட்டியில் வைத்து அதிகமாக உலர்ந்திருக்கலாம். எனவே அத்தகைய இஞ்சியைத் தவிர்த்து விட்டு இஞ்சிக் கிழங்கின் கணுப் பகுதிகளில் சிறிய பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிற முளைக் குருத்துகள் இருப்பது போலத் தெரிந்தால் அவை மிகச் சிறந்ததாக இருக்கும். சுருங்கிய, அழுகிய அல்லது பூஞ்சை பிடித்த இஞ்சியை அகற்றவும். கனமான, உறுதியான கிழங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு பெரிய இஞ்சியைக் குறைந்தது 2 முதல் 3 கணுக்கள் இருக்குமாறு 1.5 முதல் 2 அங்குல நீளத்தில் துண்டுகளாக வெட்டவும். வெட்டிய துண்டுகள் சுமார் 12 முதல் 24 மணி நேரம் காற்றில் உலர்த்திய பின் நடுவது அழுகலைத் தடுக்கும்.

இஞ்சி | ginger cultivation
இஞ்சி | ginger cultivationImage credit: Gemini AI

2. தொட்டி மற்றும் மண் கலவை தயாரிப்பு:

இஞ்சி மண்ணிற்கு அடியில் பக்கவாட்டில் பரவி வளரும் ரைஸோம் (rhizome) வகைத் தாவரமாகும். எனவே ஆழத்தை விட அகலமான தொட்டி மிகவும் ஏற்றது. (குறைந்தது 12 முதல் 15 அங்குல அகலம், 8 முதல் 10 அங்குல ஆழம்). தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் வெளியேறத் துளைகள் இருக்க வேண்டும்.

நல்ல செம்மண் அல்லது தோட்டத்து மண் (40%), நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் (40%), மற்றும் மணல் அல்லது தேங்காய் நார் (20%) ஆகியவற்றைக் கலக்கவும். இது மண்ணை இலகுவாக, வளமானதாகவும் வைத்திருக்கும்.

3. நடவு மற்றும் பராமரிப்பு முறைகள்:

மண்ணில் சுமார் 1.5 முதல் 2 அங்குல ஆழத்தில் குழித் தோண்டி, முளைக் கணுக்கள் மேல்நோக்கி இருக்குமாறு இஞ்சித் துண்டுகளை வைத்து லேசாக மண்ணால் மூடவும்.

மண் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்; ஆனால் சேறாகவோ தண்ணீர் தேங்கியோ இருக்கக் கூடாது. வாரத்திற்கு 2 முதல் 3 முறை மிதமாகத் தண்ணீர் ஊற்றவும். இஞ்சிக்கு லேசான நிழல் அல்லது பகுதி நேர சூரிய ஒளி போதுமானது. கடும் கோடை வெயில் நேரடியாகப் பட்டால் இலைகள் கருக வாய்ப்புள்ளது. மண்ணின் மேற்பரப்பில் காய்ந்த இலைகள் அல்லது வைக்கோலைப் பரப்பி வைத்தால் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். களைச் செடிகள் முளைப்பதும் தடுக்கப் படும். முளைத்து வெளியில் தெரிய 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம்.

4. அறுவடைக் காலம் மற்றும் அறுவடை முறை:

இஞ்சியின் அறுவடைக் காலம் நாம் விதைத்த இஞ்சியின் வகையைப் பொறுத்து மாறுபடும். இளம் இஞ்சியாக இருந்தால் நட்ட 3 முதல் 4 மாதங்களில் எடுக்கலாம். இதன் தோல் மிக மெல்லியதாகவும், காரம் குறைவாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். ஊறுகாய், தேநீர் மற்றும் சமையலுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பாம்புகள் அலறியடித்து ஓடும்! குளிர்காலத்தில் உங்கள் வீட்டை பாதுகாக்க 10 முக்கிய வழிகள்!
இஞ்சி | ginger cultivation

முதிர்ந்த இஞ்சியாக இருந்தால் நட்டு 8 முதல் 10 மாதங்களில் முழுமையாக முதிர்ச்சி அடையும். இலைகள் மஞ்சளாகி காய்ந்து விழத் தொடங்குவது அறுவடைக்கான அறிகுறியாகும். இதன் தோல் தடிமனாகவும், காரம் அதிகமாகவும் இருக்கும்; நீண்ட நாள் சேமித்து வைக்கவும் ஏற்றது.

அறுவடை செய்யும் போது தொட்டியைச் சாய்த்தோ அல்லது மண்ணைக் கவனமாகக் கிளறியோ கிழங்குகளை உடையாமல் எடுக்கவும். முழுத் தொட்டியையும் பறிக்காமல், ஓரத்தில் உள்ள கிழங்குகளை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு மீதியைத் தொடர்ந்து வளர விடலாம். அதனால் தொடர்ச்சியாக பலனை அடையலாம்.

உங்கள் வீட்டு மாடி அல்லது பால்கனியிலேயே ரசாயனமில்லாத புதிய இஞ்சியைத் தொடர்ச்சியாக அறுவடை செய்து, சமையல் மற்றும் தேநீருக்கு எப்போதும் மணமும் சுவையும் மிக்க இஞ்சியைப் பயன்படுத்தும் தன்னிறைவைப் பெறுவீர்கள்.