20 நாட்களில் கைநிறைய வெந்தயக் கீரை: வீட்டிலேயே வளர்க்கும் எளிய முறை!

பால்கனி அல்லது மொட்டை மாடியில் தொட்டியில் வெந்தயக் கீரை வளர்ப்பது எப்படி? மண் கலவை, பராமரிப்பு மற்றும் அறுவடை செய்யும் எளிய வழிகள்.
வெந்தயக் கீரை | fenugreek farming in pots
வெந்தயக் கீரை | fenugreek farming in potsImage credit: Chatgpt
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

கடைகளில் வாங்கும் கீரைகளில் இரசாயன நச்சுகள் இருக்குமோ என்ற கவலை உங்களுக்குள்ளதா? இனி அந்தக் கவலை வேண்டாம்! உங்கள் வீட்டுப் பால்கனி அல்லது மொட்டை மாடியில் ஒரு சிறிய தொட்டியும் கொஞ்சம் மண்ணும் இருந்தால் போதும்; வெறும் 20 நாட்களில் பச்சைப் பசேலென மணம் வீசும் வெந்தயக் கீரையை நீங்களே அறுவடை செய்யலாம். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பொதுவாக மலிவாகவும் பரவலாகவும் எப்போதும் கிடைக்கும் கீரை வகைகள் உடல் நலனைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில கீரைகளை நாம் நம் வீடுகளில் வளர்த்து பயன்பெறலாம். இவற்றில் விரைவாக வளரக்கூடிய வெந்தயக் கீரையை பெரும்பாலும் தொட்டிகளில் வளர்க்க ஆசைப்படுவார்கள். இங்கு வெந்தயக்கீரை வளர்ப்பு பராமரிப்பு போன்ற பல தகவல்களை காண்போம்.

முதலில் வெந்தயக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று காண்போம்..

வெந்தயக் கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக, ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவும் இரும்புச்சத்து, செரிமானத்தை சீராக்கும் நார்ச்சத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் சி, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

இவ்வளவு நன்மைகள் தரும் கீரையை நம் கைப்பட வளர்த்தால்? ஆம். வீடுகளில் ஒரு சிறிய தொட்டியில் விதைத்த வெந்தயம் சில நாட்களிலேயே பசுமையாக வளர்ந்து நிற்பதைப் பார்ப்பதே தனி மகிழ்ச்சி. வீட்டில் நாம் வளர்த்த கீரையைப் பறித்து சாம்பார், கூட்டு, பொரியல் எனச் சமைக்கும்போது அதன் மகிழ்ச்சி இன்னும் அதிகம். சிறிய இடத்தில் பெரிய மகிழ்ச்சி தரும் இந்த கீரை வளர்ப்பு.

வீட்டில் சிறிய பால்கனி அல்லது மொட்டை மாடியில் சிறு இடம் இருந்தாலே போதும். கடைகளில் வாங்கும் வெந்தயக் கீரையைவிட, நம் வீட்டிலேயே இயற்கையான எளிய முறையில் வெந்தயக் கீரையை வளர்த்து அறுவடை செய்து சமைக்கலாம். அதிக இடம் தேவையில்லை; பெரிய அனுபவமும் தேவையில்லை. ஒரு சிறிய தொட்டி, கொஞ்சம் மண், வெந்தய விதைகள் இருந்தால் போதும்.

வெந்தயக் கீரை விரைவாக வளரக்கூடியது என்பதால், புதிதாகத் தோட்டம் அமைப்பவர்களுக்குக்கூட இது சிறந்த தேர்வாக இருக்கும்.

வெந்தயக் கீரை வளர்ப்புமுறை இதுதான்..

தேவையான பொருட்கள்:

  • 6–8 அங்குல ஆழமுள்ள அகலமான தொட்டி. நல்ல வடிகால் வசதியுள்ள மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி.

  • செம்மண் அல்லது தோட்டத்து மண்.

  • இயற்கை உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரம்.

  • சமையலுக்குப் பயன்படுத்தும் முழு ஆரோக்கியமான வெந்தய விதைகள்.

  • குறிப்பாக தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கொத்தமல்லி விதை முளைக்கவில்லையா? இந்த ஒரு ட்ரிக்ஸ் போதும்!
வெந்தயக் கீரை | fenugreek farming in pots

மண் கலவை தயாரிக்கும் முறை இதுதான்..

வெந்தயக் கீரை நன்றாக வளர மண் இலகுவாகவும், அதிக நீர் தேங்காமலும் இருக்க வேண்டும்.

ஒரு தொட்டிக்குத் தேவையான மண் கலவை விகிதம்..

40% செம்மண் அல்லது தோட்டத்து மண்.

