பனிக்கால துளசி பராமரிப்பு: இனி ரொம்பவே ஈஸி!
குளிர் நிறைந்த உறைபனி காலத்தில் செடிகளை முறையாக பராமரிக்கவில்லை எனில், அவை பட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டியது அவசியம். வீட்டில் பலரும் செடிகளை வளர்த்து வந்தாலும், பெரும்பாலானோர் துளசி செடியை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இறை வழிபாட்டிலும், மூலிகை மருத்துவத்திலும் துளசி செடி முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் துளசி செடியை பனியில் இருந்து பாதுகாக்க ஒருசில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது.
1. போதுமான சூரிய ஒளி:
துளசி செடி சூரிய ஒளியில் நன்றாக செழித்து வளரும் தன்மை கொண்டது. ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை, சூரிய ஒளியில் இருந்தால் துளசி செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குளிர்காலத்தில் வெப்பத்தின் தன்மை குறைவாகவே இருக்கும் என்பதால், போதிய சூரிய ஒளி கிடைக்காமல் போகலாம். இம்மாதிரியான நேரங்களில் செயற்கை ஒளியைப் பயன்படுத்துவது பனியில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
2. கவாத்து செய்வதைக் குறைக்கவும்:
தேவையற்ற இலைகளை கத்தரிப்பதன் மூலம், செடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். ஆனால் பனிக் காலங்களில் கத்தரித்தலைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கத்தரித்தல் மூலமாக உருவாகும் புதிய இலைகள் அதிக குளிரில் பட்டுப்போக வாய்ப்புள்ளது. மேலும் இது செடியின் மற்ற பாகங்களை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
3. குறைவான நீர்ப்பாசனம்:
பனிக் காலத்தில் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கும் என்பதால், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீர்ப்பாசனம் செய்வதற்கு முன்பு, மேல் மண் காய்ந்துள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்வது அவசியம்.
4. தழைக்கூளம் அமைத்தல்:
பனித் துளிகள் செடியின் வேர் வரை சென்றடைவதைத் தவிர்க்க வைக்கோல், தேங்காய் நார் மற்றும் காய்ந்த இலைகளைக் கொண்டு தழைக்கூளம் அமைக்கலாம். இதன்மூலம் மண்ணின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதோடு, பனியில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை வேப்ப இலைப் பொடியை மண்ணில் தூவி விடுவது, துளசி செடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
5. மண்ணை மாற்றுதல்:
ஒருவேளை குளிர் காலத்தில் துளசி செடி காய்ந்து போனால், உடனடியாக மண்ணை மாற்றி விடுங்கள். மண்ணில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் செடிகள் காயந்து போகக் கூடும். புதிய மண்ணில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருக்கும் என்பதால், செடிகள் மீண்டும் வளரத் தொடங்கும்.
6. இரவு நேரப் பாதுகாப்பு:
துளசி செடி உறைபனி மற்றும் குளிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கொண்டது. ஆகையால், குளிரான இரவு நேரங்களில் துளசி செடிகளை வீட்டிற்குள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் தொட்டியில் வளர்த்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஒருவேளை துளசி செடியை பயிராகவோ அல்லது தோட்டத்திலோ வளர்த்தால், இரவு நேரங்களில் தார்ப் பாயால் மூடி பாதுகாக்கலாம்.
பனிக்காலத்தில் பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தாலும், செடியின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உங்கள் இருப்பிடத்தின் தட்ப வெப்பநிலை மற்றும் துளசி செடியின் வகை ஆகியவற்றைப் பொறுத்தே பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை (Horticulture Department) அதிகாரிகளை அணுகலாம்.