30% மண்புழு உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரம்.

30% தேங்காய் நார் கழிவு (Cocopeat).

இந்த மூன்றையும் நன்றாகக் கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும்.

வெந்தய விதைகளை நேரடியாகவும் விதைக்கலாம். எனினும் விதைகளை நடுவதற்கு முன் இதை செய்தால் விரைவாக முளைக்கும்.

தேவையான அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்தமான நீரில் 6 லிருந்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி விதைகளை எடுக்கவும்.. இந்த விதைகளை ஈரமான துணியில் கட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக விதைக்கலாம்.

விதை தயார்..

அடுத்து தொட்டியில் விதை நடுவது எப்படி எனப் பார்ப்போம்..

தொட்டியில் மண் கலவையை நிரப்பி மண்ணின் மேற்பரப்பில் விதைகளைச் சீராகத் தூவ வேண்டும்.

விதைகள் ஒன்றோடொன்று அடைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

வெந்தயக் கீரை  | fenugreek farming in pots
வெந்தயக் கீரை | fenugreek farming in potsImage credit: Gemini AI

மேலே அரை அங்குலம் அளவுக்கு மண் அல்லது கோகோபீட் தூவுங்கள். ஸ்பிரே வாளியால் மெதுவாகத் தண்ணீர் தெளியுங்கள். இதிலும் விதைகளை அதிக ஆழத்தில் புதைத்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

இப்போது வெந்தயக் கீரை பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்..

தினமும் மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துத் தண்ணீர் தெளிக்கவும். மண் காய்ந்திருந்தால் மட்டுமே தண்ணீர் ஊற்றுங்கள். அதிகப்படியான தண்ணீர் ஊற்றினால் விதைகள் அழுகிவிடும் என்பதால் கவனம் தேவை.

தினமும் 3–5 மணி நேரம் சூரிய ஒளியில் நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவும். குறிப்பாக மிதமான காலை நேர வெயில் சிறந்தது.

விதைத்த மண்ணில் ஏற்கெனவே உரம் சேர்த்திருந்தால், குறுகிய காலப் பயிரான வெந்தயக் கீரைக்கு அடிக்கடி உரம் போட வேண்டியதில்லை. அதனுடன் தேவையற்ற செடிகள் முளைத்தால் அவற்றை உடனே அகற்றிவிடுங்கள்.

எத்தனை நாட்களில் வெந்தயக் கீரை அறுவடை செய்யலாம் தெரியுமா?

வெந்தயக் கீரை விதைத்தவுடன் பொதுவாக 2 லிருந்து 4 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.

5 லிருந்து 7 நாட்களில் சின்ன சின்ன இலைகள் தோன்றும். 10லிருந்து 15 நாட்களுக்குள் செடிகள் நன்றாக வளரும்.

20 லிருந்து 30 நாட்களில் நன்கு வளர்ந்த கீரையை அறுவடை செய்யலாம். ஆனால் கீரையின் வளர்ச்சியைப் பொறுத்து அறுவடை நாட்கள் மாறுபடலாம்.

வெந்தயக் கீரை வளர்க்கும்போது இந்த 5 தவறுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிகமாகத் தண்ணீர் ஊற்றுவதால் வேர்கள் அழுகி செடிகள் பாதிக்கப்படலாம்.

விதைகளை அதிக ஆழத்தில் நடுவதால் முளைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

அதிக நெருக்கமாக விதைப்பது தவறு. காரணம் செடிகள் வளர போதிய இடமின்றி வளர்ச்சி குன்றலாம்.

வெயிலே இல்லாத இடத்தில் வைப்பதால் செடிகள் உயரமாக வளர்ந்தாலும் பலவீனமாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தக்காளிச் செடியில் பூக்கள் கொத்து கொத்தாய் உதிர்கிறதா? காய் பிடிக்க 4 எளிய வழிகள்!
வெந்தயக் கீரை | fenugreek farming in pots

அதிக உரம் போடுவது கூடாது. இதனால் தேவையற்ற இலை வளர்ச்சியும் மண் சமநிலை பாதிப்பும் ஏற்படலாம்.

மேலும் கவனத்தில் கொள்ள ஒரு டிப்ஸ் - ஒரே நேரத்தில் எல்லா விதைகளையும் விதைக்காமல், 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று தொட்டிகளில் விதைத்தால் தொடர்ந்து வீட்டிற்குத் தேவையான புதிய வெந்தயக் கீரையை அறுவடை செய்யலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், தினசரி சமையலுக்குத் தேவையான புதிய கீரையை வீட்டிலேயே பறித்து உபயோகிப்பதன் மூலம், உணவு வகைகளின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உறுதிப்படுத்தலாம்.